தவமிருந்த மரங்கள்!/கு. மா. பா. திருநாவுக்கரசு

இங்கு இது குளிர்காலம்!
மரங்களெல்லாம் தன்
பச்சை வண்ண ஆடைகளில்
பருவக் கோளாறால்
மஞ்சளும் பழுப்பும் பூசி,
காவி நிறமானதால்,
கடைசியில் துறவறம் பூண்டு
மெல்ல மெல்ல
சருகுகளாகி உதிர,
துறவறம் பூண்டு நின்றன!
நிர்வாணமாக நிற்கும்
இவற்றின் தோற்றத்தைக்
காணச் சகியாமல்
புள்ளினங்கள் எல்லாம்
பொந்துகளில்
தலைமறைவாயின!
வெள்ளைப் பனி மழையை
ஆடையாகப் போர்த்துக் கொண்டு
தவமிருந்த மரங்கள்
துளிர்க்கும் போது
குளிர் விட்டு விடும்!