
துளி அன்புக்காய்
ஏங்குவோரை
ஏமாற்றாதீர்கள்
வெறும் சொற்களுக்கே
உயிரை தரத்
துணிந்தவர்களை
விலக்கி வைக்காதீர்கள்
கனவுகளின் மீது
உங்கள் கைப்பற்றி
நடப்பவர்களை
உதறித் தள்ளாதீர்கள்
யாரும் வேண்டாம்
நீ இரு போதுமென்போரை
புறக்கணித்து விடாதீர்கள்
அவர்கள் உங்களை மட்டுமே
நம்பி நத்தை ஓடென
சுமந்து அலைபவர்கள்
உங்கள் உலகத்தில் அவர்கள்
வெறும் சிறு புள்ளி
அவர்களுக்கு நீங்கள் தான்
உலகம்
அவர்கள் உங்களை
நம்புகிறார்கள் எனில்
அவர்களை நீங்கள்
நம்ப வைத்தீர்களென்பதை
மறுக்க இயலாது
மரணத்தை விட கொடிது
நம்பியவர்களை
கைவிடுதல்
ஒருபோதும் யாருக்கும்
அதைச் செய்யாதீர்கள்
