ஹரணி/நம் வாழ்க்கை நம் கையில்

(1)
பெரிய மரத்திலும் பறவை கூடுதான்
கடல்மீன் தொட்டியிலும் நீந்தும் உயிருடன்
யானையின் அருகில் எறும்பும் வாழும்
நம் வாழ்க்கை
நம்கையில்.
(2)
பிறப்பின் நிழலாய் வரும் மரணம்
இளமை கழிந்து முதுமை வரும்
இன்றே நமக்கு உண்மை உணர்வு
நம் வாழ்க்கை நம் கையில்.
(3)
கோபமும் தாபமும் தீங்கே தரும்
அன்பும் அறமும் இன்பம் நல்கும்
எதுவும் நேர்தல் நம்மின் வினையே
நம் வாழ்க்கை நம் கையில்.
(4)
உறவுகள் கூடும் உட்கார்ந்து அழும்
வயிறு பசித்தால் ஓடி உண்ணும்
தின்றது செரிக்க தூங்கி விழும்
நம் வாழ்க்கை நம்கையில்.
(5)
பிள்ளைகள் பெற்று வளர்த்து நின்றோம்
கடமைகள் ஆயிரம் செய்து மகிழ்ந்தோம்
எல்லாம் மறந்தன கவலை வேண்டாம்
நம் வாழ்க்கை நம் கையில்.
(6)
உழைக்க உழைக்க உவக்கும் உயிர்
உண்ட உணவு உடனே செரிக்கும்
நோய்கள் நொடி நேரம் நிற்காது
நம் வாழ்க்கை நம் கையில்.
(7)
நம்பிக்கை நம் வாழ்வின் நல்வரம் நன்றே
துணிவுடன் நேர்மை துணை கொண்டால்
எண்ணியபடி எல்லாம் அமையும் ஏற்றமே
நம் வாழ்க்கை நம் கையில்.
(8)
அறிவுரை யாருக்கும் அறவே வேண்டாம்
அன்பினைச் செயலில் காட்டி நில்லுங்கள்
பண்பில் மற்றவர் தொடர நின்றால்
நம் வாழ்க்கை நம் கையில்.
(9)
புறம் பேசி புண்பட வைக்காதீர்
அகம் குளிர ஆறுதல் கூறுங்கள்
சகம் எல்லாம் நல மென்று நினையுங்கள்
நம் வாழ்க்கை நம் கையில்.
(10)
கவிதை எழுதுங்கள் கதை கேளுங்கள்
பிள்ளைகள் படிக்கப் பாராட்டி மகிழுங்கள்
மரணபயம் வேண்டாம் தடுக்க முடியாது
நம் வாழ்க்கை நம் கையில்.

தஞ்சாவூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன