சசிகலா விஸ்வநாதன்/வாய்ச் சொல்லில் வீரரடி


😟

அழகிய சிங்கரின் என்பா சரம்
இன்றைய என்பா
( வாய்ச் சொல்லில் வீரரடி- ஈற்றடி)
😟
(1)
நான் இருக்கிறேன்; கவலை விடுங்கள்!
நான் இருக்கிறேன்
பயம் எதற்கு!
என்னும் வாய் தான் சொல்லுமவர்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(2)
வானத்தை காலால் நான் அளப்பேன்!
மணலைக் நான் கயிறாய் திரிப்பேன்!
வாய்தான் காது வரை நீளும்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(3)
“எல்லாம் பார்த்துக்கலாம்; நான் செய்கிறேன்”
சொல்லும் அவர் வெறும் வாய்வித்தகர்
வெறும் வாயில் வெல்லம் மெல்லும்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(4)
காண ஒரு புண் இல்லை
காட்ட ஒரு வியாதி இல்லை
ஓயாமல் சாக்கு போக்கு சொல்லுமவர்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(5)
கால் அகட்டி நிற்பார் அவர்;
கை ஆட்டி பேசி நிற்பார்;
காரியம் ஏதும் செய்திடார் அவர்
கால் காசுக்கு பயனில்லாத அவர்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(6)
மீசை முறுக்கி விட்டு அவர்
முன்னும் பின்னும் தான் நடந்து,
ஆகாத்தியம் காட்டிடுவார்; அழிச்சாட்டியம்தான் செய்திடுவார்;
வாய்ச் சொல்லில் வீரரடி!
😟
(7)
பட்டும் படாமல் பேசிடுவார் அவர்;
எளியோர்க்கு எட்டாமல் வேடிக்கை காட்டுவார்!
திட்டமாய் எதுவும் செய்திட மாட்டார்;
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(8)
உப்புப் பெறாத விஷயத்தை
ஊதியே பெரிதாக்குவார்
ஊர் முன் உரத்துப் பேசுவார்
முருங்கை ஏறும் வேதாளம் அவர்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(9)
முன் வந்து நின்று அவர்
என் போன்றோரிடம் காரியம் ஏவுவார்
இங்குள்ள துரும்பை இம்மியும் நகர்த்தார்
வாய்ச் சொல்லில் வீரரடி
😟
(10)
செய்த வேலையில் பழுது சொல்வார்
செய்யாத வேலையைச் சுட்டிக் காட்டி
இல்லாத ஏகடம் செய்யும் அவர்
வாய்ச் சொல்லில் வீரரடி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன