சி.சு.செல்லப்பா/அவள் சம்மதம்

அவர்கள் இருவரை மட்டும் வீட்டில் வைத்துவிட்டு மற்ற எல்லோரும் அவள் சம்மதத்தைக் கேட்க கோவிலுக்குப் போயிருந்தார்கள். அன்று காலையில் எப்படியோ ஆரம்பமான பேச்சு விறுவிறுப்பாக வளர்ந்து அஸ்தமன சமயத்தில் தெய்வ சம்மதத்தைக் கேட்டுவிட முடிவு செய்த அளவுக்கு வந்தது அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. சிறிதும் எதிர்பாராத நிலைமையில் நிகழ்ந்த இந்தப் போக்கினால் அவனுக்கு ஏற்பட்ட பரபரப்பை சிறிதும் அடக்க முடியவில்லை. இந்த பரபரப்பை இன்னும் அதிகப்படுத்துவதற்கு ஏதுவாகத்தான் இருந்தது அவர்கள் இருவரை மட்டும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டுப் போனது.
"ஆத்தை விட்டுப் போயிடாதேடாப்பா குரு, உன் அத்தங்காவுக்கு பயந்துண்டு" என்று பரிகாசம் செய்தாள் அத்தை கோயிலுக்கு புறப்படும்போது.
"ஆமடியம்மா ரத்னா, அம்மாஞ்சியை கூடத்துலேயே துணைக்கு இருக்கச் சொல்லு" நாங்க திரும்பி வரவரைக்கும் என்று அவன் தாயும் கூட பரிகாசத்தில் கலந்து கொண்டாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் தந்தையும் அத்திம்பேரும் சிரித்துக் கொண்டே "ஆமாம் புதிசாக இப்பத்தானே தெரிஞ்சுக்கறா, திடீர்னு ஆகாசத்திலேருந்து குதிச்சு" என்று சேர்த்தார்கள்.
இந்தக் கேலி எல்லாம் அந்த சமயத்தில் அவன் மனக்கிளர்ச்சியைத் தூண்டுவனவாக இருந்ததே தவிர அவைகளை ரசித்து அதற்கு ஈடுபேச முடியவில்லை.
அவர்கள் எல்லோரும் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்லவும் கூடத்தில் மேஜை முன் உட்கார்ந்திருந்த குரு சில நிமிஷங்களுக்குள் எழுந்து வாசல் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
தெருவின் வடகோடிப் பக்கம் பார்த்தான் தெருவையடைத்து நிற்பதுபோல் சற்று எட்டி நின்ற காமாட்சி கோயிலின் கர்ப்பக்கிரகம், ஏற்றியிருந்த திருவாச்சிகளின் ஒளிபெற்று ஜெகஜ்ஜோதியாக விளங்கியது. தெருவில் கோயிலை நோக்கிப் போகிறவர்களின் உருவங்கள் அவன் கண்ணுக்கு அதை மறைப்பதும் விலகுவதுமாக இருந்தன. முன் மண்டபத்தில் கட்டியிருந்த மணியை யாரோ வீசிவிட்ட சப்தம் அவன் காதுகளில் மிருதுவாக விழுந்தது. சுட்டிப் பையன் ஒருவன் பலங்கொண்ட மட்டும் நகராவைத் தட்டி விட்ட சப்தம் பலமாக கேட்டது. அம்மன் சம்மதத்தைக் கேட்கப்போகும் அவர்களின் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ புதுப்புடவை சலசலப்பும், வளையல் சப்தமும் கேட்கவே, அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். அவன் உள்ளே உட்கார்ந்து இருந்த இடத்தின் சமீபமாகத் வந்து நின்றுகொண்டிருந்தாள் ரத்னா நடுக் கூடத்தில் கோலத்தில் வைக்கப்பட்டிருந்த இடுப்புயர குத்திவிளக்கின் வெளிச்சம் அவள் இடுப்பின் மேலிருந்து தலைவரையில் விழுந்து பளீரிட்டது. மேஜை மேல் இருந்த ஒரு பத்திரிகையை அவள் கைகள் புரட்டிக் கொண்டிருந்தன.
சாதாரணமாக இருந்திருந்தால் அவன் அவளோடு ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பான். ஆனால் அப்போது என்ன வார்த்தை பேசுவது என்று தான் அவனுக்குத் தெரியவில்லை. அதிக நாட்கள் பழகி இருந்தாலுமே அவர்கள் இருவர் உறவிடையே பிரமன் என்ன முடி போட்டிருக்கிறான் என்று சோதனை சமயத்தில் அவர்கள் எண்ணச் சுழலிடையே தவிக்கும் வார்த்கைளை வெளியிட்டுப் பேசமுடியாது. அப்படியிருக்க அறிமுகம் ஆகி இருபத்தி மூன்று மணி நேரங்கூட ஆகி இராத நிலையில்...
வெளியே போய்விட்டு அவன் திரும்பி வந்து வீட்டுப் படி ஏறினான். கலகலப்பாக இருந்தது. சற்று நிதானித்துப் பார்த்ததும்தான் தெரிந்தது யார் வந்திருக்கிறார்கள் என்று. இரண்டு நாட்களுக்கு முன் தான் கடிதம் வந்தது. சென்னையிலிருந்து, அத்திம்பேர் குடும்பத்துடன் அங்கு வந்திருப்ப தாகவும் ஊருக்குப் புறப்பட்டு வருவதாகவும்.
அத்திம்பேரை குசலப் பிரச்னம் விசாரித்துவிட்டு அத்தையைப் பார்க்க அவன் சமயலறைப் பக்கம் சென்றான். சமயலறையில் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அத்தையைப் பார்த்ததும் "சௌக்யமா அத்தை? பார்த்து ரொம்ப நாளாச்சே" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அத்தையின் அருகிலிருந்து யாரோ பரபரப்பாக எழுந்து நிற்கும் ஓசை கிளம்பியது. அப்போது தான் குரு கவனித்துப் பார்த்தான். அவனுக்கு பிரமை தட்டியது மாதிரி இருந்தது. சமயலறைக்குள் ஒரு எட்டு காலை எடுத்து வைத்தவன் நிலையில் ஒரு கையை வைத்துக் கொண்டு பின்னரிக்கப் போனான்.
கடகடவென்று அத்தையின் சிரிப்பு கிளம்பியது. "உள்ளே வாடாப்பா குரு. பயந்துடாதே! உன் அத்தங்கா ரத்னாதான். வேறே யாரும் அன்னியர் இல்லை" என்றாள்.
அதே சமயம் அவன் தாய் "நல்ல பொண்ணுடி, அம்மாஞ்சிக்கு பயந்து இப்படி ஒடறது" என்று சொன்னது அவன் காதில் விழுந்தது. நிமிர்ந்து உள்ளே நுழைந்து கொண்டே மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்தான். சமயலறையின் மற்றொரு கதவு வழியாக தாழ்வாரத்துக்கு அருகிலிருந்தவர்களை எல்லாம் விலக்கிக் கொண்டு அவசர அவசர மாக போய்க் கொண்டிருந்தாள் ரத்னா.
எடுப்பாக வளர்ந்து, மூக்கும் முழியுமாக, சாட்டை மாதிரி பின்னலுடன் தரை அதிரும்படியாக நடைபோட்டு, தலைப்பை விசிறிக் கொண்டு தனக்கு முன் தள்ளிப்போகும், ரத்னாவைப் பார்த்து குரு பிரமித்து நின்று விட்டான். அந்த உருவம் அவன் உள்ளத்தை ஒரு குலுக்கு குலுக்கியது. "நம்ப ரத்னாவா அது?" அத்தை என்று ஆவலுடன் கேட்டான் குரு.
"பின்னே அத்தை பர்மாவிலேருந்து ஒரு பெண்ணை பிடிச்சுண்டு வந்திருக்கான்னு நினச்சியா" என்று இடக்காக கேட்டாள் அத்தை. எல்லோரும் சிரித்தார்கள்.
"ரத்னா, நன்னா இருக்கு! அம்மாஞ்சி பேச வரான். என்னவோ அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறவள் மாதிரி ஓடறியே" என்று அவள் தாய் சேர்த்தாள். ரத்னா அந்த பக்கம் வந்தால்தானே?
அம்மாஞ்சி என்ற உறவுடன் அவனை அவளுக்கு அவர்கள் அறிமுகப்படுத்தினாலும், அதை உடனே சகஜமாக ஏற்றுக் கொண்டு அவனுடன் தாராளமாக பேச அவளுக்கு வரவில்லை. நல்ல ஆஜானபாகுவான ஒரு அழகிய அன்ய வாலிபன் என்ற உணர்ச்சி தான் அவளுக்கு இருந்தது.
பர்மாவில் உத்யோகமாக இருந்த குருவின் அத்திம் பேர் சண்டை ஆரம்பிப்பதற்கு நான்கு வருஷங்களுக்கு முன் ஒரு தடவை வந்து விட்டுப் போனவர்தான். பத்துவருஷங்களுக்குப் பின் இப்போது வந்திருக்கிறார், அப்போது ஐந்து வயது குழந்தையாக இருந்தாள் ரத்னா. குரு அவனைக் கூட்டிக் கொண்டு இப்போது தெய்வ சம்மதம் கேட்கப் போயிருக்கும் அதே அம்மன் கோவிலுக்கு எத்தனையோ தரம் போயிருக்கிறான். அது அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த ரத்னா இன்று அவனைக் கண்டதும் ஓடுகிறாள்.
இந்த ஆறேழு வருஷங்களாக அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்ததாலும், அவனுடைய மற்ற நினைவுகளிலும் ரத்னாவைப் பற்றிய நினைவே அவனுக்கு லேசாகத்தான் இருந்தது--ஏதோ அத்தை பெண் ஒருவள் உண்டு என்று. ஆனால் இன்று அவன் கண்களைக் குத்துப்படியாக அவள் உருவம் தாங்கி முன்னே நடக்கும் போது-
குரு திண்ணை விளும்பில் உட்கார்ந்து கோவிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கோவிலுக்குள் ஆரவாரம் அதிகரிப்பதும், மணியும் நகராவும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பதும், சந்திய கால தீபாராதனையை கோடியிலிருந்து மறுகோடி வரை இருபுறமும் வீட்டு வாசல்களில் நின்று எல்லோரும் முகம் திக்கு மாறாமல் நிற்பதும் அவன் கவனத்தை லேசுலேசாக சிதறச் செய்தாலும் மறுபடியும் அவன் சிந்தனை அந்த அம்மன் சம்மதத்திலேயே போய் நின்றது.
'தனக்கு சம்மதமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விக்கு பதில் யோசிப்பதற்குக் கூட அவனுக்கு அவகா சம்இல்லை. அவ்வளவு துரிதத்தில் அன்று காலை ஆரம்பமான பேச்சு அவனை விரட்டி பதில் எதிர்பார்த்தது.
வேறு எந்த எந்த வரன்களையோ பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் எப்படியோ திடீரென, 'ஏன், குருவுக்கே கொடுத்து விட்டால் என்ன' என்ற பேச்சில் இறங்கி விட் டார்கள். 'பேஷாக கொடுத்துடரது' 'எனக்கு இரட்டை சந்தோஷம்' பழம் நழுவிப் பாலில்' 'ஜாதகம் கூட பார்க்க வேண்டாம்' 'இன்னிக்கு வெள்ளிக்கிழமை' 'காமாட்சி சம்மதத்தை கேட்டுடுவோம்' - இந்த வேகத்தில் முன்னேறி விட்டது.
'ஆமாம் மாப்பிள்ளைப் பையனுக்கு இஷ்டம் எப்படியோ. அதைக் கேட்காமே நாம்பாட்டுக்கு பேசிண்டு இருந்தால்...' எல்லோரும் சேர்ந்தாற் போல் குருவின் முகத்தைப் பார்த்தார்கள். அவன் என்ன சொல்வது? அவனை யோசிக்க விட்டால் தானே? அவனுக்காக அவர்களே பேசிவிட்டார்கள்.
'ஆமாம் கிளி மாதிரி கொத்திண்டு போரதுக்கு யோசிக்க வேண்டியது தானே? ஏண்டாப்பா குரு, இஷ்டமில்லேன்னு சொல்லிடுப்பா. எங்கேயோ நெட்டையோ குட்டையோ பார்த்து அத்தை கொடுத்துக்கிறேன் என் பெண்ணை' என்று அத்தை பாரிகாசமும், கிண்டலும் கலந்து சொன்னாள்.
அவள் தாய் விடுவாளா நாத்தனார் பேச்சுக்கு? 'ஆமாம் அக்கா, உன் பெண்ணை கேட்டியோ. என் பிள்ளை பட்டிக் காட்டிலே வளர்ந்தவன். படிப்பும் பெரிய படிப்பு இல்லை பி.ஏ. தான் படிச்சிருக்கான். நாகரீகமாக இருக்கத் தெரியாது. உன் பெண்ணுக்கு நாகரீகமான...'
'அத்தை பேசவிடாமல் 'அம்மாஞ்சியைவிட அவளுக்கு கிடைக்கப் போறதில்லையோ உசத்தியா...'
குரு ரத்னா இவருடைய அபிப்ராயங்களும் இந்த ரீதி வார்த்தைகளிலேயே தான் உருவாகி இருக்க வேண்டும். அவர்கள் வாய் திறந்து பதில் சொன்னால் தானே, சொல்ல முடிந்தால் தானே?
அவர்கள் அத்தனை பேர்களுடைய சம்மதமும் ஆகி விட்டது. ஆனால்-
அவளுடைய சம்மதம்?
அதோ அத்தனை பேர்களும் போயிருக்கிறார்களே கேட்டுவர, அந்தக் காமாட்சி மனதிலே என்ன கொண்டிருக்கிறாள்? இந்த சபவ உள்ளப் போக்குகளுக்கு அவள் கொடுக்கப் போகும் முடிவு என்னதாக இருக்கும்? வெறும் சபலத்தை திருப்திப்படுத்துவதே போதும் என்பதானால்? அது இருக்க முடியாது, அவள் முடிவு-இது தான் நடக்க வேண்டும் என்று காலமும் சக்தியும் சேர்ந்து நிர்ணயிக்கும் ஒரு இயற்கை நியதி. மனித சத்திக்கு மீறின ஒரு அமா னுஷ்யக் கையின் ஆணை! தெய்வ சித்தம்!
இந்த தெய்வ சித்தம் எப்படி இருக்கிறதோ என்று எதிரே எட்டித் தோன்றிய தேவியின் சிலையை கூர்ந்து பார்க்க முயன்றுகொண்டே நினைத்தான் குரு. ஒரு மூச்சு கொஞ்சம் வேகமாக எழுந்து தணித்தது. கூடத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தான், ரத்னா அதே நிலையில் தான் நின்று கொண்டிருந்தாள். எழுந்து உள்ளே போகலாமா என்று யோசித்தான். கால் வரவில்லை. அவள் இன்னும் தள்ளிப் போய்விட்டாள்.
அவள் தன்ளிடமிருந்து தள்ளிப் போகப்போகிறாளா, இல்லை, நெருங்கி வரப் போகிறாளா என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும். அவன் ஏன் அவசரப்பட வேண்டும்? அதைப்பற்றி அவ்வளவு கலவரப்பட வேண்டும்? அவனுக்குள் கேட்டுக்கொண்டான். பதில் தெரியவில்லை. மனது கலவரப்படத்தான் செய்தது. ஏனோ? அவனுக்கு தெரியவில்லை.
மறுபடியும் கோவில் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்.
இருட்ட இருட்ட திருவாச்சி விளக்குகளின் ஒளியில் அம்மன் காப்பக்கிரகம் தங்க அறையாக பளீரிட்டது. குருக்களின் உருவம் நிழல் போல அதற்குள் தெரிந்தது. தீபாராதனை ஆவதற்கு சூசகமாக மணி சப்தமும் நகரா ஒலியும் ஆர்ப்பாட்டமாக ஒலித்தன. குரு உட்புறம் திரும்பிப் பார்த்தான். ரத்னா தனிமையில் வெறிச்சென்ற உணர்ச்சி காட்டும் முகத் தோற்றத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நிலைமை தர்ம சங்கடமாக இருந்தது. அவள் உள்ளே தனிமையில், தான் அங்கே வெளியில் பரபரப்புடன்.
தீபாராதனை ஆகப்போகிறது. தீபாராதனை எடுத்தானதும் அவள் சம்மதத்தை கேட்கப்போகிறார்கள். இரண்டு புஷ்பங்கள் - ஒன்று வெள்ளை நிறம்; மற்றொன்று நல்ல சிவப்பு. ஒரே மாதிரி பொட்டலங்களாக கட்டி அவள் பக்கத்தில்! தேவியின் அர்ச்சனைக் குங்குமம் அவற்றின் மீது விழும். ஒரு பச்சைக் குழந்தை. விருப்பு, வெறுப்பு அறியாத ஒரு சிறு ஜீவன், இரண்டில் ஒரு பொட்டலத்தை எடுக்கும் அதில்...
'வெள்ளை புஷ்பம்!'
அது கிடைக்குமா? அவன் மன தில் வலைபோட்டுச் சுழன்றது.
தீபாராதனை ஆரம்பமானது. குரு உட்பக்கம் சரேலென்று திரும்பினான். தீபாராதனை நடக்கிறது, பார்க்க வா!' என்று வெகு அவசரமாக ஒரு தரம் சொல்லி முடித்தான். அவள் பெயர் சொல்லி அவளை அழைத்ததாக நினைத்துக் கொண்டான், அடுத்த க்ஷணம் தான் அவனுக்குத் தெரிந்தது தான் அவள் பெயரை உச்சரித்துக் கூப்பிடவில்லை என்று. வார்த்தைகளை வெளியே கிளப்பாத மனக் குரலாகவே அது நின்று விட்டது என்றும் மற்ற வார்த்தைகள் தான் வெளியேறின என்றும் அறிந்ததும் சிரித்துக் கொண்டான். அவன் வந்தது முதல் ரத்னா என்று கூப்பிட்டதில்லை. பேசியதும் இல்லை. எப்படி அவன் முழுதும் அன்யமாகத் தோன்றிய ஒரு பெண்ணை அவ்வளவு சகஜ பாவத்துடன் பேர் சொல்லிக் கூப்பிட முடியும்? அதுவும் அப்போதைய நிலைமையில்?
அவன் கூப்பிட்டது ரத்னாவின் காதுகளில் விழுந்தது. அந்த அழைப்பும் குரலும் புதுசாக இருந்தது. அதோடு வெறிச்சென்ற, தனியே இருந்த நிலையில் அதை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் மனதில் பட்டது. கூப்பிட்டதற்கு இணங்கி வாசலுக்குப் போவதா என்று ஒரு க்ஷணம் தயங்கி நின்று யோசித்தாள். அடுத்த க்ஷணம் ஒரு துணிச் சலை வரவழைத்துக்கொண்டு மெதுவாக எட்டு வைத்துப் புறப்பட்டாள்.
'சீக்கிரம். வா ரத்னா, கற்பூர ஹாரத்தி ஆகிறது என்று அவசர அவசரமாக அழைத்தான் குரு அவன் தயக்க நடையைக் கண்டு. அவ்வளவுதான் ரொம்ப சொந்தத்துடன் வந்த அந்த அழைப்பிற்குமேல் தயக்கம் கலைந்துவிட்டது. ரத்னா, வேகமாகச் சென்று திண்ணையிலிருந்து கோவில் பக்கம் பார்த்தாள். கற்பூர ஹாரத்தி கண்களில் பட்டது. புடவைத் தலைப்பின் நுனியை தொங்க விட்டு, விட்டு இரு நின்று கைகளாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அந்தக் காட்சியில் ஈடுபட்டாள்.
'கூடத்தில் தனியாக இருக்க வெறிச்சென்றிருந்தால் இங்கேயே இரேன், அவர்கள் சீக்கிரம் வந்து விடுவார்கள்' என்றான் குரு. வார்த்தைகள் தடுக்கித் தடுக்கி வந்தன.
ரத்னா அவன் முகத்தைப் பார்த்தாள். லேசான சிரிப்பு உதடுகளில் தோன்றியது. அவளுக்கும் பேசத்துணிவு வந்துவிட்டது. 'அம்மாஞ்சி காவல் இருக்கிற வரைக்கும் எனக்கு என்ன பயம்? கூடத்திலேயே இருக்கேன்' என்று சொல்லிக்கொண்டே உள் பக்கம் திரும்பிப் புறப்பட்டாள்.
'அப்படியானால் அம்மாஞ்சி உனக்கு எப்போதும் காவல் இருக்கவேண்டும் என்று சொல்லு' என்று தடதடவென்று பேசி விட்டான் குரு. தான் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது அவள் ஒரு தரம் நின்று அவனை புருவம் சுருங்க பார்த்து, 'கேலி பண்ணாதே' என்று சொல்வது போல் ஜாடை காட்டி போனதும் தான் அவனுக்குப் பட்டது.
அடுத்த க்ஷணம் அவன் நினைத்தான்; செகப்புப் பூ அகப்பட்டு விட்டால்...?
அவன் முகத்தில் சற்றுமுன் தோன்றியதற்கு நேர் எதிரிடையாக முகக்குறி படர்ந்தது. அவன் கேலி அர்த்தமற்றதாகி விடுமல்லவா? அவனுக்கு சுருக்கென்றது. அவன் சம்மதம்? சம்மட்டியடி மாதிரி திருப்பித் திருப்பிக் கேட்டது மனதில். ரத்னா தன்னுடையவள் ஆவாளா? அவன் மனது தவித்தது. கோவில் பக்கம் திரும்பிப் பார்த்தான். கோவிலை விட்டு கோஷ்டியாக அவர்கள் வெளியேறியது அவன் கண்களில் பட்டது.
வீட்டின் உட்புறம் திரும்பி இரண்டு எட்டுக்கள் டுத்து வைத்தான். தொடர்ந்து அவளோடு பேச்சுக் கொடுத்தால் நிம்மதி ஏற்படும் என்று, 'திரும்பி வரா' என்று ரத்னா காதில் படும்படியாக சொன்னான்.
அப்போது எண்ணை குறைந்து வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்த குத்து விளக்கிற்கு எண்ணை விட்டுத் திரியை தூண்டிக் கொண்டிருந்தாள் ரத்னா. தூண்டிக் கொண்டே தன்னை நோக்கி வரும் குருவை கவனித்தவள் நிமிர்ந்து பக்கத்து தூணுக்கு நகரப் போனாள், அவனையும் குத்து விளக்கையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டே.
அதேசமயம் தூண்டி விட்ட சுடரிலிருந்து சொட சொட சப்தத்துடன் ஒரு பூ உதிர்ந்து கிழே விழுந்தது.
குருவும் அதை கவனித்து விட்டான். பேச விஷயம் அகப்பட்டது. ஒரு பிரகாசம் அவன் முகத்தில் ஏற்பட்டது. "ரத்னா பூ உதிர்ந்தால் என்ன தெரியுமா?" என்றான்.
"ஆமாம். அம்மாஞ்சிக்கு இந்த வருஷம் பரீ¬க்ஷ பாஸாயிடும்" என்று சமாளித்துப் பேசினாள் ரத்னா.
குரு அடக்கமாக சிரித்தான். "இல்லை அத்தங்காவுக்கும்..."
எனக்கு படிப்பு முடிந்து விட்டது' என்றாள் ரத்னா புன் சிரிப்புடன்.
'அதைச் சொல்ல வரவில்லை - நான் சொல்ல வந்தது... அவன் சொல்லப் போவதை யூகித்த தோரணையுடன் ரத்னா அவனைப் பார்க்காமல் பார்த்தாள். அவன் மேலே ஏதோ கேலியாகப் பேசப்போவதாகத் தோன்றியது. அப்போது வாசலிலிருந்து வந்த ஒரு கூவின குரல் அவர்கள் சம்பாஷணையை முறித்தது. இருவரும் ஒரு அதிர்ச்சியுடன் பார்த்துத் கொண்டார்கள். ஒரு வினாடிதான் அந்தப் பார்வை! அடுத்த வினாடி ரத்னா பார்வையை திருப்பிக்கொண்டு தலைகுனிந்து கொண்டு தள்ளிப் போய் விட்டாள். குரு அதற்குமேல் அந்த இடத்தில் நிற்க முடியாமல் உள்ளக் கிளர்ச்சியுடன் வாசல் பக்கம் போகத் திரும்பினான்.
கையில் அம்மன் பிரசாதத் தட்டுடன் திண்ணைப் படியேறிக் கொண்டிருந்த அவன் அத்தை, கூட வந்த அவன் தாயிடம் சொன்னாள், அவர்கள் காது கேட்க; 'பார்த்தாயா மன்னி, இதற்குள்ளேயே அவர்கள் ரகசியம் பேசி விட்டார்கள்'.
'ஏனப்பா குரு, ஏது ரெண்டு பேரும் ரொம்ப பழகிட்டேள் போலிக்கே?' என்று அவன் கிட்ட வரவும் கேட்டாள்.
'இனிமே நிறைய பேசிக்கட்டுமே' என்று அவன் தாய் சொன்னாள். இருவர் சிரிப்பும் கலந்தது.
அவர்கள் கேலியையும், சிரிப்பையும் லக்ஷியம் செய்யாதவன் போல் குரு அவர்களைத் தாண்டி வாசலுக்கு வரப் பார்த்தான்.
'இந்தாப்பா அம்மன் பிரசாதம்!' என்று அத்தை தட்டை அவன் பக்கம் நீட்டிக் கொண்டே 'ரத்னா, இந்தா உனக்கும்' என்று அழைத்தாள்.
குரு அவசர அவசரமாக அந்தத் தட்டிலிருந்த குங்குமத்தை சிரத்தையுடன் எடுத்து நெற்றியில் அழுத்தமாக இட்டுக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றான். தெருவின் வலது கோடிப் பக்கம் பார்த்தான். தன் சம்மதத்தையும் கொடுத்துவிட்ட அவன் உருவம் அவன் கண்களில் தள்ளி இருந்து விழுந்தது. அவன் நிறைந்த இருதயம் அவளை மறுபடியும் வணங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன