
கீதா திருமணமாகி திருச்சியில் கணவ ரோடு தனிக்குடித்தனம் போனாள். சாமான்களை எடுத்து வைக்கும் போது அப்பாவின் புகைப்படத்தை மாட்டினாள். அப்பா ரொம்ப கண்டிப்பானவர் எந்த வேலையிலும் கௌரவம் பார்க்க கூடாது, எல்லா வேலையும் செய்ய வேண்டும்,ஆடம்பரம் கூடாது, எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். அப்பாவை பற்றி தோழியிடம் கூறும்போது ஹிட்லர் என்றே குறிப்பிடுவாள்.ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்? திருமணமான பின் கணவர் வீட்டில் சுதந்திரமாக இருக்கலாம் என உள்ளூர ஒரு மகிழ்ச்சி. முதல் ரெண்டு நாட்கள் கணவர் வெளியிலிருந்து சாப்பாடு வாங்கி வந்தார். மூன்றாம் நாள் நீ சமையல் செய் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் இனி இந்த வீட்டுக்கு நீதான் எஜமானி என்றதும் அவளுக்கு பெருமையாக இருந்தது.மறுநாள் முதல் அவள் எல்லாமே செய்ய தொடங்கினாள். தூக்கத்தில் அப்பா கனவில் வந்து “என்ன கீதா இதை நான் சொல்லும் போது நீ விரும்பவில்லை. ஆனால் உன் கணவன் சொன்னால் செய்கிறாயா “என்று கேட்டார் அப்போதுதான் அவள் ஒரு உண்மையை புரிந்து கொண்டாள். அப்பா கூறும் போது கோபம் வந்தது. ஆனால் அன்று வேலை செய்ததால் தான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். கண்டிப்பு பாகற்காய் போன்றது முதலில் கசக்கும் பின்பு வலு சேர்க்கும்.
