வளவ. துரையன்/மரணம்

​அதைத்தான் அவனும்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்;

நேற்று அடுத்தத் தெருவரை
வந்து சென்றுவிட்டது;
அங்கு ஒருவரைத் துணையாய்
அழைத்துச் சென்று விட்டது;

​கடந்த வாரம்
கடைசி வீடு வந்து
சிறு குழந்தை ஒன்றை
ஆசையாய்க் காவு வாங்கி
அழைத்துச் சென்றது;

பந்தல் போடும் பையன்களும்
பாடைகட்டும் ஆள்களும்
காத்துக் காத்துப்
பொறுமை இழக்கிறார்கள்;

அவரவர் வேதனை அவரவர்க்கு

அக்கம்பக்கத்தால்
அருகில்வந்த சுற்றமும் நட்பும்
அல்லல்படுகின்றன;

பிச்சைக்காரன் கூட
இந்த வீட்டைக் கவனமாய்க்
கடந்து செல்கின்றான்;

பின்னங்கால் இரண்டையும்
இழுத்து இழுத்து நடக்கும்
நாயும் அவனைப் போலவே
காத்துக் கொண்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன