ஆத்மாநாம்/கேள்வி

ஜூலை 6 ஆம் தேதி ஆத்மாநாமின் நினைவுநாள்

காலை எழுந்ததும்
இரை தேடத் துள்ளும்
இவ்வணில்
இரவு எங்கே உறங்குகிறது
மலர்க்கிளைப் படுகையிலா
ஆற்றுமணற் சரிவிலா
சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலா
நிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்
இவ்வணில்கள்
ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்
சிறு பிள்ளைக்கைகளுடன்
அனுபவித்து உண்ணும்
இவை
தங்களைப் பற்றி என்ன கனவு காணும்
உணவையும் உறக்கத்தையும் தவிர.

மதுகதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு. ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர். இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்பெற்றுள்ளன.

ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1979 முதல் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார் என்று அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் சொல்கிறார். ஆத்மாநாம் நோய் முதிர்ந்து ஜூலை 06, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன