ஜெ.பாஸ்கரன்/“நாடகத்தின் முடிவு” – அசோகமித்திரன்

என் வி ராஜாமணி எழுதிய வானவில் நாடகத்தில் ஒரு பாத்திரம் – லட்சியங்கள் மிகுந்த அரசன் ஒருவன் அவனாகவே புரட்சியாளர்களுடன் வேறு பெயரில் சேர்ந்து விடுகிறான். அரசனைக் கொல்வது யார் என்பதற்கான சீட்டுக் குலுக்கலில், அவன் பெயரே வந்து விடுகிறது – ‘அவனை அவனே கொல்ல வேண்டும்!’ அந்தப் பாத்திரத்தின் பெயர்தான் அசோகமித்திரன் – அதுவே தியாகராஜன் எனும் இயற்பெயர், எழுத்துலகின் நிரந்தரமான புனைப்பெயராகியது!
ஒரு நாடகம் என்பது கற்பனையில் அமைந்தது. அந்தக் கற்பனை வாழ்வுடன் மோதியபோது என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடையளிப்பதுபோல எழுதப்பட்டுள்ள சிறுகதை. 1956 ல் இப்படிப்பட்ட ஒரு கற்பனையைச் சிறுகதையாக்கியிருக்கும் அசோகமித்திரன், தனது பாணியில் ஆரவாரம் இல்லாமல் எழுதியுள்ளார்.
நிஜ வாழ்வில் ‘வானவில்’ நாடகக் கதாபாத்திரம் – அவனை அவனே கொல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் மாட்டிக்கொள்ளும் ‘அசோகமித்திரன்’ – உயிருடன் வந்தால் என்னவாகும் என்ற கற்பனையைக் கருவாகக் கொண்டு இந்தக் கதையை அசோகமித்திரன் படைத்திருக்கலாமெனத் தோன்றுகின்றது.
ஏழு ஆண்டுகள் பெரும்பாடுபட்டு எழுதிய நாடகம் வெற்றிகரமாக அரங்கேறுகிறது – அந்த ஆனந்தத்தில் தன் தூக்கத்தை. இழந்து, சுருட்டைப் புகைத்துக்கொண்டிருக்கிறார் அதன் ஆசிரியர் ஆனந்த குமார். மேஜை முன் உட்கார்ந்த அவரால் எதுவும் எழுதமுடியவில்லை. “மனதில் எண்ணங்கள் கணக்கின்றிப் பறந்தன; ஆனால் எழுதுவதற்குப் பேனா முனையில் ஒன்று கூடத் தங்கவில்லை”.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணியபடி எழுதியதால், நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர் நன்கு அறிவார். மேடையில் அவரது கற்பனைச் சித்திரங்கள் உயிர்பெற்றிருப்பதைத்தான் அவரால் காணமுடிந்தது. நடிகர்களை அல்ல.
அவருடைய கதாநாயகி சரோஜா – முகத்திலும் உடலிலும் அழகின் பூரணப் பொலிவுடன் – கண்களில் எல்லையற்ற சோகத்துடன் அவர்முன் தோன்றுகின்றார். (?மாய யதார்த்தவாதம் – magical realism) . ‘ஏழு ஆண்டுகளாக அவருடன் இருந்து வரும் சரோஜாவைத் தெரியவில்லையா?’ எனக் கேட்கிறாள்.
‘அழகும், இலட்சிய குணங்களும் ஊட்டி என்னை உருவாக்கினீர்கள் – ஆனால் இதயம் மட்டும் சாதாரண மனிதத் தன்மை பொருந்தியதாக அமைத்தீர்கள். இலட்சிய புருஷன் ஒருவனைக் காதலனாகப் படைத்தீர்கள். ஆனால் முடிவில்…’ எனக் கூறி விசும்புகிறாள்.
ஆனந்தகுமார்,”நாடகம் என்றால் அதற்கு ஒரு முடிவு இருக்க வேண்டும். துன்பியல் நாடகமானபடியால், சோகத்தில் முடிக்க வேண்டியிருந்தது. அதுதான் பொதுமக்களுக்கும் பிடித்தமானது – அரங்கில் இன்றைய ஆரவாரத்தைக் கேட்டாயல்லவா?” என்கிறார்.
‘இந்தத் துன்ப நிலையிலிருந்து என்னைக் காப்பாற்ற நாடகத்தை நிறுத்தி விடுங்கள்’ என்கிறாள்.
“மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். எனக்கு வரும் புகழையும் சிறப்பையும் கை நழுவ விட முடியாது” – ஆனந்தகுமார்.
“நாடகத்தின் முடிவையாவது மாற்றி விடுங்கள்” என்னையும் கொன்று விடுங்கள் அல்லது சுகுமாரனைக் கொல்லாது விடுங்கள் – எப்படியாவது என் காதலனுடன் என்னைச் சேர்த்து விடுங்கள்”
ஒவ்வொரு நாளும் மேடையில் என் சோக ஜீவிதத்தை மீண்டும் மீண்டும் நடத்த முடியாது – கைகூடாக் காதலால், ஏமாற்றமும் கொடுமையும் என்னைச் சாட நான் வதைக்கப்படுவேன் – அதனால் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். கருணை புரியுங்கள்”
மறுக்கிறார் ஆனந்தகுமார்.
சரோஜா அவரைத் திட்டுகிறாள். “நீ ஒரு விலங்கு. மிருக குணம் படைத்த அரக்கனே, உனக்குப் பொறாமை – சுகுமாரனை அவனைப் படைத்த நாலிலிருந்து அவனை நீ விஷமென வெறுத்தாய். என்மீது கொண்ட தகாத காதலினால், அவன்மேல் நீ பொறாமை கொண்டாய்”
போதும் நிறுத்து என்னைக் கொன்றுவிடாதே – ஆனந்தகுமார் அலறினார்.
அப்போது ஓர் அழகிய யுவனின் பிணம், மார்பில் புதைந்த கத்தியுடன் அவர்களுக்கிடையே வருகிறது. ஆனந்தகுமாரைத் திட்டியபடியே சிறிதும் தயங்காமல், கத்தியைப் பிணத்தின் மார்ப்லிருந்து எடுத்தாள். இரத்தம் ஆனந்தகுமார் முகத்தில் பீச்சி அடித்தது.
“உன் இரத்தமடா, இது உன் இரத்தம்! உன்னை நீயே சாக அடித்துக்கொண்டாய் பார்.. கூத்தாடு, கூதாடு!” ஆவேசமாகக் கத்துகிறாள் சரோஜா.
நினைவிழந்து விழுகிறார் ஆனந்தகுமார். மறுநாள் அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் இறந்ததாகச் செய்தியில் வருகிறது.
ஆசிரியர் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, கூடு விட்டுக்கூடு பாய்வது போல, படைக்கின்றார். கதாநாயகி பாத்திரத்தை அவ்வளவு நேசிக்கிறார். சோகமான முடிவில் கதாநாயகனைக் கொன்று விடுகிறார். சுகுமாரனை இழந்து சரோஜா சோகத்தில் தனியாகிறாள். கற்பனைப் பாத்திரங்கள் உயிருடன் வந்தால், தங்களைப் பற்றிய கதாசிரியரின் எண்ணங்களைக் கேள்வி கேட்கக்கூடும் – விடையில்லாத கேள்விகளாக இருக்கவும் கூடும் என்பதை அசோகமித்திரன் அழகாகச் சொல்கிறார் இக்கதையில்.
இந்தச் சூழ்நிலையில் அவள் வந்து கதாசிரியருடன் சண்டை செய்கிறாள்! நாடகம் அரங்கேறும் ஒவ்வொரு நாளும் இந்தச் சோகத்தை அவளால் தாங்க முடியாது – சுகுமாரனை வாழ வைத்தோ, சரோஜாவைக் கொன்றோ அவர்களை ஒன்றுசேர்த்துவிடக் கேட்கிறாள் – என்ன ஒரு கற்பனை!
எழுதிய வருடம் 1956 என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/“நாடகத்தின் முடிவு” – அசோகமித்திரன்”

Comments are closed.