
அண்ணாமலைச்சாமி ராஜேஸ்வரி /பணம் கொடுத்தது பகவானே
தூத்துக்குடியில் தாமோதர நகரில் ஒரு சின்னக் குடிலில் வசித்துவரும் நானும் மனைவியும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து இன்றும் குறைந்த வருமானம் பெற்றுக் குடும்பம் நடத்தி வருகிறோம்.
எங்களுக்குப் பகவானுடைய திருவடி பணிந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிக் கொண்டே இருக்கும். இந்த மாதம் எப்படியும் திருஅண்ணாமலை செல்ல, வேண்டும் என்ற என்ற தீராத தாகத்தைத் தீர்த்து வைத்த பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் தெய்வக் குழந்தைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
என்னுடைய வாழ்க்கைத் துணைவியார் காதில் போட்டிருந்த பொருளை அடகு வைத்து திருஅண்ணாமலை புறப்பட்டோம்.
திருஅண்ணாமலை நெருங்க நெருங்க எங்கள் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகியது. அண்ணாமலையார் கோபுரம் கண்ணுக்குத் தெரிய, எங்கள் உடம்பில் உந்துதல் ஏற்பட்டது.
மாலை 05.30 மணிக்குத் திருவண்ணாமலை பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். பகவான் தேரடித்தெருவில் இருக்கும் இடத்தை அடையும்போது மாலை 06.00 மணி. நடை சாத்தப்பட்டது. இன்று ஆசீர்வாதம் பெற உத்தரவு இல்லை என்று நினைத்துக்கொண்டு இரவு சின்ன ரூம் எடுத்து நானும் ராஜேஸ்வரியும் கைக்குழந்தையும், தங்கினோம். எப்போது விடியும் என்ற எண்ணமே மனத்தில் உதயமானது.
மறுநாள் காலை 08.30 மணி அளவில் அண்ணாமலையாரைத் தரிசிக்கச் சென்றோம். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் பாதம் பணிந்து, பின் மூவரும் 09.00 மணியளவில் பகவானுடைய இல்லத்திற்கு வந்தோம்.
கூட்டம் கியூவில் நின்றது. நாங்களும் கியூவில் நின்றோம். எங்கள் பார்வையெல்லாம் பகவானுடைய திருமேனியை நாடியது. வேறு எதையும் நாடவில்லை. கல்கண்டு வாங்கிச் சென்றோம்.
பாதம் பணிந்தோம், ஆசீர்வாதம் செய்தார்கள். ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் வந்து, பயணத்திற்கு எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் பார்த்துக்கொள் என்று பகவான் நினைவூட்டினார்கள்.
‘ராஜேஸ்வரி நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்’ என்று கேட்டேன். ‘என்னிடம் உள்ள பணம் எல்லாம் செலவாகிவிட்டது. உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது’ என்று ராஜேஸ்வரி கேட்டார்கள்.
‘இன்னும் 100 ரூபாய் தேவைப்படுகிறது | தூத்துக்குடி செல்வதற்கு’ என்று கூறினேன். ராஜேஸ்வரி, ‘பகவானே நாங்கள் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்ல வந்தோம். திருவண்ணாமலையில் தங்களைத் தவிர வேறு யாரும் எங்களுக்குத் தெரியாது’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சோகமே உருவாகிய நிலையில் நின்றுகொண்டிருந்தோம்.
சுமார் 22 வயது மதிக்கத்தக்கவர் சின்னப் பையுடன் எங்களிடம் வந்து பஸ்ஸுக்கு பணம் போதவில்லை என்று நின்று கொண்டிருக்கிறீர்களா, உங்களை யார் என்று எனக்குத் தெரியும். இந்தாருங்கள் 100 ரூபாய் என்று பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
பணம் கொடுத்தது பகவானே அன்றி வேறு யாரும் இல்லை என்று உணர்ந்தோம். நாங்கள் 100 ரூபாய் இருந்தால் தூத்துக்குடி சென்றுவிடலாம், உங்களைத் தவிர எங்களுக்குச் சொந்த பந்தமோ, உற்றார் உறவினரோ திருவண்ணாமலையில் இல்லை. எல்லாம் தாங்களே என்று கூறியதை எப்படி அறிந்தார்கள் என்பதை நினைக்கும்போது, எங்கும் நிறைந்த பரம்பொருளே அவர் என்பதை அறிந்தோம்.
எங்குப் பகவான் நாமம் கூறப்படுகிறதோ, அங்கு வருவார் என்பதையும், நியாயமான கோரிக்கையை அவராக வந்து நிறைவேற்றுவார் என்பதையும் உணர்ந்தோம்.
இந்த ஏழைமேல் இரக்கம் காட்டி உதவி செய்த பகவான் யோகி ராம்சுரத்குமார் நாமம் கூறி, நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறோம். நன்றி! நன்றி! நன்றி!
திருவண்ணாமலையில் ஆசீர்வாதம் பெற்ற நினைவாக, பகவான் எழுந்தருளிய பாட்டு இதோ!
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா -யோகி
பச்சை தலைப்பாகையும் கண்டேன் – என் இச்சையல்லாம் அவர்மேல் கொண்டேன் –
வெள்ளை தாடியும் கண்டேன் – என் உள்ளம் உருகியே நின்றேன் -யோகி வினை தீர்க்க விசிறியும் கொண்டார் – என் வினை தீர்த்து அருளினைத் தந்தார் – யோகி குடுக்கவட்ட சிரட்டையும் கொண்டார் – யோகி அன்பர்க்குக்
கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் கொடுக்கக் குடுக்கவட்ட சிரட்டையும் கொண்டார் யோகி கயிறும் பிரம்பும் பகவான் பாசம் இந்த ஏழைமேல் ஏன் இந்தப் பாசம் – யோகி அனுதினமும் அவர் நாமம் சொல்வோம் அதுவும் அவர் செயல் என்போம் – யோகி தின்னப்பழம் உண்டு தருவார் தீராத வினை தீர்த்து வைப்பார்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
–
