
காலையிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் வருகிறார்கள்; ஏதேதோ மாற்ற வேண்டும் என்கிறார்கள்.!
‘காரைப் பேந்திருக்கிறது. ஓடுகள் சரிந்திருக்கிறது. சுவற்றின் சாந்து உதிர்ந்திருக்கிறது.. ‘ என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.!
நூறாண்டுகள் வாழ்ந்த என்னிடம். இந்தக் குறைகள் கூட இருக்காதா என்ன.?
வயதான உங்கள் பெற்றோர்களை இப்படித்தான் நிர்கதியாய் விடுவீர்களா?
உன் கொள்ளுத்தாத்தா முதல் உன் செல்லப்பெண் வரை தவழ்ந்து வளர்ந்தது என் பாதுகாப்பில் தானே.!!
எதிரில் இருந்த ‘சாந்தி இல்லம்’. ‘அன்புப்பூங்கா’ போல என்னையும் தரைமட்டமாக்கும் நாள் வந்துவிட்டதோ?’ என்று நான் வருந்திய நேரம் வாசலுக்கு வந்தார்.. என்னில் வாழும் செல்லதுரை.
“என்ன அண்ணா. வீடெல்லாம் ஒரே களேபரம்மா இருக்கு.?” பக்கத்து தெருவில் வசிக்கும் அவர் தம்பி ரவி கேட்டார்.
“பாப்பாக்கு கல்யாணம் வச்சிருக்கேன் ரவி. விசேஷத்தைப் பாக்க அப்பா அம்மா தான் கூட இல்ல. அதான் அவுங்க வாழ்ந்த வீட்டுல அத நடத்துனா அவுங்க ஆசி கிடைச்சதா எனக்கு ஒரு ஆறுதல். அதான் வீட்டைச் சரி பாக்க ஆளுங்கள வரச் சொல்லிருக்கேன். கொஞ்சம் நீயும் கூடமாட ஓத்தாசையா இருப்பா.!” இதைச் சொல்லும்போது கண்கள் கலங்கியது செல்லதுரைக்கு மட்டும் இல்லை. நான் புதுப்பொலிவுடன் மீண்டும் வாழப் போகிறேன். பலரை வாழ வைக்கப்போகிறேன் என்று அறிந்த நானும் தான்.!
