
ரெங்கம்மா.. செல்லத்தாயி.. கோமதி அவர் கணவர் குமரேசன், வீரண்ணன், கருப்பசாமியென அவரவர் வீட்டு விளைச்சலை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு படையலிட கிளம்பினார்கள்.
“அம்மா.. கோயிலுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” கேட்ட கண்ணனின் விழியெங்கும் முதல் முறையாகக் கிடா வெட்டு காணும் ஆர்வம்.
நேற்று செல்வம், சுந்தரன், வேலப்பன் என அவன் தோழர்கள் எல்லாரும் சேர்ந்து “மேளம் கொட்டும் ஒரு பக்கம்.. பூசாரி சாமி வந்து பேய் மாதிரி ஆடுவாரு இன்னொரு பக்கம். அப்போ மாலை போட்டு மஞ்சள் குங்குமம் பூசி… மஞ்சத் தண்ணி ஊத்துவாங்க ஆடுமேல.. அது தலையை ஆட்டும்போது.. பூசாரி அருவாளை வச்சி ஒரே… வெட்டு. ஆடு தல ரெண்டு துண்டாகிரும். பம்புசெட்டு கணக்கா ரத்தம் தெறிக்கும். பொம்பள புள்ளைக எல்லாம் அழுதுரும்னு பக்கத்துல கூட வராதுங்க. நீ பாத்ததே இல்லியா?” என்று பெருங்கதை கேட்டதிலிருந்து அவனுக்கும் ஆசை.
சாம பூஜைக்கான மணி அடித்தது. அறுவடை அன்று இறைவனுக்கு படையலாகச் செலுத்தப்பட்டது. ஊர் கூடி கன்னத்தில் போட்டுக்கொண்டனர். கண்ணனின் விழிகள் விரிந்தன.
மேளம் கொட்டி பூசாரி ஆடி வந்து ஆட்டினை வெட்டப் போக.. ஆடு அவனைப் பாவமாகப் பார்த்ததாய் அவனுக்குத் தோன்ற… கண்ணனின் கண்கள் குளமாகின.
ஆடு அவனைக் காப்பாற்ற சொல்லி இறஞ்சுவதாய் கற்பனை தோன்றி இம்சித்தது.
அம்மாவின் புடவையில் முகம் புதைத்து விம்மினான்.
நண்பர்கள் பெண் பிள்ளைபோல அழுவதாய் கேலி பேச…விசும்பலுக்கு இடையில்
அம்மாவிடம் கேட்டான், “அம்மா நான் பொம்பளப் புள்ளையாட்டம் அழுகுறேனா?”என.
“அதையும் உசுருன்னு பாக்குறல்ல சாமி . நீ பெரிய மனுசனா மாறிட்டடா செல்லம்…!” கண்ணனின் கேசம் கோதி அவனை மாரோடு அணைத்துக் கொண்டாள் செல்லத்தாய்.
மெல்லிய புன்முறுவல் அவன் இதழ்களில் பூக்க சாமிக்கு ஆயிரம் விளக்கு ஆராதனை காட்டப்பட்டது.
