
பாபு பள்ளியிலிருந்து வந்த உடனே தன்னோட புத்தகப் பையை மேஜை மீது போட்டுவிட்டு வேகமாக தோட்டத்திற்கு ஓடினான் .ஆம் அவன் செல்லமாக வளர்த்து வந்த புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்காக. அவனுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அதனுடன் விளையாடுவான் .இன்றும் விளையாடுவதற்காக ஓடி வந்த பாபுவிற்கு ஏமாற்றம் .அந்த ஆடு அங்கு இல்லை .சுற்றிலும் தேடினான் காணவில்லை .அம்மா புஜ்ஜிய காணோம் என்று கத்திக் கொண்டே வந்தான்.அவன் அம்மாவும் அங்கே தான் எங்காவது மேஞ்சுக்கிட்டு இருக்கும் சரியா பாரு என்றாள். இல்லம்மா, எங்கேயும் காணல என்றான் பாபு. அவன் அம்மாவும் ஆட்டைத் தேடினாள் காணவில்லை. உடனே அம்மாவுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. நேற்று காதர் பாய் இந்த வழியா போன போது பக்ரீத் பண்டிகைக்காக இந்த ஆட்டை விலைக்கு கேட்டார். நான் தரமாட்டேன் என்று சொன்னேன். எவ்வளவு ரூபாய் கேட்டாலும் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டேன். ஒருவேளை அவர் ஆட்டை ஓட்டிக்கொண்டு போயிருப்பாரோ என்று மனதிற்குள் நினைத்தாள். இரவு பாபுவுக்கும், அவள் அம்மாவுக்கும் தூக்கம் வரவில்லை. பாபு புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டே இருந்தான்.காலை எழுந்தவுடன் கண்ணைக் கசக்கிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான் பாபு. மே.. மே..என்று சத்தம்கேட்ட திசையை நோக்கி ஓடினான். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து கிடந்தது புஜ்ஜி. அம்மா… அம்மா. ..சீக்கிரம் இங்க வா என்று கத்தினான் பாபு. அவன் அம்மாவும் வேகமாக வந்துகுழியில் விழுந்த ஆட்டை தூக்கி வெளியில் கட்டுவதற்காக அழைத்துக் கொண்டு சென்றாள். அவள் மனதில் ஒரு நிமிடம் ‘ஐயோ’ !காதர் பாய் பற்றி தவறாக நினைத்து விட்டேன். என்ன மன்னிச்சிடுங்க பாய் என மனதிற்குள்மன்னிப்பு கேட்டாள்.
