ஜெ.பாஸ்கரன்/ஒரே தோழன்!

ஒரு காலத்தில் என்னை அண்ணாந்து பார்த்து வியந்தவர்கள், இப்போதும் அப்படியே பார்க்கிறார்கள்; ஒருசிலர் வருத்தத்துடன், மற்றும் சிலர் ஒரு க்ரூரத் திருப்தியுடன்!
எத்தனைப் பிறப்புகள், காது குத்து வைபவங்கள், பெண்கள் வயசுக்கு வந்த விசேஷங்கள், கல்யாணங்கள், அறுபது, எண்பது வயதுப் பூர்த்திக் கொண்டாட்டங்கள். ஊரே திரண்டு வந்து என்னுள் மகிழ்ந்து, சிரித்து, கூடிக் குலாவிய நாட்கள்….
சாதாரணமாகவே இங்கு எப்போதும் விசேஷம் மாதிரி நூறு பேருக்குச் சாப்பாடு தடபுடலாய் நடக்கும். ஊரில் திருவிழா என்றால், இங்குக் கூட்டம் – இடம் காணாமல், தாழ்வாரம், திண்ணைமேல் மாடியென எங்கும் உறவினர்கள், நண்பர்கள் – களிப்பு, குதூகலம்.
வருடம் தவறாமல் தூண்களுக்கு வர்ணம், கம்பிகளுக்கும், ஜன்னல் கதவுகளுக்கும் வண்ணப் பூச்சு, ஆரஞ்சு நிறப் புதுச் சீமை ஓடுகள், சுவர்களுக்கெனத் தனியே தெரியும் வெளிர் நீல சுண்ணாம்பு வர்ணம்! ஊரிலேயே அழகான பெரிய மச்சு வீடு என்ற பெருமை எனக்குண்டு.
மங்கலமாய் ஊரில் உயர்ந்து நின்ற நான், இன்று இப்படிக் கேட்பாரற்று, துருப் பிடித்து, வண்ணமிழந்து நிற்கிறேன்! எல்லாம் ஒரு நாளில், ஓர் அமங்கல நிகழ்வில் – ஒரு முழம் கயிற்றில் தொங்கிய கன்னிப்பெண் கர்ப்பத்தால் அழிந்தது.
இரவில் அவள் ஆவி அலைகிறதாம். ஜன்னல் கதவுகள் படப் படக்கிறதாம். மெல்லிய சிரிப்பொலியுடன் சிறு விளக்குகள் எரிவதும், அணைவதுமாய் இருக்கின்றனவாம்! எனக்கு ஒன்றும் தெரிவதில்லை ஆனாலும் ஊருக்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது!
என்னை வாங்கவோ, இங்குக் குடி வரவோ, கவனித்து மராமத்து செய்யவோ நாதியில்லை. என் கதி இப்படியாகும் என்று கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை.
என் ஒரே துணை, நான் நன்றாக இருந்த நாட்களில் இங்குக் குட்டியாய், செல்லமாய் வளர்ந்த சீஸர்தான் – என்னைப் போலவே கவனிப்பாரற்று, மெலிந்து, தோலில் சொறிகளுடன் கண்ணில் மட்டும் உயிரை வைத்துக்கொண்டு, தெருக்களில் அலைந்து, இரவில் மட்டும் முன்வாசல் தூணுக்கடியில் கிழிந்த சாக்கில் உறங்க வருவான்.
அவன் திடீர் திடீரென்று, நடு இரவில் அழுவதைப் போல ஊளையிடுவது மட்டும் ஏனென்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/ஒரே தோழன்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன