
உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் தனக்கு கீழ் பணியாற்ற ஒரு உதவி அறிவியல் வல்லுநரை நியமிக்க மிகச் சவாலான நேர்காணலை நடத்தினார்.
பலரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த இடத்தில், மேல் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை. சீராக இல்லாத பெரிய மீசை.. கண்களைச் சுற்றி சிறை பிடித்தது போன்ற கண்ணாடி. படிய வாரிய கேசம்..பல நாள் உறக்கம் கண்டிராதவன் போலக் கண்களைச் சுற்றிய கருவளையத்தோடு என்று பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக.. பாவமாக இருந்தான் ஒரு இளைஞன்.
அவனிடம் அந்த அறிவியலாளருக்கும், எனக்கும் எதிர்பார்ப்பு மிகக்குறைவாகவே இருந்தது. இவனுக்கு முன் வந்த பல டிப்டாப் இளைஞர்கள் எவரும் அவரை ஆச்சர்யமூட்டவில்லை.
எப்படியும் இவனுக்கும் பதில் தெரியாது என நினைத்திருப்பார் போல, அவனுக்கான அவரது கேள்வியும் மிக எளிமையாக ஆரம்பித்தார்.
“சில நட்சத்திரங்கள் என் கருந்துளைகளாக மாறுகின்றன?”
அசத்தலாகப் பதில் அளித்தான்.
“ஒரு நட்சத்திரத்தின் அக எலக்ட்ரான் விசைகள், ஈர்ப்பு விசைகளின் விகிதத்தில் ஏன் அதிகரிப்பதில்லை?”
கிறிஸ்டோபர் நோலன் போல மிகத் திறமையாகத் திரைக்கதை போலச் சுவாரசியமாகப் பதில் உரைத்தான். அதன் பிறகு வந்த கேள்விகளும் பதில்களும் எனக்கே ஆச்சர்யம்.
அவனுக்குப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அதே சமயம் அந்த அறைக்கு வெளியில் அந்த இளைஞனின் நண்பர்கள் அவனைப் பூவை மொய்க்கும் தேனீக்கள்போலச் சூழ்ந்து கொண்டு “அந்தச் சிடுமூஞ்சி எப்படி டா உனக்கு வாய்ப்பு கொடுத்தார். தெரிஞ்ச விடைகள் கூட அந்த மனுஷன் பார்வைல மறந்துருமே.. ஆமா இதென்ன கோமாளி தோற்றம்?”இவ்வாறாக, ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி.
“என் தோற்றம் அவருக்கு என்மீதான எதிர்பார்ப்புகளைக் குறைத்திருந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். எனது பதில் சாதாரணம் தான். அவர் குறைத்து மதிப்பிட்டதால் நான் சிறப்பாகத் தோன்றி இருக்கிறேன். அறிவு பாதி அதிர்ஷ்டம் மீதி.” என்று புன்னகைதான்.

One Comment on “சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!”
Comments are closed.