நாபா.மீரா/ஓய்வு

ஏண்டி அன்னம், ஏன் உம்முகம் ரொம்பச் சோர்வாத் தெரியுது, கேட்ட வீரம்மாவுக்கு பதில் சொல்லாமல் தன்னிச்சையாக நிமிர்ந்தும், மடிந்தும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் கடல் அலைகளை வெறித்தபடி நின்றிருந்தாள் அன்னக்கொடி.
அடுத்த மாசம் நமக்குப் பணி ஓய்வு. அதுக்கப்புறம் இப்படி தெனமும் பார்க்க முடியுமான்னு வெசனப்படுறாளோ என்னமோ வீரா… அருகிலிருந்த செல்வி சொன்னாள். அதற்கும் வினையாற்றாமல் நின்ற அன்னக்கொடியை உலுக்கினாள் வீரம்மாள்.
மூவரும் துப்புரவுத் தொழிலாளர்கள். பணி தாண்டி நெருங்கிய தோழிகள். மூவருமே கணவன்மாரை சில வருடங்களுக்கு முன் இழந்தவர்கள்.
கடற்கரையின் குளிர்ந்த காற்றுக்கும் மீறி முகம் வியர்க்க வீரம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள் அன்னக்கொடி.
ஓய்வுகாலத்த கோவில்குளம் போய்க் கழிக்கலாமின்னு நெனைச்சா பசங்க ரெண்டு பேரும் என்னோட ஓய்வுப் பணத்தை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக்கத் திட்டம் போடுறாங்க வீரா…
என் நெலைமையும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் அன்னம், என் பொண்ணுங்க
தங்களோட கஷ்டத்தைச் சொல்லிப் பணம் கேட்டு நச்சரிக்குதுங்க.
ரெண்டு பேரும் புலம்பறதை நிப்பாட்டுங்க மொதல்ல. நா உங்க பிரச்சினைக்கு ஒரு வழி வச்சிருக்கேன் தன் திட்டத்தை விவரித்தாள் வீரம்மாள், அவளுக்குப் பிள்ளை குட்டிகள் இல்லை.
சில மாதங்களுக்குப் பிறகு…
‘அஞ்சலை முதியோர் உறைவிடம்’, ஓரளவுக்கு அரசு ஊதியம் பெறும் அஞ்சலை வசதியில் குறைந்தவர்களுக்காக ஏற்று நடத்தும் உறைவிடத்தில் சேர்ந்திருந்த தோழிகள் மூவரும் சுற்றுலா செல்லத் தயாராகினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன