சுவாமி சச்சிதானந்தா பதிவு

சங்கர் ஜோதிராஜ் முகநூலில் பதிவு செய்தது

ஆனந்தாஸ்ரமம், ஆகஸ்டு 6, 1951.

  1. அன்பு: மானிட அன்பும், தெய்வீக அன்பும்.

சுவாமி காலை சுமார் 9.30 மணிக்கு பப்பா, சச்சிதானந்தா மற்றும் இக்பால்நாத் பக்க்ஷி ஆகியோருடன் பஜனை மண்டபத்தில் இருந்தார். வாத நோய்க்குள்ளாகிய பப்பாவின் முழங்கால் மூட்டுகளைத் தேய்க்கும் பொருட்டு ஒரு பாட்டிலில் மருந்து எண்ணெயை சுவாமி சச்சிதானந்தா கொண்டு வந்தார். பப்பா ஒரு தாழ்வான ஆசனத்தில் அமர, இக்பால்நாத்தும், சுவாமி சச்சிதானந்தாவும் பப்பாவின் முழங்கால்களில் எண்ணெயைத் தடவித் தேய்க்கத் தொடங்கினார்கள்.

தாராபாயின் குழந்தைகளான உமேஷும், உமாவும் அந்த கூடத்திற்கு வந்தனர். உமாவிற்கு நான்கும், உமேஷுக்கு வயது இரண்டும் ஆகும். பப்பா உமேஷிடம் டைஃபாய்டு காய்ச்சலால் துன்பப்படும் அவனுடைய தாயைப் பற்றி விசாரித்தார்.உமேஷ் அவனுடைய மழலைச் சொற்களில் ஏதோ கூற, பப்பா அதை அவன் தாய் தூங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டார். உமா தனது தம்பியை மிக்க பொறுப்போடு ஒரு பாட்டியைப் போல் கவனித்துக் கொண்டிருந்தாள். உமேஷிடம் உமாவுக்கிருந்த அன்பைக் கவனித்த சுவாமி சச்சிதானந்தா “குழந்தைகள் இப்பொழுது எவ்வளவு அன்புடன் இருக்கிறார்கள்! ஆனால் அவர்கள் வளர்ந்து வர வர, இந்த அன்பு குறைந்து கொண்டே வந்து, பின்னர் அவரவர்க்குத் தனித்தனிக் குடும்பங்கள் அமையும் போது சகோதரன், சகோதரி என்ற உறவைக் கூட நிலை நிறுத்திக் கொள்ளத் தவறி விடுகிறார்கள்”, என்றார்.

பப்பா: “மனித அன்பு அத்தகையது. அத்தகைய அன்பின் நோக்கம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. மனித அன்பு சாதாரண நிலையைச் சேர்ந்தது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் தனித்தே நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாம் தனியாக வருகிறோம், தனியாகப் போகிறோம். உயர்ந்த உண்மைப் பெருநிலையிலிருந்து பார்க்கும்போது, இந்த மனிதத் தன்மையின் அன்பு மாத்திரமல்ல உலகளாவிய அன்பு கூட மிகவும் கீழ் நிலையைச் சேர்ந்ததாகும். மனதின் தொடர்புடைய இத்தகைய மனோ நிலைகளிலிருந்து நாம் மேலே உயர வேண்டும்.”

பப்பா பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டார். சுவாமி சச்சிதானந்தா எழுந்து சென்று, அப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தைக் கொண்டு வந்து பப்பாவிடம் கொடுத்தார். பின்னர் பப்பா அந்தப் பாடலைப் படித்துக் காட்டினார்.

ஆன்மாவின் எல்லையற்ற மௌனத்தில்
எல்லாமே சூனியம்
அது ஆழ்மனதின், ஆழத்திற்கும் அப்பாற்பட்டது
அது நிரந்தர ஒய்வு, சாந்தி, அமைதியாக இருக்கிறது
அந்த மகத்தான சந்நிதியின் முன்
மிக மேலான இனிய அன்பு, திகைத்து நிற்கிறது
அந்த வியப்புக்குரிய ஆட்சியின் எல்லைக்குள்
செல்லவும் கூட அதற்கு அனுமதியில்லை
பின்னர் மனது என்பது என்ன? அன்பு என்பது என்ன?
இருளில் இயங்குவது மனது. ஒளியில் இயங்குவது
அன்பு ஆனால் மேலான உண்மை
இவையிரண்டிற்கும் அப்பாற் பட்டது
அது எண்ணம்,நாமம், ரூபம், இயக்கம்
மாற்றம், காலம், இடம், காரணம்
ஆகியவற்றைக் கடந்தது
ஒரு தனித்த பேருண்மை – ஒரு தனித்த இருப்பு
ஒரு முதன்மையான, நிறங்களற்ற, குணங்களற்ற,
எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட பேருண்மை.

தொடர்ந்து பப்பா கூறினார்: “இந்தப் பாடல் மிக உயர்ந்த அனுபவத்தைப் பற்றியது. மிக மேலான அன்பு கூட அந்த மேலான அனுபவத்தின் முன் திகைத்து நிற்கிறது. இப்பாடலின் பொருள் விளக்கப்படவில்லையெனில், மிகச் சிலரால் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களும் எந்த அளவு அனுபவம் அடைந்துள்ளனரோ அந்த அளவுதான் புரிந்து கொள்ள முடியும்.

  1. ஹிம்சை மற்றும் அஹிம்சை, இரண்டையும் கடந்து செல்.

அப்பொழுது மணி நடுப்பகல் 12. பப்பா தன்னுடைய மதிய ஓய்வுக்குச் செல்லவிருந்தார். பஜனை கூடத்தில் மோதிபென், நட்வர்லால் ஷா மற்றும் சுவாமி சச்சிதானந்தா ஆகியோர் இருந்தனர். பப்பா படுக்கைக்குச் சென்ற பின்னர் மோதிபென்னும், சுவாமி சச்சிதானந்தாவும், மெதுவாகப் பப்பாவின் உடலைப் பிடித்துவிட, நட்வர்லால் விசிறிக் கொண்டிருந்தார்.

பப்பா: “நேற்று இரவு எலிகள் பெருந்தொல்லையைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகள் கூரையில் அங்கும் இங்கும் ஓடி மிகுந்த சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. மேலும் அவைகள் கீழே இறங்கி வந்து மாதாஜி, ராம்கிஷோர் ஆகியோரின் பாதங்களையும் கடிக்கத் தொடங்கின. இந்த எலிகளை பிடிப்பதற்கு நமக்கு ஒரு எலி பிடிக்கும் பொறி வேண்டும். “சிறிது நேரம் கழித்து, பப்பா தொடர்ந்தார், “அந்த எலிகளைப் பிடித்த பின்னர் நாம் என்ன செய்வது? நாம் அவைகளைக் கொல்ல மாட்டோம். அவைகளை சற்று தூரமான இடத்திற்குக் கொண்டு சென்று, அங்கு விட்டு வந்தால் அந்த இடத்தின் அருகில் வாழும் மக்களுக்குக் தொல்லையை உண்டாக்கும். நாம் அவைகளைப் பிடிக்கவில்லை என்றால், இங்கு நாம் எப்படி வாழ்வது? நாளடைவில், நாம் எலிகளின் பொறுப்பில் இந்த ஆஸ்ரமத்தை விட்டு விட்டு, காசிக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்ல வேண்டியதுதான்.”

சுவாமி சச்சிதானந்தா: ”அப்படியானால் என்ன தான் வழி?”

பப்பா: “என்ன வழி ? கண்டு பிடியுங்கள்?”

எல்லோரும் அமைதியாக இருந்தனர். சில நிமிடங் களுக்குப் பிறகு, பப்பா கூறினார்: “நாம் தொடர்ந்து இவ்வுலகில் இருக்க வேண்டுமென்றால் இது போன்ற பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. இது பாவம், அது பாவம் என்று சொல்லிக் கொண்டு, பிரச்சனைகளை விட்டு விலகி ஓடுவது சரியல்ல. உலகியல் வாழ்க்கையில், முழுமையான அகிம்சையை நடைமுறையில் செயல் படுத்துவது முடியாததாகும். எதிரிடையான இந்த இருமை களைக் கடந்து சென்று, நான் கர்த்தா, நான் அகர்த்தா என்ற உணர்விலிருந்து விடுபடுவதில்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளது. ஒவ்வொரு பொருளும் இறைவன்தான் என்பதை நாம் உணர வேண்டும். இந்த எலியும் இறைவனே, எலிகளை கொண்டு சென்று தொலைவில் விட்டு வருவதால், தொல்லைக்குட்படுபவர்களும் இறை வடிவங்களே. இவ்வாறு அனைத்தும் இறைவனே, பின்னர் யார் எதனால் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்?”

மாலை பஜனைக்குப் பின்னர், சில பக்தர்கள் பப்பாவின் முன் அமர்ந்திருந்தனர். கோபால், பப்பாவின் படுக்கையைத் தயார் செய்து கொண்டிருந்தார். திரு டி.எல். வாஸ்வாணி அவர்களால் இயற்றப்பட்ட ‘கீதா தியானங்கள்’ என்ற நூலின் ஒரு பிரதியை பப்பா மாலை அஞ்சலில் பெற்றார். அவர் தன் கையில் அந்தப் புத்தகத்தை வைத் திருந்தார். அவர் தன் முன்னர் இருந்தவர்களைப் பார்த்து சொன்னார், “கீதை முழுமையான அஹிம்சையை அல்லது சமாதானத்தை கற்பிக்கின்றது என்று கூறுவது தவறாகும். உண்மையில் கீதை யுத்தத்தையும், வன்முறையையும் அனுமதிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் அவனை எதிர்ப்பவர்கள் எல்லோரும் சொந்த உறவினர்களாகவும், நண்பர்களாகவும், ஆசாரியர்களாகவும் இருந்தபோதிலும் அவர்களைக் கொல்லுமாறு கேட்டுக்கொண்டார். இவ் வுலகில் எல்லாச் செயல்களையும் அது ஹிம்சையோ அல்லது அஹிம்சையோ எதுவாயிருப்பினும், முற்றிலும் பற்றற்ற நிலையிலிருந்து செயல்பட வேண்டுமென்று கீதை நமக்கு கற்பிக்கின்றது. அதுதான் போதனை. பற்றற்ற தன்மை வலியுறுத்தப்படுகிறது. செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிற மனோபாவனையுடன் செய்ய வேண்டும். செயல்களின் பலனில் முற்றிலும் பற்றற்று இருப்பதான பேருண்மையை உணர்ந்தவர்களை, செயல்கள் ஒரு போதும் பந்தப்படுத்தாது”.

பப்பா தொடர்ந்தார்: “நாம், இவ்வுலக காரியங்களில் ஈடுபடும் போது, முழுமையான அஹிம்சை என்பது சாத்திய மன்று. ஆன்மீக சாதகனுக்கு அஹிம்சை, ஒரு சாதனை என்ற முறையில் சரியானதே. இறைவனை உணர்வதற்கு ஒருவன் சுத்த சத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்வேறு ஒழுக்க நெறிகளுடன், முழுமையான அஹிம்சையை கடைப்பிடித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இறுதியாக, சாதகன் தனது இறுதி குறிக் கோளை அடைவதற்கு முன்னர் இதனையும் கடந்து செல்லவேண்டும்.”

  1. ஆசிகளில் நம்பிக்கை

8 ஆகஸ்டு, 1951.

அப்பொழுது காலை சுமார் 7 மணி, பஜனை மண்ட பத்தில் இருந்த பப்பா ‘ச’ வை அழைத்து வரச் சொன்னார். கையில் ஒரு கடிதத்துடன் பப்பா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை சுவாமி சச்சிதானந்தா கண்டார். பப்பா ‘ச’ விடம் கூறினார் : “நாம் ஒரு பக்தைக்கு ஐந்து ரூபாய் தந்தி மணியார்டர் அனுப்ப வேண்டும். அவள் மகனுடைய மருத்துவக் கல்லூரி கட்டணத்துடன் (முதல் கட்டணம்) சேர்க்க, ராமதாஸ் தன்னுடைய பணத்தை அனுப்ப வேண்டுமென அவள் விரும்புகிறாள். அதனால் அவன் வெற்றிகரமாகக் கல்லூரிப் படிப்பை முடிக்கலாம் எனக் கருதுகின்றாள். மேலும், அவள் ஒரு ரூபாய் நோட்டை அனுப்பி உள்ளாள், அதை ராமதாஸ் தொட்டு ஆசீர்வதித்து, அவளுக்குத் திரும்ப அனுப்பவேண்டுமென்பதற்காக அனுப்பியிருக்கிறாள். இந்த ரூபாயை அவள் தன் மகனுக்கு புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்துவாளாம்.”

பப்பா இச்சொற்களைக் கூறிக்கொண்டே சிரித்து விட்டு, மேலும் தொடர்ந்தார், “இங்கிருப்பது சாதாரண நம்பிக்கையன்று. ஒவ்வொரு செயலும் ஆசிகளால் மட்டுமே நடைபெற வேண்டுமென அவள் விரும்புகின்றாள். மறைந்த அவளது கணவனின் உயிரைத் திரும்பக் கொண்டு வருவது ஒன்று மட்டுமே அவளால் செய்ய முடியவில்லை. அதுவும் கூட, அவள் கணவன் உடல் நலமின்றிக் கவலைக்கிடமாக இருந்தபோது, ராமதாஸின் அருளை நாடி அவள் தந்தி அனுப்பவில்லையே என்று இப்பொழுதும் வருந்துகின்றாள். அது தன்னுடைய தவறு என்று இப்போது கூட நினைக் கிறாள். வாழ்க்கையில் எல்லா நெருக்கடிகளிலும் நம்பிக் கையே அவளை அமைதியாகவும், எளிதாகவும் வழி நடத்திச் செல்கிறது.” சுவாமி சச்சிதானந்தா பின்னர் தந்தி மணியார்டர் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அலுவலகத்திற்குச் சென்றார்.

கடிதப் போக்குவரத்து முடிந்த பின்னர், இக்பால்நாத்தும் சுவாமி சச்சிதானந்தாவும் பப்பாவின் முழங்கால் மூட்டு களை எண்ணெய் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் பப்பா, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துப் படித்து காட்டினார். அது பம்பாயிலிருந்து ஒரு பக்தர் ஓரிரு விஷயங்களுக்கு ஆசி வேண்டி எழுதியதாகும். கடிதத்தைப் படித்த பின்னர் பப்பா அதன் கருத்தை சொன்னார்: “மக்கள், குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே, நல்ல முறையில் பிறக்க வேண்டுமென்றும், பின்னர் அதன் பிறந்த நாள், உபநயனம், பள்ளியில் தேர்ச்சி, திருமணம், நோயிலிருந்து நலம் பெறுதல், வேலை வாய்ப்பு என்று இவ்வாறு பலவற்றிற்காக ஆசிகளை வேண்டுகின்றனர். காலப்போக்கில் இதுபோலவே மகனின் குழந்தைக்கும் ஆசி வேண்டும். அவனுடைய மரணத் திற்குப் பின்னரும் மகன் தன் தந்தையின் ஆத்ம சாந்திக் காக வேண்டுகின்றான். அவர்கள் கேட்பது எத்தனை எத்தனை அருளாசிகள் என்று நீங்களே கற்பனைச் செய்து கொள்ளலாம்.”

  1. தற்பெருமை ஒரு தீயகுணம் :

அந்தக் கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதகனைப் பற்றிய செய்தியும் இருந்தது. அந்த சாதகர் எப்பொழுது முதன் முதலில் ஆஸ்ரமத்துடன் தொடர்பு கொண்டார் என்பதை, இக்பால்நாத் அறிய விரும்பினார். பப்பா கூறினார்: “ஓ, அவனை ராமதாஸுக்கு பல ஆண்டுகளாக தெரியும். இங்கு அவன் முதலில் வந்தபோது தலைக்கு எண்ணெய் தடவி வாரிக்கொண்டு, நெற்றியில் பொட்டுடன், நல்ல அழகான ஆடையை அணிந்து கொண்டு ஒரு முதல் தரமான ஆடம்பரப்பிரியனாக இருந்தான். இத்தகைய வேஷத்துடன் அவன் பஜனைக்கு அமர்வது வழக்கம். ஒரு சமயம் அவன் ராமதாஸிடம் தான் ஒரு ஆன்மீக சாதகன் என்று கூறினான். உடனே ராமதாஸ் பதில் கூறினான், “இருக்க முடியாது. எப்படி ஒரு சாதகன் நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் செலவு செய்து கொண்டு நாகரிகமான வாழ்க்கையை வாழ முடியும்?”அதன் பின்னர் அவன்தலைமுடியை குட்டையாக வெட்டி, உடையையும் மிகவும் எளிமையாக்கினான். அவன் சத்சங்கத்தை நாடுபவனாகவும், மகான்களிடம் மிகுந்த அன்புடையவனாகவும் இருந்தான். அவன் தூய்மையான வாழ்க்கை வாழ்வதை ராமதாஸ் உணர்ந்தான். தற்பெருமையைத் தவிர வேறு தீய குணங்கள் அவனிடம் இல்லை. உண்மையில் தற்பெருமை மிகக் கெட்ட குணங்களில் ஒன்றாகும்.”

ஜாஃப்னாவிலிருந்து வந்து, ஆஸ்ரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்த வைத்தியநாதன் என்பவர், தன்னுடைய இடத்திற்கு திரும்பிச் செல்லும்போது, பப்பாவிடம் விடைபெற்றுச் செல்ல பஜனை மண்டபத்திற்கு வந்தார். பப்பாவின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கிய அவர், ”பப்பா, தயை கூர்ந்து ஆசீர்வதியுங்கள்” என்றார்.

பப்பா பதிலளித்தார்: “நீ தனிப்பட்ட முறையில் ஆசிகளைக் கேட்கவேண்டியதில்லை. ஒரு மகானிடம் நீ சென்றால், அவரது அருளாசிகள் இயல்பாகவே உன்னை வந்தடையும். உன்னுடைய இடத்துக்கு நீ சென்று சேர்ந்த பின்னர் நேரம் கிடைக்கும் போது கடிதம் எழுது.

தர்மசாலைக்குச் மாலை நேர பஜனைக்குப் பின்னர் இரவு மணி 8.15க்கு, ஆனந்தாஸ்ரமத்தின் இலவச மருத்துவமனையின் பொறுப்பிலுள்ள டாக்டர். ரா.குப்புசாமி, வாதநோய்க்காக சி கிச்சை பெற்று வந்த ஒரு சாது, அவருக்கென்று கொடுக்கப் பட்டிருந்த அறையிலிருந்து பொது சென்று விட்டார், என்ற செய்தியை பப்பாவிடம் வந்து தெரிவித்தார். பப்பா, டாக்டரிடம் கூறினார்: ராமதாஸ் அதை அறிவான். இப்பொழுது அங்கு அவரை கவனித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? அவரை கவனித்துக் கொண் டிருந்த மொஹிதீனுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தார். அவனை அடிக்கும் அளவுக்குக் கூட சென்று விட்டார். இந்த சாதுக்கள் இன்னும் பழமையான ஆசாரமுடையவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களால் ஹரிஜனங்கள், முகமதியர்கள் போன்ற மற்றவர் களுடன் தாராளமாக பழக முடிவதில்லை. இந்த சாதுவை கவனித்துக் கொள்ள நமக்கு மொஹிதீனைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்த விஷயத்தை மாதாஜி முடிவு செய்யட்டும்.”

  1. பால், சிறந்த உணவு :

அப்பொழுது இரவு 9.30 மணி. சுவாமி சச்சிதானந்தா, பப்பா வாய் கொப்பளிப்பதற்காக ஒரு டம்ளர் உப்பு கலந்த நீரைக் கொண்டு வந்தார். பப்பா அந்த டம்ளரை வாங்கியபடி, சிரித்துக் கொண்டே, “ஓ! ராமதாஸுக்கு உப்பு நீரைப்பற்றிய ஞாபகமே இல்லை. அவனுக்கு கற்கண்டைப் பற்றிய ஞாபகம் தான் உள்ளது” என்றார்.

சுவாமி சச்சிதானந்தா: “சரி பப்பா, உப்புநீர் கொப்பளித்த பின்னர் நான் கற்கண்டு கொண்டு வருகிறேன்.”

பப்பா: ”அது மிகவும் ஆறுதலாக இருக்கிறது”.

மோதிபென்: ”உப்பில்லாமல் யாராலும் வாழ முடியாது. ஒவ்வொரு காய்கறி வகையும் தயாரித்த பின்னர் நாம் உப்பு சேர்க்க விரும்புகிறோம்”.

பப்பா: “அது நாமாகவே ஏற்படுத்திக் கொண்டது. உண்மையில், ஒவ்வொரு காய்கறி வகையிலும் ஒரு குறிப்பிட்ட சதவிதம் உப்பு இருக்கிறது. ஆனால் நல்ல சுவைக்காகவும், அதிகமாக உண்பதற்காகவும் மேலும் உப்பு சேர்க்க நாம் விரும்புகிறோம். ஒரு சாதகனுக்கு உப்பு இல்லாத உணவு மிகவும் நல்லது. உண்மையில் பால் மிகச் சிறந்த உணவாகும். ஒருவர் பால் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும்போது அவருடைய மனமானது புடம் போட்ட தங்கம் போல் ஒளிபொருந்திய புத்திகூர்மை உடையதாக இருக்கும். ஆனால் அவர் ராம நாமத்தை உச்சரித்து தியானம் செய்பவராகவும் இருத்தல் வேண்டும். இப்பொழுது ராமதாஸ் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.”

  1. வெறுப்புணர்வு கூடாது

ஆகஸ்டு 9, 1951.

காலை மணி 8.30. அன்றைய கடிதப் போக்குவரத்தைக் கவனித்த பிறகு, பப்பா பஜனை மண்டபத்தில் மெதுவாக உலாவிக் கொண்டிருந்தார். அவர், தன் பக்கத்தில் இருந்த சுவாமி சச்சிதானந்தாவிடம் கூறினார்: “ஸ்ரீ கிருஷ்ண வித்யாலயாவின் தலைமை ஆசிரியர், வித்யாலயாவின் மாடியில் உள்ள கூடத்தில் அன்று மாலை ராமதாஸை தனியாகச் சந்தித்துப் பேச வேண்டுமென்று கேட்டிருந்தார். நேற்று அவர் ராமதாஸிடம், தான் ராமதாஸுக்கு மனவருத்தத்தைக் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே செல்வது, தனக்கு நல்லதல்ல என்று கூறினார். ராமதாஸுக்கு நிச்சயமாக எவரிடமும் வெறுப்புணர்வு இல்லை. இதை அவன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெளிவுபடுத்துவான்.”

அடுத்து, பப்பாவும் சுவாமி சச்சிதானந்தாவும், அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையின் ஒரு பகுதியைப் பார்க்கச் சென்றனர். திரும்புகையில், மாதாஜிக்கு உடல் நலம் சரியில்லை என்றும், மேலும் அவர் தலை சுற்றுவதாக உணர்கிறார் என்றும், டாக்டர் குப்பு சாமி கூறினார். பிறகு பப்பாவும், சுவாமி சச்சிதானந்தா, மற்றும் டாக்டரும் நேராக மாதாஜி படுத்திருந்த அறைக்கு, பஜனை மண்டபத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்திற்குச் சென்றனர். நெற்றியில் ஒரு ஈரக் கைக்குட்டையுடன் மாதாஜி படுத்திருந்தார். பப்பா, அவரது உடல் நலத்தை பற்றி விசாரித்தார். லேசாக மயக்கம் இருந்ததாகவும், விரைவில் குணமடைந்துவிடும் என்றும் மாதாஜி கூறினார்.

பப்பா: “நீ ஓய்வு எடுத்துக் கொள்ளாததால்தான் இந்தத் துன்பம். நீ பிற்பகலில் எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேர ஓய்வையும் தவிர்த்துவிட்டு, நாள் முழுவதும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாய். அதனால் தான் உன் உடல் நலமில்லாமல் போனது.'”

மாதாஜி (புன்சிரிப்புடன்): “நான் ஒரு வேலையும்செய்வதில்லை.”

பப்பா: ”அப்படியானால், பிற்பகலில் நீ ஏன் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாது?இப்பொழுதாவது நீ முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.”

         - 

ஆனந்தாஸ்ரமம்,
ஆனந்தாஸ்ரமம் அஞ்சல்,
காஞ்சங்காடு -671531.
காசர்கோடு மாவட்டம்,
கேரளா (வடக்கு)

Ashram Contact Details:

Location: Anandashram P.O., Kanhangad, Kasaragod District, Kerala, India – 671531

Phone Numbers: (0467) 2203036 / 2209477

Email: anandashram@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன