சாந்தி சந்திரசேகரன்/இயலாமை…!

“மழைல லேசா நனஞ்சிடுச்சி… அதுக்கே இந்த ரேஷன் கடை அரிசி மூட்டை ல… புழு வண்டு வந்துருச்சி… பேசாம நம்ம அங்கம்மா கிட்ட குடுத்து விட்டுடு. பாவம் தனிக்கட்டையா அவ சிரமப்படறா… நம்மாள முடிஞ்ச உதவியா இது இருக்கட்டுமே…!” என்றார் அங்கமுத்து.
“டேய் கண்ணு… ராஜா… வாசல்ல அங்கம்மா வேலை பாத்துட்டு இருப்பா… கொஞ்சம் வரச் சொல்லேன் “என்று பேரனுக்குக் கூவினார் முத்தாச்சி.
ஆட்கள் சேர்ந்து அரிசி மூட்டையை அவள் தலையில் ஏற்றிவிட, தன் மஞ்சப்பையை சுமந்த படி சென்ற அங்கம்மாவுக்கோ கடந்த வாரம் நிகழந்த சாம்பாசனை மனதில் நிழலாய் ஓடியது. “அம்மா… ரேஷன் அரிசி மூட்டைய தர்றதா சொன்னீங்க… வீட்லயும் அரிசி தீந்துருச்சி… எடுத்துக்கவா?”
” அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு. வீட்டு தேவைக்கு… கோழி… ஆடு…மாடு நாய்க்கு எடுத்துட்டு பொறுமையா தரேன்” சுளீரென்று படபடத்தார் முத்தாச்சி.
குருவிகள் மூட்டையை கொத்தித் தின்ன… ஈரவாடை நாசியில் ஏற… தன் நிலையை நினைத்து நொந்தவாறு நடையைக் காட்டினாள் அங்கம்மா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன