
அவளது முகம் அக்னியாய் எரிந்து கொண்டிருந்தது.
“காலைலயே உங்களுக்கு நினைவு படுத்தினேன்ல. அப்போ சரின்னுட்டு இப்போ முடியாதுன்னா..? ஏங்க புரிஞ்சிக்கோங்க.. இப்போ ஒரு முக்கியமான நேர்காணல் நடத்துறேன். பாப்பாவை இப்போ உடனே கூப்பிடப் போக முடியாதுங்க” எதிர்த்துமுனையில் அவளுக்கு ஆதுரமான பதில் கிடைக்காமல் போகவே, அடுத்து என்ன செய்வதென யோசித்தாள் அபூர்வா.
சில வினாடிகள் மட்டும்.. கலக்கத்துடன் யோசனையும் கூடிய ஒரு வித முக பாவனையை அணிந்திருந்தாள்.
அடுத்த நொடி அலைபேசியை எடுத்தவள்.. புன்னகை சிந்தும் அதுரங்களில் தேன் குழைய பேசத் துவங்கினாள் ” நிம்மி.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும், மதுவையும் சுவேதாவோட கூப்பிட்டுக்கிறியா..? ஒரு ஏழு மணிக்கு உன் வீட்டுக்கு வந்து கூப்பிட்டுக்கிறேன்.” எதிர்த்துமுனையில் வந்த பதிலில் திருப்தி அடைந்தவள், ” I owe you bigtime நிம்மி ” என்றாள்.
அந்நேரம் அவள் அரைக்கதவுகள் தட்டப்பட.. ” நேர்காணல் க்கு எல்லாரும் வந்துட்டாங்க மேடம். உங்களுக்காகத் தான் எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க என்றாள் அவளது காரியதர்ஷி.
“இதோ ரெண்டு நிமிசத்துல வந்துடுறேன்.” ஒரு அதிகாரியின் தோரணை அவள் முகத்திற்கு அத்தனை லட்சணமாய் பொருந்தியிருந்தது.
பணி முடித்து மகளை அழைக்க நிம்மி வீட்டிற்குச் சென்றவுடன் ஓடி வந்து அணைத்த மதுவிற்கு அன்பு பொங்கும் அன்னை முகம் காட்டினாள்.
இரவிற்கு என்ன சமைக்கலாம் என்று அவள் சிந்தித்த வேளையில், அலைபேசியில் அவளது மாமியார் “இன்னிக்கு சுமங்கலி பூஜை மா. நீ பூஜை பண்ணாட்டியும், விளக்கேத்தி சாமி கும்பிட்டு மூணு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மட்டும் குடுத்துரு” என்க, இப்போது எந்த முகமூடியிட வேண்டும் என்று தவிக்கத் துவங்கினாள் அத்தலைவி.

Wonderful depiction.