ஜெ.பாஸ்கரன். /‘பத்மஸ்ரீயும், இலக்கியம்மூலம் இந்திய இணைப்பும்!

எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டதையொட்டி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா சென்னை மைலாப்பூரில் நடந்தது. உரத்த சிந்தனை வாசகர், எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழிநடத்தலில், திரு உதயம்ராம், திருமதி பத்மினி பட்டாபிராமன், திரு தொலைபேசி மீரான் மற்றும் உ.சி. செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் உள்ளார்ந்த உழைப்பில் நடத்தப்பட்ட விழா, தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைத்த விருதின் பெருமையையும், திருமதி சிவசங்கரி அவர்களின் தமிழ் இலக்கிய சேவையையும் உரத்துச் சொல்லும் விழாவாக அமைந்திருந்தது!
சிவசங்கரிக்கு ஒரு சிம்மாசனம், பாரதியாரின் பாடல், சிவசங்கரி – கதை நாயகி என்ற ஆவணப்படம், “மனிதம் போற்றும் மனுஷி” என்ற பட்டம், மேடையில் ரோபோவின் வாழ்த்து, பரிசுகளின் மழை, அவர் எழுதிய நாவல்களின் சுருக்கங்களின் தொகுப்பு, மேடையில் ஏழு பெண் சிங்கங்களின் முழக்கம், மேலும் விடியோவில் ஏராளமான வி ஐ பி க்களின் பாராட்டுகள் என அடுத்தடுத்து வந்த நிகழ்வுகள் வியப்பு.
ஓர் அரசாங்கம் செய்திருக்க வேண்டிய, அவசியமான விழாவை, உரத்த சிந்தனை மிகச் சிறப்பாக, பலரின் புருவங்களும் உயரும் வகையில் செய்து காட்டியுள்ளது போற்றுதலுக்குரியது.
விழாவின் சிறப்புக்கு மூல காரணமாக இருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் – மனதாலும், செயலாலும், பொருளாலும் அவர்கள் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது – நன்றி சொல்லி மாளாது!
ஏற்புரையில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த சிவசங்கரி அவர்களின் எழுத்தும், இலக்கியப் பணியும், தர்மங்களும், தொண்டுள்ளமும் உலகமுள்ள வரையிலும் போற்றப்படும்!
இராமனுக்கு உதவிய அணிலாக நானும் இவ்விழாவில் கலந்து கொண்டேன் என்பதே பெரும் மகிழ்ச்சிக்குரியது.
இலக்கியம்மூலம் இந்திய இணைப்பு – நான்கு தொகுதிகளையும் இத்தனை நாள் வாங்காமல் இருந்தேன் – புத்தகத்தின் ஏ4 சைசும், அடர்த்தியும் கையில் வைத்து வாசிக்கச் சிரமமாக இருக்குமே என்ற எண்ணமே காரணம். இந்த நான்கு தொகுதிகளையும், எளிமையான 18 புத்தகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கும் புஸ்தகா ராஜேஷ் பாராட்டுக்குரியவர். கையில் வைத்து வாசிக்கவும், பயணங்களின்போது உடன் எடுத்துச்சென்று வாசிக்கவும் வசதியாகப் பதிப்பித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்!
தமிழில் இ.பா. வின் நேர்காணலும், நவீனத் தமிழ் இலக்கியம்குறித்து நீல பத்மநாபன், மாலன் அவர்களின் கட்டுரைகளும் சுவாரஸ்யம். கன்னட எழுத்தாளர் திரு எஸ் எல் பைரப்பா அவர்களின் சுயசரிதை (ஆங்கில மொழிபெயர்ப்பு) வாசிக்க வாங்கியது இன்னும் காத்திருக்கிறது. சிவசங்கரி அவர்கள், பைரப்பாவை நேர்காணல் செய்துள்ளதை வாசித்தவுடன், அவர் சுயசரிதையை (BHITTI – Autobiography SL Bhyrappaa) முழுவதும் வாசிக்கும் ஆவல் வந்துவிட்டது!
இந்தியத் துணைக்கண்டத்தின் இலக்கியப் பரப்பினை, ஒரு பருந்துப் பார்வையாக அளித்துள்ள திருமதி சிவசங்கரி அவர்கள் பாராட்டுக்குரியவர்.
உரத்த சிந்தனையின் பாராட்டுவிழா, தமிழ் இலக்கிய வரலாற்றில், சிவசங்கரி அவர்களின் இலக்கியப் பாதையில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை!

One Comment on “ஜெ.பாஸ்கரன். /‘பத்மஸ்ரீயும், இலக்கியம்மூலம் இந்திய இணைப்பும்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன