இடிவதற்குள் வா – ஸ்ரீராம்


நூறு ஆண்டுகளைக் கடந்து இருப்பவையும் உண்டு, அல்பாயுசிலேயே இடிபடுவதும் உண்டு என்ற நிலையில் நான் எப்போது இடிபடுவேன் என்று எனக்கே தெரியாது. என் உடல் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது.

என்னைப் போன்ற கல்லாலும் மண்ணாலும் ஆன வீடுகளுக்கெல்லாம் கூட உணர்வுகள் இருக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்தவர்களை கண்ட எனக்கு எல்லோரையும் பிடிக்கும், பிடித்து தான் ஆக வேண்டும் என்ற போதும் என்னுடைய மனதுக்கும் மிகவும் நெருங்கிய ஒரு ஜீவன் இருந்தது.

அது லஷ்மி. பிறந்தது முதல் தொட்டிலை, நாற்காலியை, கட்டிலை, சோபாவை, நாடாமல் தரையிலேயே அமர்ந்து, படுத்து, சுவரிலே சாய்ந்து அமர்ந்து என்று என்னுடன் முழுவதும் சொந்தம் கொண்டாடிய ஜீவன்.

என் மீது எங்காவது அழுக்கோ, கறையோ கண்டால், என்னிடம் பேசிக் கொண்டே அதை மென்மையாக துடைத்த சுத்தம் செய்வாள் லஷ்மி. என் கண் முன்னாலேயே வளர்ந்து, படித்து, வேலைக்கும் சென்று சில மாதங்கள் வரையும் இங்குதான் இருந்தாள்.

அவள் திருமணம் ஆகி சென்று இதோ 50 வருடங்கள் ஓடிவிட்டன.

அவள் என் மீது காட்டிய அக்கறைக்கும் நேசத்துக்கும் அவ்வப்போது வந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்து இருந்தேன். வாசலில் கார் சத்தம் கேட்கும் போதெல்லாம் ‘அவள் தானா, வந்துவிட்டாளா என்று காரை உதிர கல்லும் மண்ணும் பதற எதிர்பார்த்து ஏமாறுவேன், காலங்கள் சென்றதே தவிர கண்மணி அவள் வரவே இல்லை. இப்போது இத்தனை வருடங்கள் கழித்து ஒரு முறையாவது அவள் வருவாள் என்று வாசலை பார்த்தபடி காத்திருக்கிறேன்.

‘இடிவதற்குள் வா மகளே! வந்து ஒரு முறை என்னை தழுவு.!’

One Comment on “இடிவதற்குள் வா – ஸ்ரீராம்”

  1. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வீட்டிற்கும் உணர்வுகள் உண்டு என்று மனதை நெகிழ வைக்கும் கதை.

    கீதா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன