
வெயில் உச்சியில் இருந்தது. தலையில் மூட்டை, கையில் பை. அந்தப் பாட்டி மெதுவாக நடந்தாள். அவள் தலையிலிருந்த மூட்டையின் மீது இரண்டு சிட்டுக்குருவிகள் துள்ளி அமர்ந்தன. இன்னும் இரண்டு குருவிகள் துரத்திப் பறந்தன.அவள் அவற்றை விரட்டவில்லை; மாறாக, சிரித்தபடியே நடந்தாள்.
எதிரில் வந்த ஒரு பெண்,”பாட்டி உன்னைப் பாத்தா நடிகை சத்யமாலாக்கு பாட்டி வேஷம் போட்ட மாதிரி அழகா இருக்கே”
அதற்கும் சிரித்த படி நடந்தாள், அந்தக் கடற்கரை பங்களாவுக்குள் நுழைந்த மூதாட்டி மூட்டையை மெதுவாகத் தோட்டத்தில் இறக்கினாள்.
உடனே கொல்லெனப் பறவைகள் அவளைச் சூழ்ந்தன புதிதாக வந்த சிட்டுக் குருவிகளும் சேர்ந்து கொண்டு மூட்டையிலிருந்த தானியங்களுக்காகக் காத்திருந்தது.
நகரத்தில் இப்போது குருவிகள் இல்லை அவற்றைத் தேடி நகரை ஒட்டிய கிராமத்துக்கு மாறு வேஷத்தில் சென்று வெற்றியுடன்
திரும்பி இருந்தாள் பறவையியலாளரான நடிகை சத்யமாலா. இனி அவள் தோட்டத்தில் சிட்டுக் குருவிகளும் வரும்.
