
தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.
(ஆனால், முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் இவரல்ல; அது ச.ம. நடேச சாஸ்திரியார். ‘சாஸ்திரி’ எழுதிய ‘தானவன்’ தான் (1894) தமிழில் வெளியான முதல் துப்பறியும் நவீனம்) பிற்கால நாவல்களின் துப்பறிவாளர்களான துப்பறியும் கோவிந்தன் (ஜே.ஆர்.ஆர்), திகம்பரசாமியார் (வடுவூரார்) சங்கர்லால் (தமிழ்வாணன்), சிங் (புஷ்பா தங்கதுரை), கணேஷ் (சுஜாதா), ராஜா (ராஜேந்திரகுமார்) விவேக் (ராஜேஷ்குமார்), பரத் (பட்டுக்கோட்டை பிரபாகர்), நரேந்திரன் (சுபா), பிரசன்னா (தேவிபாலா) என்றெல்லாம் வரும் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கெல்லாம் முன்னோடி, ஆரணி குப்புசாமி முதலியார் படைத்த ‘ஆனந்த்ஸிங்’ தான்.
ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், ஆர்தர் கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைத் தமிழ்ப்படுத்தியே குப்புசாமி முதலியார் நாவல்கள் எழுதி வந்தார்.
என்றாலும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் நடை, உடை, பழக்க வழக்கங்களையும் மாற்றி விடுவார்.
தமிழில் ‘வெகு ஜன இலக்கியம்’ என்பதற்கு வித்திட்ட முதல் எழுத்தாளர் ஆரணி குப்புசாமி முதலியாரே!. அக்காலத்தில் மத்தியதர வர்க்கத்திடையே வாசிப்பார்வம் பெருக இவரது எழுத்துக்களே முக்கிய காரணமாய் அமைந்தன.
எழுத்தாளர் மட்டுமல்ல; பத்திரிகை ஆசிரியரும் கூட. அவர் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘ஆனந்தபோதினி’ அக்காலத்திலேயே (1915-20களில்) 20000 ஆயுள் சந்தாதாரர்களைக் கொண்ட இதழாக இருந்தது. ஹிந்து மதத்தின் மிகுந்த பற்றுக் கொண்டவர். மதமாற்றத்தை மிகக் கடுமையாக எதிர்த்தெழுதியவர்.இவரைப் பற்றிய கட்டுரையை வாசிக்க/கேட்க : பார்க்க முதல், இரண்டாம் கருத்துப் பெட்டி.
இவரைப் இன்னும் சில குறிப்புகள் :
இவர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் மாவட்ட பள்ளி ஆசிரியராகவும் பின்பு கலால் துறையில் கண்காணிப்பாளராகவும். 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புகழ் பெற்று விளங்கிய நூலாசிரியர் நாகவேடு முனுசாமி முதலியார் நடத்தி வந்த ‘ஆனந்த போதினி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் ‘ஆனந்த போதினி’ 20,000 பிரதிகள் விற்பனை ஆகும் அளவிற்குக் காரணமாக இருந்தது. இவரது தொடர் கதைகளும், நாவல்களும் தான்! நடுத்தர குடும்ப மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பரவுவதற்கு இவரது எழுத்துக்கள் காரணமாக இருந்தன.
இவர் ஏறத்தாழ 75 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானனை துப்பறியும் கதைகளே. அவற்றுள் சில பல பாகங்களைக் கொண்டு மிக நீண்ட நாவலாக வெளிவந்துள்ளன. இவருடைய ‘ரத்தினபுரி ரகஸியம்’ 9 பாகங்களையும் ‘ஞான செல்வம்மாள்’ 5 பாகங்களையும் கொண்டது. இவர், ஒரு நாளைக்கு பல மணிநேரம் எழுதும் பழக்கம் கொண்டவர். இவரது நாவல்கள் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும், பெயர்களும் சம்பவ இடங்களும் தமிழ் மரபுடன் அமைந்தவை. இவர். பகவத் கீதை, கைவல்ய நவநீதம் ஆகிய நூல்களுக்கும் விளக்கவுரை எழுதி வெளியிட்டார்.

