பேராசிரியர் வி. கமலம் பதிவு

மகான்கள் வாயிலிட்டுக் குதப்பிக் கொடுக்கும் பொருட்களை உச்சிஷ்டம் என்கிறோம். மகான்களின் உமிழ்நீர் கலந்த உணவுப் பொருட்கள் மகா பிரசாதமாம். நமது பாபங்களையும், கர்மவினைகளையும் போக்கும் மகா சஞ்சீவி அது.

முதன் முதலில் நான் உச்சிஷ்டம் பெற்றது புரவிப்பாளையம் கோடி ஸ்வாமிகளிடமிருந்துதான். நான் கோவையில் வசித்து வந்தபொழுது, ஸ்வாமிகளைக் காண அவ்வப்பொழுது புரவிப்பாளையம் செல்வது வழக்கம். ஒருமுறை ஸ்வாமி, ஒரு சாக்லெட் மிட்டாயை வாயிலிட்டுக் குதப்பி என்னிடம் கொடுத்தார். சாப்பிட விருப்பமில்லாமல் கையில் வைத்துக் கொண்டு தயங்கினேன். அருகிலிருந்த என் தமையனார் வாயிலிடும்படி சைகை காட்டினார். விருப்பமில்லாமலேயே நானும் வாயில் போட்டுக் கொண்டேன். ஸ்வாமியின் சன்னதியை விட்டு வெளியே வந்த பின்பு, என் தமையனார், உச்சிஷ்டத்தின் மகிமையைப் பற்றிக் கூறினார். மற்றொரு சமயம், வாழைப் பழத்துண்டு ஒன்றைக் குதப்பிக் கொடுத்தார். மீதி வாழைப் பழத்தை நாக்கில் ஒற்றி என் தமையனிடம் கொடுத்தார். அதன் அடிப்பாகத்தில், வாழைப்பழத்தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அதையும் சேர்த்து என் தமையனார் பயபக்தியுடன் சாப்பிட்டார். இம்முறை நானும் தயக்க மின்றிப் பழத்துண்டைச் சாப்பிட்டேன்.

அடுத்து எனக்கு உச்சிஷ்டம் கொடுத்து அருள் பாலித்தவர், கன்னியாகுமரி மாயம்மா அவர்கள். நான், வேலை நிமித்தம் சேலம் வந்து சேர்ந்தபின், ஏற்காடு அடிவாரத்தில் எழுந்தருளியிருந்த மாயம்மா அவர்களை அடிக்கடி தரிசிக்கச் செல்வேன். மாதேவகி, சாது ரங்கராஜன், பொன் காமராஜ் ஆகியவர்களுடன் அம்மாவைத் தரிசிக்கச் சென்றிருக்கிறேன் ஒரு முறை சாது ரங்கராஜன் அவர்களுடன் சென்றிருந்தபோது, இராஜேந்திரன் அவர்கள் அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒவ்வொரு கவளமாகக் கொடுக்கக் கொடுக்க, அம்மா அதைக் குதப்பிக் குதப்பி சாது ரங்கராஜன் அவர்களுக்கும், எனக்கும் மாறி மாறி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். என்னே எங்கள் பெரும்பேறு என்று எண்ணிக் கொண்டேன்.

ஒரு சமயம், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. திருவண்ணாமலைக்குச் செல்ல இயலாத நிலையில் என் கணவர் என்னை மாயம்மாவிடம் அழைத்துச் சென்றார். அம்மாவின் முன் நாங்கள் இருவரும் அமர்ந்திருந்தோம். மௌனமாக அமர்ந் திருந்த அம்மா திடீரென்று வாய்நிறைய உமிழ்நீரை என் முன் தலை மீது துப்பினார்கள். முன் தலை நனைந்து, முகம் முழுவதும் உமிழ்நீர் வழிந்தது. வாயில் அத்தனை உமிழ்நீர் இருக்க முடியுமா என்று நான் பின்பு யோசித்ததுண்டு. மூக்கு நுனியில் சொட்டிய அமிழ்தத்தை என் நாக்கை நீட்டிச் சுவைத்தேன். அது வித்தியாசமான உச்சிஷ்டம். மகிமை நிறைந்த, மகோன்னதமான உச்சிஷ்டம் என் வியாதி குணமானதோடு, என் பாவமும் என் கர்ம வினைகளும், அந்தப் புனிதநீரில் கரைந்து போனதாக நான் கருதுகிறேன்.

நம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர் களுடன் ஒன்றாக அமர்ந்து பலமுறை உணவு உண்ணும் பாக்கியம் பெற்றுள்ளோம். பலமுறை பால், டீ என்று கொடுத்துள்ளார்கள். ஆனால் ஒரே ஒருமுறைதான் உச்சிஷ்டம் பெற்று உள்ளேன்.

அந்த நாட்களில், நானும் என் கணவரும் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வோம். சிறு = சிறு சலசலப்புகள் இருந்துகொண்டே இருக்கும். எங்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளை, அப்பொழுது சாரதா கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த மாதேவகி அவர்களிடம் நான் கூறுவதுண்டு. ஒரு நாள் இரவு 8 மணியளவில், மாதேவகி அவர்களின் அறைக்குச் சென்று, அடுத்த நாள் காலை நான் திருவண்ணாமலை செல்ல இருப்பதாகக் கூறினேன். உடனே அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு, பக்கத்திலிருந்த பழக் கடைக்குச் சென்றார்கள். அங்கிருந்த பல வகைப் பழங்களுக்கிடையில். “Passion Fruit” என்னும் பழத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். பெரிய நெல்லிக்காய் அளவிலுள்ள அந்தப் பழத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் வாங்கினார்கள். இதை பகவானிடம் நான் கொடுத்ததாகக் கூறிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள். 1 கிலோ அல்லது 1/2 கிலோ வாங்கி இருக்கக் கூடாதா? இது என்ன இது. நெல்லிக் காய் சைசில் ஒரே ஒரு பழம் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. பத்திரமாகப் பழத்தை எடுத்து வந்து மறுநாள் பகவானிடம் கொடுத்தேன். பழத்தைக் கையில் வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சற்று நேரம் மௌனம். பிறகு “Kamala, ‘what do you think about sex” என்றார். இந்தக் கேள்வியைச் எதிர்பாராத நான் திகைத்தேன். ஆனால் சற்றும் தயங்காமல் “Dirty. It is dirty Bhagawan” . “Do not you like sex?” என்று கேட்டார். “No” பகவான் என்று துவங்கிய நான் “No Bhagawan, I don’t know Bhagawan” என்று முடித்தேன். சன்னதித் தெருவின் முன்னறையில் அமர்ந்திருந்த பகவான், எழுந்து உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு கத்தியுடன் திரும்பி வந்தார். முற்றிலும் ரசம் நிறைந்த “Passion Fruit”-ஐ முன் மேல் பக்கத்தில் மெதுவாகக் கீறி அதிலிருந்த ரசத்தைச் சிரட்டையில் இருந்த பாலில் கலந்தார். தான் நிறையக் குடித்தார். மீதியை எனக்குக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். ஆம்! இந்த உச்சிஷ்டத்தை எனக்கு மட்டுமே கொடுத்தார். அருகிலிருந்த என் கணவருக்கோ, பெண்ணுக்கோ கொடுக்கவில்லை.

இந்த அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, எனக்கும், என் கணவருக்கும் இடையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த சலசலப்புகள் குறைந்தன. தேய்பிறையாய்த் தேய்ந்துத் தேய்ந்து இன்று மறைந்தே விட்டது.

தெய்வத்தின் செயல்கள் பொருள் பொதிந்தவை. சாமான்யர்களுக்கு அந்தப் பொருள் புரிவதில்லை. பொருள் புரியாவிட்டால் என்ன? பகவானின் கருணை மழை நம்மீது பொழிந்து கொண்டு இருப்பது புரிகிறது. அவரது ஒளி வெள்ளம் நம்மைச் சூழ்ந்து கொண்டிருப்பது புரிகிறது அல்லவா? அது போதும். அவரது மலர்ப்பாதங்களைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டாலே போதும். உய்வு நிச்சயம்.

யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

      --

சாரதா கல்லூரி, சேலம்.

One Comment on “பேராசிரியர் வி. கமலம் பதிவு”

  1. நானும் திருவண்ணாமலையில் இருந்த போது யோகி ராம் சூரத் குமார் ஸ்வாமிகளை சந்தித்தேன். ஆனால் உச்சிஷ்டம் எனபதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன