
கதிர் அறுப்பு வேலை முடிந்தபிறகு, தன் குடும்பத்திற்கான நெல் கூலியை வாங்க தன் கோணி சாக்கு பையை விரித்து நீட்டினாள் பொன்னம்மா.
“ஏ பொன்னம்மா… அந்தச் சாக்குல கொஞ்சம் ஓட்டை இருக்கு பாரு…” என்றாள், உடன் வேலை பார்க்கும் ராசம்மா.
“அதுல கொஞ்சம் வைக்கோலை சொருகி ஓட்டையை மறைச்சுக்கலாம்… இந்தக் கிழிசல் சாக்கு மட்டும்தான் என்கிட்ட இருக்கு”
“சரி… போகும்போது ஓட்டை இருக்கிற பக்கத்தை மேல்புறமா வைச்சு தூக்கி விடறேன்”
பொன்னம்மா நடக்க ஆரம்பிக்க, களத்தோரம் இருந்த சில குருவிகள் அவள் மூட்டை மீதுள்ள ஓட்டையைப் பிரித்து, அதில் உள்ள நெல் மணிகளைக் கொத்தி எடுக்கத் துவங்கின.
அவற்றை விரட்ட மனம் இல்லாமல், சிரித்த முகமாய் நடையைக் கட்டினாள் பொன்னம்மா.
