சுசி கிருஷ்ணமூர்த்தி/எல்மோ! எல்மோ!’


()

தீபாவளிக்கு எங்கள் குடும்ப நண்பரின் அழைப்பின் பேரில் போனவருடம் தீபாவளியை அவர்கள் கிராமத்து பங்களாவில் அவர்கள் குடும்பத்தினருடன் கோண்டாடினோம்.

வெளியிலிருந்து பார்க்கும்பொழுது சினிமாவில் வரும் பழைய ஆவிகள் பயமுறுத்தும் பங்களா போல் இருந்தது அந்த மாடி பங்களா வீடு.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நான், என் கணவர், அமேரிக்காவிலிருந்து அவர் பெண், மாப்பிள்ளை, பேத்திகள் 5 வயது சுபா, 3 வயது சஹானா எல்லோரும் வந்துவிட ஒரே ரகளைதான் அங்கே.

ரெண்டு பேத்திகளுக்கும் எந்த பொம்மை யாருக்கு என்று கொலை சண்டையாக இருந்ததால், மாப்பிள்ளை சுபாவை மேல் பகுதியில் வைத்து விளையாட்டு காட்ட, கீழே எங்க கூட சஹானா விளையாடிக் கொண்டிருந்தது.

அன்று இரவு எல்லோரும் சேர்ந்து தியேட்டரில் ‘காஞ்சனா 3’ தீபாவளி ரிலீஸ் படம் பார்த்து விட்டு வந்து,, மறுநாள் தீபாவளிக்கு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதால் எல்லோரும் படுக்கச் சென்று விட்டோம்.

மேலே ஒரு அறையில் மட்டும் ஏசி வசதி இருந்ததால் என் கணவரும் நண்பரும் அங்கு படுக்க, எனக்கு ஏசி ஒத்துக் கொள்ளாது என்பதால் நான் வேறு தனி அறையில் படுக்கச் சென்றேன்.

புது இடம் என்பதால் தூக்கம் வராமல், . திரும்பி திரும்பி படுத்தேன்.

திடுமென்று குழந்தை சிரிக்கும் சத்தம் கேட்டு, முதலில் ஏதோ பிரமை என்று நினைத்து வேறு பக்கம் திரும்பிப் படுத்தேன்.

உடனே ‘எல்மோ !எல்மோ!’ என்று குழந்தையின் குரல் கேட்க, காஞ்சனா படம் பார்த்ததின் விளைவு என்று என்னை நானே தேற்றிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேவுடன் சத்தம் நின்றுவிட்டது.

பிரமைதான் என்று எனக்கு நானே சிரித்துக் கொண்டு, படுத்தவுடன் திரும்ப குழந்தை சிரிக்கும் சத்தம் மற்றும் வேறு பக்கம் திரும்பினால் ‘எல்மோ! எல்மோ’ சத்தம்’ என்ற சத்தம்.

போர்வையை வைத்து முகத்தை மூடிக்கொண்டாலும், சத்தம் நிற்காததால் பயத்தில், கந்தசஷ்டி சொன்னால் பயம் போகும் என்று சொல்ல ஆரம்பித்தேன்.

கொஞ்சம் கூட நகராமல் காதைப் பொத்திக் கொண்டு சொல்லும் போது, கூடவே ‘எல்மோ! எல்மோ!” என்று தாளம் போடுவது போல் குரல் வந்துக் கொண்டே இருக்க திடுமென்று படபடவென்று ஒரே சத்தம் கேட்டு “ஓ’ வென்று அலறி அப்படியே மயங்கிவிட்டேன்.

என் முகத்தில் தண்ணீர் தெளிக்கும் உணர்வு தோன்றி விழித்துக் கொண்டால். அறையில் லைட் வெளிச்சம்.

என்னை எழுப்பி உட்கார வைத்துவிட்டு எல்லோரும் கவலையுடன என் முன்னால் நின்றிருக்க, நான் ‘பேய்!’ என்று சொல்வதற்கு முன்னால் சுபா ‘பாட்டி! பட்டாஸ் பயமா?” என்று கேட்டு சிரிக்க, நான் கடைசியாகக் கேட்டது பட்டாசு சத்தம் என்று எனக்குத் தெரிந்தது.

அவர்களிடம் குழந்தை சத்தம் கேட்டதை சொன்னால் யாருமே நம்பவில்லை என்பது மட்டுமல்ல, என் கணவர் “ இனிமே நீ காஞ்சனா மாதிரி படம் பார்க்கக் கூடாது என்று ஆர்டர் போட ஏல்லோரும் என்னை ஏளனமாக பார்த்தது போல் எனக்கு தோன்றியது.

பிறகு என்னை பார்த்தால் பாவமாக இருந்ததோ என்னவோ, ‘நீ கொஞ்சம் படுத்துக்கோ. நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லி என்னை படுக்க வைத்தார்.

நான் படுத்தவுடன், ‘எல்மோ! எல்மோ! என்று சத்தம் கேட்க, நான் ‘சொன்னது பொய் இல்லை’ என்பது மாதிரி நான் அவர்களைப் பார்க்க, யாரும் எதுவும் பேசுவதற்கு முன், சுபா என்னைத் தள்ளி விட்டு ‘என்னோட எல்மோ டால் – என்னோட எல்மொ டால்” ன்னு மெத்தைக்கு அடியில் சஹானாக்கு தெரியக்கூடாது என்று ஒளிச்சு வச்சிருந்த பொம்மையை எடுத்தது .

அது அமுக்கினா சிரிக்கும் – அமுக்கினா ‘எல்மோ! எல்மோ’ ன்னு கத்தும் பொம்மை,
ராத்திரி பூரா என்னை பயமுறுத்திய பொம்மையை வைத்து, நான் பயந்த கதையைக் கேட்டு அங்கே ஒரே சிரிப்பு.

சுபாகுட்டி மட்டும் “எல்மோ குட்டி! பாட்டி உம்மேலே படுத்துண்டதும் நோக்கு ரொம்ப வலிச்சுதா – பாவம்” ன்னு கொஞ்சினதைக் கேட்டதும் அங்கே ஒரே சிரிப்பு வெடிதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன