
விருட்சம் கதை பேசும் நிகழ்ச்சியில்
புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” கதையைப் பற்றி நான் பேசிய உரை.
தமிழ் இலக்கியத்தில் மனித மனத்தின் சிக்கல்களை மிக நுட்பமாகப் பதிவு செய்த அபூர்வமான படைப்புகளில் ஒன்று. இந்தக் கதையை வெறும் நோய், வறுமை அல்லது குடும்பத் துயரத்தின் கதை என்று மட்டும் பார்க்க முடியாது. இது அன்பு, பராமரிப்பு, மனச்சோர்வு, மரணம், விடுதலை ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த மனித வாழ்வின் ஆழமான சித்திரம்.
இந்தக் கதையின் முதல் சிறப்பு அதன் கதை சொல்லும் பாணி. சாதாரணமாக ஒரு எழுத்தாளர் கதையின் உச்சநிலையை முடிவில் வைப்பார். ஆனால் புதுமைப்பித்தன் அசாதாரணமான துணிச்சலுடன் கதையின் மையச் சம்பவத்தையே தொடக்கத்தில் வைக்கிறார்.
“செல்லம்மாள் இறந்துவிட்டாள்” என்ற உண்மையை வாசகனிடம் உடனே கூறிவிடுகிறார்.
இது மிகவும் அரிய கலைத்திறன். ஏனெனில் இவ்வாறு ஆரம்பிக்கும்போது “அடுத்து என்ன நடக்கும்?” என்ற சஸ்பென்ஸ் குறைகிறது. ஆனால் புதுமைப்பித்தன் வெளிப்புற சம்பவத்தின் பரபரப்பை விட, மனித மனத்தின் உள் இயக்கமே முக்கியம் எனக் கருதுகிறர்.
அதனால் அவர் கேட்கும் கேள்வி “செல்லம்மாள் உயிர் பிழைப்பாளா?” என்பதல்ல; மாறாக, “இந்த மரணத்தை பிரம்மநாயகம் எப்படி அனுபவிக்கிறார்/ அல்லது எதிர்கொள்கிறார் ?” என்பதே. இதைச் சாதிப்பதற்கு அபாரமான எழுத்துத் திறனும் அசாத்தியமான துணிச்சலும் தேவை.
பிராம்மநாயகம் பிள்ளை என்னும் பாத்திரத்தின் மனநிலை கதையின் இதயம். செல்லம்மாள் இறந்தபின் அவர் உருக்குலைந்து அழுது புலம்பவில்லை. அதற்கு பதிலாக, மிகுந்த நிதானத்துடன் தானே செல்லம்மாளைக் குளிப்பாட்டி, புடவை கட்டி, இறுதி மரியாதைக்குத் தயார்படுத்துகிறார். இந்த அமைதி வெறும் உணர்ச்சியின்மை அல்ல. மாறாக அது நீண்டகால சோர்வு, தவிர்க்க முடியாத முடிவை ஏற்றுக்கொள்ளல், உள்ளார்ந்த துக்கம் ஆகியவற்றின் கலவை.
பெரிய துயரங்கள் வரும் போது எல்லோரும் வெளிப்படையாக அழுவதில்லை. சிலர் ஒரு விசித்திரமான அமைதிக்குள் சென்று விடுவார்கள். பிரம்மநாயகத்தின் அமைதி அப்படிப்பட்டது. அவர் துக்கமற்றவர் அல்ல; துக்கத்தைத் தாண்டி ஒரு மந்தமான வெறுமைக்குள் சென்றவர். இதுவே இந்தக் கதையை உளவியல் ரீதியாக மிகவும் வலிமையாக்குகிறது.
இந்தக் கதையில் என்னை மிகவும் பாதித்த இன்னொரு பகுதி, செல்லம்மாள் தனது அம்மாவை நினைத்துப் பேசும் காட்சி. அந்தத் தருணத்தில் அவள் கணவன் பிரம்மநாயகத்தை தன் அம்மாவாகப் பாவித்துக் கொண்டு உரையாடுகிறாள். எனக்குப் பார்க்கையில் இது கதையின் மிகச் சிறப்பான தருணம்.
நோயின் உச்சத்தில் உடல் பலவீனமடையும் போது மனம் குழந்தைப் பருவத்தின் பாதுகாப்பைத் தேடுகிறது. மனிதன் இறுதியில் நாடுவது பாதுகாப்பும் நிபந்தனையற்ற அன்பும் தான்; அவற்றின் முதல் வடிவம் “அம்மா”. செல்லம்மாள் அந்த மனநிலைக்குத் திரும்புகிறாள். இதன் மூலம் புதுமைப்பித்தன் மரணத்தை அணைக்கும் மனதின் உளவியலை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறார்.
பிரம்மநாயகத்தின் எதிர்வினையும் அற்புதமானது. அவர் “நான் உன் அம்மா இல்லை” என்று சொல்லவில்லை. அவளுக்குத் தேவையான ஆறுதலாகவே மாறுகிறார். இங்கே கணவன்–மனைவி உறவு, தாய்–குழந்தை உறவாக உருமாறுகிறது. இதன் மூலம் அன்பு என்பது ஒரே வடிவில் நிலைத்திருக்காது; சூழ்நிலைக்கேற்ப புதிய வடிவங்களை எடுக்க முடியும் என்பதை கதை உணர்த்துகிறது.
கதையின் இன்னொரு நெகிழ்ச்சியான பரிமாணம் செல்லம்மாளின் குடும்ப அக்கறை. கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, மரண நெருக்கடி ஆகியவற்றின் நடுவிலும், கணவனுக்குப் பிடித்த உணவைச் செய்து கொடுக்க முயற்சிக்கிறாள். இது சாதாரண விஷயம் அல்ல. உடல் முழுவதும் துன்பத்தில் இருந்தாலும், அவளின் மனம் இன்னும் கணவனின் மீது இருக்கும் அன்பையும், அவருக்குப் பிடித்ததை செய்து கொடுக்கும் மனநிலையையும் விட்டுவிடவில்லை.
இதில் அந்தக் காலப் பெண்களின் வாழ்க்கை முழுவதும் தெரிகிறது. அவர்கள் அன்பை பெரும்பாலும் வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை; சமையல், பராமரிப்பு, சிறு கவனிப்புகள் மூலமே வெளிப்படுத்தினார்கள். செல்லம்மாளின் அந்த முயற்சி, “நான் இன்னும் இந்த வீட்டின் மனுஷிதான்” என்ற அவளின் இறுதி அடையாளப் போராட்டமாகவே தோன்றுகிறது.
கதையில் வீட்டிற்கு மருத்துவர் வந்து செல்லம்மாளைப் பார்ப்பதும் முக்கியமான சமூகச் சான்று. சென்னை (அப்போதைய மெட்ராஸ்) நகரத்தில் மருத்துவ வசதிகள் இன்று போல எளிதாக இல்லை. வறுமையில் வாழ்பவர்கள் முதலில் வீட்டுவைத்தியம், பின்னர் சித்தா, அல்லது ஆயுர்வேதா போன்ற முறைகளை நாடி, நிலைமை மோசமானபோது அல்லோபதி மருத்துவரை அணுகுவார்கள். மருத்துவர் வீட்டிற்கு வருவது, குடும்பம் இறுதி நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறி.
இந்தக் கதையின் மிகப்பெரிய பலம், புதுமைப்பித்தன் எந்தப் பாத்திரத்தையும் நல்லவர்/கெட்டவர் என்று பிரிக்கவில்லை. பிரம்மநாயகம் அன்பான கணவன்; அதே நேரத்தில் சோர்ந்து போகும் மனிதன். செல்லம்மாள் பலவீனமான நோயாளி; அதே நேரத்தில் குடும்பத்தை நினைத்து கடைசி வரை வாழும் பெண். இந்த தன்மைதான் கதையை உயிர்ப்புடன் நகத்துகிறது.
செல்லம்மாள் வெறும் வறுமைக் கதை அல்ல. அது அன்பு எவ்வாறு கடமையாக மாறுகிறது, கடமை எவ்வாறு சுமையாகிறது, ஆனால் அந்தச் சுமையில் கூட கருணை எவ்வாறு அழியாமல் நீடிக்கிறது.. என்பதைச் சொல்லும் கதை. அதனால்தான் இந்தச் சிறுகதை தமிழ் இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் இந்த கதையில அன்றைய சமூகச் சூழலையும் காட்டி இருப்பார். மின்சாரவசதி இல்லாத சென்னை புறநகர்,…நகரவாழ் க்கையின் தனிமையிணர்வு…..
கைரிக்க்ஷா…..மருத்துவரை அழைத்து வந்த ரிக்ஷாக்காரருக்கு பணம் கொடுக்கும் போது… இவர் கையில் இருந்து பணம் மனித மாட்டிற்கு சென்றது என்று எழுதியிருப்பார். புதுமைப்பித்தன் எப்பொழுதுமே
குரலற்றவர்களின் குரலாகவே இருந்திருக்கிறார்.

கதையோடு அருமையான விமர்சனம்.