
சுகன்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது . அலுவலகத்தில் ஆடிட்டிங் நேரம் அது. அதிக வேலைகள் . வீட்டிலோ பாவம் ஸ்வேதா குட்டிக்கு உடம்பு சரியில்லை .
உதவிக்கு யாரும் ஆள் இல்லாமல் தவித்துத் தான் போனாள் .குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லை என்றாலே அன்னைக்குத்தான் அதிக சிரமம் .
இரவு முழுவதும் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் , இவளும் தூங்காமல் குழந்தையுடனேயே , சமாதானம் செய்தபடி இருந்தாள் .
குழந்தை, “அம்மா கிட்டே , அம்மா கிட்டே “, என்று சொல்லிக் கொண்டே இவளிடமே ஒண்டிக் கொண்டது நல்ல சாக்காகிப் போனது இவள் கணவன் ஸ்ரீகாந்த்துக்கு .
“என் கிட்டே வர மாட்டேங்கிறா “, என்று சொல்லி, இவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் , சாவதானமாக அவன் போக்கில் இருந்தான் .
இவள்தான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து விட்டு , இதோ மருத்துமனைக்கு வந்திருக்கிறாள் .
குழந்தையும் எதுவும் சாப்பிடவில்லை . இவளுக்கும் குழந்தைக்கு முடியாததால் எதுவும் சாப்பிட மனமில்லை .துறுதுறுவென்று சிரித்திருக்கும் குழந்தை , பலவீனமாய் இருந்ததைப் பார்க்க முடியாமல் , நொந்து போனாள் .
நகரின் நடுப் பகுதியில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனை அது.ஏற்கெனவே போனில் appointment வாங்கி இருந்தாலும் , அங்கு டாக்டரே இன்னும் வராததால் அதிக கும்பல் !
எல்லோரும் மேல் தட்டு மக்கள் என்பதால் , கையில் மொபைலுடனும் , நுனி நாக்கில் ஆங்கிலத்துடன் இங்குமங்கும் சென்று கொண்டும், வரவேற்பாளினியைப் பார்த்து , “டாக்டர் வந்து விடுவாரா ?” என்று அவ்வப்போது விசாரித்துக் கொண்டும் இருந்தனர் .
சிலர் இந்தியாவில்தான் இப்படியென்றும் வெளி நாடுகளில் டாக்டர்கள் சொன்ன நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறிக் கொண்டிருந்தனர் .
நகரத்துப் பகட்டும், பணக்காரத்தனமும் அந்த இடத்தில் விரவியிருந்தன. .
இதில் குழந்தை நல சிறப்பு மருத்துவமனை என்பதால் , சில நடுத்தர வர்க்க மக்களுமே அங்கு வந்திருந்தனர் .
அதிகக் கட்டணம் என்றால் , தரம் வாய்ந்த சிகிச்சையாய் இருக்கும் என்ற நம்பிக்கை !
அழுது அனத்திக் கொண்டிருந்த குழந்தை , களைப்படைந்து தூங்க ஆரம்பித்து விட்டது .
அலைபேசி அலறியது .
இவள் கணவன்தான் .
“என்ன டிஸைட் பண்ணினே ?”
ஓ ! நேற்று இரவு நடந்த விவாதத்தின் தொடர்ச்சி !ஒன்றுமில்லை .குழந்தைக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போவதால் இவள் , வழக்கமாக விட்டுச் செல்லும் காப்பகத்தில் விட்டுச் செல்ல விரும்பவில்லை .
அவனோ , இவள் அம்மாவை அழைத்து , இங்கு வந்து தங்கச் சொல்லிக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்றான் .
ஆனால் இவள் வீட்டில் இவள் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதால் , அவள் அம்மா இவள் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் !
மேலும் , தங்கை வேலைக்குப் போவதால் , இவள் அப்பாவிற்கு வேளைக்குச் சமையல் செய்து தர முடியாது . இது போன்ற காரணங்களால் இவள் அம்மாவை இங்கு வரவழைக்க விரும்பவில்லை .அதனால் , இவள் வேலையை ராஜினாமா செய்ய எண்ணினாள் .
‘வீட்டுக் கடன் , மற்றக் கடன்கள் இருப்பதால் , இவள் வேலையைவிடக் கூடாது ,’ என்பது அவன் தரப்பு வாதம் .
நேற்று இரவு நடந்த விவாதம் இப்போதும் தொடர்ந்தது .
கொஞ்சம் சத்தமாகப் பேசி விட்டாள் போலும் . எல்லோரும் இவளைப் பார்த்தது போல் இருந்தது .
பிறகு பேசுவதாகச் சொல்லி விட்டுப் போனை வைத்தாள் .அப்பொழுதுதான் சுற்றி உள்ளவர்களைப் பார்த்தாள் சுகன்யா .
டாக்டரைப் பார்க்க வந்திருந்தாலும் , பவுடரும் , மையும், லிப்ஸ்டிக்குமாக மக்கள் !
தான் மட்டும் கலைந்த கேசமும், ஏனோ , தானோவென்று கட்டப்பட்ட புடவையுமாய் அந்தச் சூழலுக்குப் பொருந்தாமல் இருப்பதாகத் தோன்றியது .
டாக்டர் வருவதாகத் தெரியவில்லை . இவள் அருகில் இருந்த ஒரு பெண் ஆங்கிலத்தில் ,”அப்பாயின்ட்மென்ட் கொடுத்து விட்டு , ஏன் வராமல் இருக்கிறார் டாக்டர் ?” என்றாள் .
“ஏதாவது அவசர வேலையாக இருக்குமோ ?” என்றாள் இவள் ஆங்கிலத்தில் .
“நீங்கள் வேறு ? இதே டாக்டர் நகரின் வேறு இடத்திலும் கிளினிக் வைத்திருக்கிறாராம் . அங்கும் கூட்டம் ! அங்கு முடித்து விட்டுத்தான் இங்கு வருவாராம் “, என்றாள் அவள் .
இருவரும் பேசிய சொற்ப நேரத்தில், உலக அரசியல், திரையுலக நடைமுறை போன்ற பல விஷயங்கள் இருவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ளப் பட்டன.திடீரென்று அவளுக்கு வந்த அலைபேசி அழைப்பால் உரையாடலை நிறுத்தி விட்டு, சற்றுத் தள்ளிச் சென்றாள்.
அப்போதுதான் அந்தப் பெண் இவள் அருகில் வந்தாள்.”அக்கா ! என்னைத் தெரியவில்லையா ? நானும் நீங்கள் இருக்கற அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன்”, என்றாள்.
அவள் பேசிய விதமும், உயரே தூக்கிக் கட்டியிருந்த புடவையும், கருத்த முகத்தில் மஞ்சள் பூசி இருந்ததால், ஒரு விநோதமான பச்சை நிறமாக விளங்கிய அவள் முகமும் கிராமியத் தனமாக இருந்தன.
சுகன்யாவை விடப் பெரியவள்.மரியாதை கருதி ,’அக்கா’, என்று அழைத்தாள் போலும்.
அவர்கள் அப்பார்ட்மெண்ட்டில் கிட்டத்தட்ட முந்நூறு குடியிருப்புகள்.நிறையப் பேரைச் சுகன்யாவுக்குத் தெரியாது.
அலுவலகம், வீடு என்று உழல்வதில் யாரிடமும் பழக நேரமில்லை.வாய்ப்பில்லை.
என்றோ பார்க்கும் இரண்டொருவரைக் கண்டு புன்னகை புரிவதோடு சரி.இவளைப் பார்த்த ஞாபகமில்லை.மேலும் அவள் தோற்றத்தில் இருந்த பாமரத்தனம் பிடிக்காமல், சுற்றும்முற்றும் பார்த்து விட்டு அமைதியானாள் சுகன்யா.
மெல்லிய ஒரு முறுவல் மட்டுமே அந்தப் பாமரப் பெண்ணுக்குப் பதிலானது..தன் பெயரை , “ செல்வி”, என்று அறிமுகம் செய்து கொண்ட அவள் , சற்றுத் தள்ளித் தன் உடன் வந்தவர்களுடன் சென்று நின்று கொண்டாள்.
சுகன்யாவின் குழந்தையோ திடீரென வீறிட்டு அழுதது.கைக்கு அடங்காமல் கதறியது.தோளில் சாய்த்துப் போட்டு, சமாதானம் செய்ய முயன்றாள்.ஏதோ விளையாட்டு காட்டினாள்.ஊஹூம்…அழுகை நின்ற பாடில்லை.
அந்தப் பெண் செல்வி, உடன் ஓடி வந்தாள்.
சுற்றுச்சூழலைப் பற்றிக் கண்டு கொள்ளாமல், ‘ரே…ரே…ரே…’, யென்று குரல் எழுப்பக் குழந்தை அவள் முகத்தையே பார்த்தபடி அழுகையை நிறுத்தியது. குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள் அவள்.
சுகன்யா, பால் பவுடரை ஃபிளாஸ்க் வெந்நீரில் கலந்து, செல்வியின் உதவியுடன் குழந்தைக்குப் பால் புகட்டினாள்.
சற்று நேரம் செல்வி விளையாட்டு காண்பித்துக் கொண்டிருக்க, அமைதியாக இருந்த குழந்தை, மீண்டும் அழ ஆரம்பித்தது.
சுகன்யா , சமாதானம் செய்யும் விதமாகக் குழந்தையைத் தோளில் சாய்த்து வைத்துக் கொள்ள, அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
தன்னையும் அறியாமல் சுகன்யா குழந்தையின் வயிற்றை அமுக்கி விட்டாள் போலும்.
குழந்தை ஓங்கரித்து வாந்தி எடுத்தது.ஏற்கெனவே அஜீரணத்தால் சிரமப்பட்ட குழந்தை, வாந்தி எடுத்தது அந்த இடத்தில் துர்நாற்றத்தை ஏற்படுத்தியது.
ரிசப்ஷன் பெண்மணி ஓடிவந்து,” என்ன இது மேடம், பெரிய டாக்டர் வரும் நேரம்…பார்த்தால் திட்டுவார் ‘, என்றாள் ஆங்கிலத்தில்.
சுகன்யாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற, அவமானத்தில் முகம் சிவந்து போனாள். சுற்றியுள்ளோர் எல்லோர் பார்வையிலும் ஒரு எள்ளல் தெரிந்தது.சிலர் முகத்தைச் சுளித்துக் கொண்டனர்.
புடவையைச் சொருகிக் கொண்ட செல்வி, அங்கிருந்த ஓய்வறைக்குச் சென்று, லைசால் எடுத்து வந்து நிமிடங்களில் அந்த இடத்தைத் தூய்மை செய்தாள்.
சுகன்யா , அவளை நன்றியுடன் பார்த்தாள்
.டாக்டரிடம் காண்பித்துச் சென்றதில் குழந்தைக்குக் கொஞ்சம் பரவாயில்லை.
சாயங்காலம் சற்று ரிலாக்ஸாக டின்னர் தயாரித்து முடித்து அமர்ந்திருக்கும்போது அழைப்பு மணி அலறியது.
“ஹாய் செல்வி! வாங்க வாங்க “.
“அக்கா உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா ?”
“கேளுங்க செல்வி “.
“நீங்களும் அண்ணாவும் ஃபோன்ல பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.குழந்தையைப் பார்த்துக்க ஆள் இல்லாமல் நீங்கள் வேலையை ராஜினாமா செய்யப் போறதாச் சொன்னீங்க. நீங்கள் சரின்னு சொன்னால் நான் குட்டிமாவைப் பார்த்துக்கறேன்.எனக்குக் குழந்தைங்கன்னா உயிரு.கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கலை.இன்னிக்குக் கூட என் நாத்தனார் குழந்தையைக் கூட்டிட்டுத்தான் ஆஸ்பத்திரிக்கு வந்தோம்.நானும் என் கணவரும் குழந்தை பிறப்பதற்காகச் சிகிச்சை எடுத்துக்கிட்டு இருந்தோம்.இப்போ எல்லா நம்பிக்கையும் போய் நிறுத்தி விட்டோம்.ஸ்வேதா குட்டியை நான் நல்லாப் பார்த்துக்கறேன்.நீங்க நிம்மதியாக வேலைக்குப் போயிட்டு வாங்க “, என்றாள்.உறவினர்கள் கூட உதவி செய்ய மறுக்கும் இக்காலத்தில் தானாக வந்து உதவி செய்து, அன்புக் கரம் நீட்டும் இவள் யார் ? இறைவன் அனுப்பி வைத்த தேவதையோ? இவளை எவ்வளவு இழிவாக நினைத்தேன்.வெறும் தோற்றம் பார்த்து மதிப்பீடு செய்யும் நானா படித்தவள்? கண்களில் நீர் பெருக, கை எடுத்து அவளைக் கும்பிட்டாள் சுகன்யா.
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
சென்னை
இந்தக் கதையைப் பற்றி…
எங்கள் அப்பார்ட்மெண்ட்டின் கீழ் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் குடி வந்தது.அந்தப் பெண்மணி அவ்வளவாகப் படித்த மாதிரி தெரியவில்லை.பாமரத்தனமாக இருந்தாள்.அப்போதுதான் நான் வேறு பள்ளிக்கு வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.நல்ல பள்ளி.கை நிறையச் சம்பளம்.ஆனால் ஒரு சிக்கல்.மதியம் சீக்கிரமே பள்ளியிலிருந்து வரும் என் நான்கு வயது மகனைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் தவித்தபோது,அந்த விஷயத்தை அறிந்து ,தானாகவே என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள எங்கள் கீழ் வீட்டுப் பெண் முன் வந்து இரண்டு வருடங்கள் அதே மாதிரி பார்த்துக் கொண்டாள்.பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப் வரைதான் ஸ்கூல் பஸ் வரும்.தானே நடந்து சென்று என் மகனை அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொண்டு, பால் கலந்து கொடுத்து, நான் ஆறு மணிக்கு வீட்டுக்கு வரும் வரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாள்.இன்று அவள் வேறு இடத்தில் வாழ்ந்தாலும் எங்கள் நட்பு தொடர்கிறது.அது போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட தேவதைகளுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.தோற்றம் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என்று அன்று அறிந்து கொண்டேன்.

உண்மை தான்.
மனிதனை எடைபோடுவது அவ்வளவு
எளிதல்ல!