
லதா காலையிலிருந்து ஒரே பரபரப்பு.
தென்காசியிலிருந்து மாமியார் வரப்போகிறார் என்பதால் சற்று கூட ஓயாது வேலை.
நேற்று இரவே துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டுத் தோய்த்து
மொட்டை மாடியில் காயப் போட்டு விட்டாள்.
லதாவின் இரண்டு செட், கணவன் குமாரின் இரண்டு செட், மகன் தீபக்கின் மூன்று செட் துணிகள் ஒரு லோட் சரியா போச்சு.
குமார் அம்மாவைக் கூட்டி வர எக்மோர் ஸ்டேஷன் போய்த் திரும்பி வரும் நேரம்.அதுக்குள்ளே வீட்டைச் சரி பண்ணி வைக்கவில்லை என்றால் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. அவள் கவலை அது.
ஒர்க் from ஹோம் என்பதால் சில சிக்கல்களில் இதுவும் ஒன்று.
வீட்டில் எல்லாம் போட்டா போட்டபடி.
கதவைச் சாத்திக்கொண்டு மானிட்டர் முன் ஹெட் போன் மாட்டிக் கொண்டு உட்கார்ந்தா வீட்டு அல்லது வெளி விவகாரம் எதுவும் தெரிவதில்லை.
காயப்போட்ட துணிகளை எடுத்து மடிக்க மாடி படிகளைத் தாவி ஏறினவள் கண்ட காட்சியால்
பயத்தில் நடுங்கினாள்.
பெரிய ,நீண்ட வாலை ஆட்டிக் கொண்டு ஒவ்வொரு துணியாக எடுத்து மடித்து பாரபேட் சுவர்மீது
வைத்துக் கொண்டிருந்த குரங்கைக் கண் முழி பிதுங்கப் பார்த்து “ராமா”என்று அலறினாள் லதா.
சடக்கென்று திரும்பிய குரங்கு
முக மூடியை அகற்ற லதாவுக்கு ஆச்சரியம்.”டேய் தீபக், இங்கே ஏண்டா இந்த வேஷம்?
அம்மா பயந்து போயிட்டேன்!”
வாலை சுருட்டி வைத்துவிட்டு அம்மாவைக் கட்டிக்கொண்டு,”அம்மா,நீ காலையிலிருந்து ஒரே டென்ஷன் லே இருந்தே.
பாட்டி வருவதற்குள் உனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் என்று துணி எடுக்க வந்தேன்.
பார்த்தா குரங்கு பட்டாளம் அங்கும் இங்குமா தாவி விளையாடிக் கொண்டிருந்தது.
ஸ்கூல் டிராமா போட்டிக்கு எனக்குக் குரங்கு டிரஸ் குடுத்துவிட்டது ஞாபகம் வரவே மாட்டின்ட்டு வந்தேன்.
குரங்கு எல்லாம் ஓடியே போயிடுத்து அம்மா”என்றான் ஜாலியா தீபக் .
“சரிடா. நல்ல பையன் போ!”என்று தட்டி கொடுத்தாள்.
கார் சத்தம் கேட்கவே “அம்மா, பாட்டி வந்தாச்சு, நான் குரங்கு டிரஸ் போட்டுண்டு கீழே வரேன்.நீ ஒன்றும் சொல்லிடாதே.
பாட்டிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்போம்”
என்று ஓடினான் .
