சாந்தி சந்திரசேகரன் /பானு.!

முருகேசனை பதினெட்டு வயதில் கரம் பிடித்தபோது, அழகம்மாள் திருமணச் சீராகக் கொண்டு வந்தது இரண்டு ஆடுகளும் ஒரு கன்றுக்குட்டியும்.
கன்றும் ஆடுகளும் அவனது குடிக்கு விலைக்குப் போயின.
பிள்ளைகளும் மணமுடித்து அவரவர் வாழ்க்கை வாழத் துவங்கினர்.
முருகேசன் இறந்தபோது, மிஞ்சிய இந்த ஆட்டுக்குட்டி ‘பானு’ மட்டுமே இன்று அழகம்மாளுக்குத் துணையாக.!
அவள் செல்லும் இடமெல்லாம் அவளது பிள்ளையாக, அதுவும் பின்தொடரும்.
இன்று மருமகன் அடிபட்டு அரசு மருத்துவமனையில் இருக்க, வைத்தியச் செலவுக்கு வழியின்றி தவித்தாள் அழகம்மாள்.
ஆட்டுக்குட்டிக்கு ஆராயிரம் பேரம் பேசி வந்தவளுக்கு மனம் கொள்ளாமல் அழுது மடிந்தாள்.
அவளின் சோர்வான முகம் கண்டு அவள் மடி சாய்ந்த பானுவின் முகம் பார்க்கவும் திரணியற்றவள், கயிறைக் கட்டி குமாரின் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றாள்.
“பொட்டக்குட்டி தான். எக்காரணம் கொண்டும் அறுப்புக்கு போட்டுறாத குமாரு. ஆறு மாசத்துக்குள்ள அடைச்சு மீட்டுக்குறேன்.” கெஞ்சியவளின் வார்த்தைகள் குமாரின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
அவளால் மீட்க முடியாது என்று அவனுக்குத் தெரியும்.
அவள் கால்களைச் சுற்றிய பானு குமாரிடம் செல்ல மனமின்றி கத்தத் துவங்கியது.
பானுவின் கண்கள் அவளைப் பின்தொடர்ந்த அந்தக் கடைசிப் பார்வை, திருமணத்தன்று பெற்றோர் தன்னை முருகேசனிடம் ஒப்படைத்தபோது அவள் கண்களில் கண்ட அதே தவிப்பு; ஆனால், அன்று அவள் கரம் பிடிக்க ஒருவன் இருந்தான். இன்று அவள் முற்றிலும் அனாதையானாள்.

One Comment on “சாந்தி சந்திரசேகரன் /பானு.!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன