ஆர்க்கே.!/அவரும் நானும்.!

கிணற்று நீர் நான்.
கமண்டல விரி காவிரி அவர்.
கனவுக்கோட்டைக்
கட்டடன் நான்.
யதார்த்த வீட்டின்
கலை வடிவமைப்பாளர் அவர்.
மெத்தனத்தின் மொத்த உருவம் நான்.
சுறுசுறுப்பின் உரிமையாளர் அவர்.
அன்பைத்
தெளித்தலாய் மட்டுமே
அறிந்தவன் நான்.
அன்பை
மழையாய் பொழிபவர் அவர்.
நட்பின் பயணத்தில்
சிறு பிணக்கையும்
ஒரு சண்டையாக்குபவன் நான்.
பெரும் பிரளயச் சரிவையும்
எளிதாய் ஊதித் தள்ளுபவர் அவர்.
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோட்டுபவன் நான்.
ஊரே போற்றும்
வியத்தகு ஆளுமை அவர்.
ஏதோ எழுதுவேன் நான்.
எழுத்தொரு தவம் அவருக்கு.
ஓர் அவசரமெனில் அகப்படுதல்
கடினமென்பர் என்னை.
அடுத்த நொடி தீர்வுடன்
வருபவர் அவர்.
நன்னட்பெனில்
உடுக்கை இழந்தவன் கை
உடன் வரு நிழல்
என்பதாகத்தான்
இதுவரைக் கால
இலக்கணக்குறிப்பு.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
என் வரையில்……!
நான் சாய்ந்திருக்கும் தோள்.
நான் தடுமாறாமல் நிற்கும் பூமி
அவரும் அவர் நட்பும்.
காலமும் அவரும்
என்னை ஒருபோதும்
கைவிடுவதேயில்லை.
அவருடைய அவன் நான்.
என்னுடைய நானே அவர்.
என் அருமை நண்பர்/எழுத்தாளர்/பூபாளம் இதழின் ஆலோசகர்/
டாக்டர் ஜெ.பாஸ்கரன் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


3 Comments on “ஆர்க்கே.!/அவரும் நானும்.!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன