
குரு இருக்க குறை ஏது?
“சுவாமி, என் மாமனார் இப்பொழுதெல்லாம் மிகுந்த கவலையோடு இருக்கின்றார். தேர்தலில் தோற்ற பின் அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார் சுவாமி. உங்களுடைய பேரருள்தான் அவரைக் காக்க வேண்டும் சுவாமி,”
இளம் பக்தர், தன் மாமனாரின் மேல் உள்ள கரிசனத்தை சுவாமி யோகி ராம்சுரத்குமாரிடம் வெளிப்படுத்தினார்.
சுவாமி யோகி ராம்சுரத்குமார் அப்பொழுது சந்நிதித் தெரு வீட்டில் இரு தூண்களுக்கு நடுவே விரிக்கப்பட்ட பாயின் மீது அமர்ந்திருந்தார்.
அந்த இளைஞர் கூறியதைக் கேட்ட சுவாமி, சற்றே கோபமடைந்தார்.
“தம்பி, உங்கள் மாமனார் அவரது குருநாதர் சமாதியில் அமர்ந்திருக்கும் போது பார்த்திருக்கின்றீர்களா?” சுவாமி அவரிடம் வினவினார்.
“பார்த்திருக்கின்றேன் சுவாமி.” இளைஞர் பதிலுரைத்தார்.
“அவர் தன் குருநாதர் சமாதியில் அமர்ந்திருக்கும்போது எந்த உலகியல் கவலையாவது அவரைப் பீடித்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?”
சுவாமியின் சொல் கேட்டு இளைஞர் திகைத்துப் போனார்.
“அவரை உலகியல் பிரச்சனைகள் எதுவும் தீண்ட முடியாது. அவரின் குருநாதர் அவரைத் தன் சொரூபமாக மாற்றியுள்ளார். அவர் குறித்து நீங்கள் கவலையுற வேண்டாம். அவரின் குருநாதர் அவரைப் பாதுகாத்து வருகின்றார். நீங்கள் சென்று வரலாம்.”
சுவாமி அவருக்கு ஒரு வாழைப்பழத்தை அளித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கடந்தன. அந்த இளைஞரின் மாமனாரான குருபக்தர் தன் மனைவியுடன் சுவாமியைச் சேவிக்க சந்நிதித் தெரு வீட்டிற்கு வந்தார்.
உன்னதமான குருபக்தர்களைக் கண்டால் சுவாமி பேரானந்தம் கொள்வார். குருபக்தரை அன்போடு கைப்பிடித்து வீட்டினுள் அழைத்து வந்தார். தன் எதிரே அவர்களை அமர வைத்தார்.
குருபக்தர் சுவாமியின் அழுக்கடைந்து கருப்பாகிப் போன ஆடைகளைக் கண்டு கவலையடைந்தார்.
மனைவியிடம் பணம் பெற்று சுவாமியிடம் சொல்லாமலே கடைவீதிக்குச் சென்று, சுவாமிக்கு வேஷ்டி, ஜிப்பா, தலைப்பாகைத் துண்டு என அனைத்தும் வாங்கி வந்தார்.
சுவாமி பக்தரின் வேண்டுகோளைப் புறக்கணிக்காது, தான் அணிந்திருந்த ஆடைகளின் மேலேயே குருபக்தர் வாங்கி வந்த ஆடைகளையும் அணிந்து கொண்டார்.
அங்கே சந்நிதித் தெரு வீடே பேரின்பச் சூழலில் நிறைந்திருந்தது.
குருபக்தரின் வருகையால் சுவாமி குதூகலித்து, பெருங்கடல் பேரலையெனச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
சற்று நேரம் கடந்தது. அங்கு சில நொடிகள் மௌனம் நிலவியது.
சுவாமி என்னை அழைத்தார். சுவாமியின் வலப்பக்கத்தில் இருந்த அறையைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.
உள்ளே குப்பையாகப் பலவிதப் பொருட்கள் கிடந்தன. ஒரு பெரிய கோணிப்பை அங்கே வாய் கட்டப்பட்டு இருந்தது.
சுவாமி என்னை அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு கூடத்திற்கு வரச் சொன்னார். பையைத் தூக்கி கூடத்தில் வைத்தேன். பை மிகவும் கனமாக இருந்தது.
சுவாமி குருபக்தரிடம், “நண்பர்கள் இந்த பிச்சைக்காரனுக்குத் தேவையில்லாத இதைக் கொடுத்தவாறு உள்ளனர். இது இந்த பிச்சைக்காரருக்கு தேவையில்லை. இதை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்,” எனக் கூறினார்.
அது என்னவென்று குருபக்தர் கேட்க, சுவாமி என்னை அந்த கோணி மூடையை அவிழ்த்துக் காட்டச் சொன்னார்.
நான் மூடையைக் கட்டியிருந்த சணலைப் பிரித்தேன். மூடை நிரம்ப பணக் கட்டுகள் நிறைந்திருந்தன.
குருபக்தர் சற்று நேரம் அதைப் பார்த்தவாறே இருந்தார்.
“சுவாமி உனக்கு பிடிக்காததை, உனக்குத் தேவையில்லாத இதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ விரும்புவதை, உன்னிடத்தே எப்பொழுதும் உள்ள அந்த பரம்பொருளைக் கொடு சுவாமி. நான் வாங்கிக் கொள்கிறேன். நீ விரும்பாத ஒன்று எனக்கும் வேண்டாம் சுவாமி. என்னை மன்னித்துவிடு சுவாமி,” குருபக்தர் தழுதழுத்த குரலில் கூறினார்.
சுவாமியின் கண்கள் குளமாயின. குருபக்தர் சுவாமியின் திருவடி பணிந்தார்.
சுவாமி அங்கிருந்த இரண்டு வாழைப் பழங்களைத் தோலுறித்து அந்தத் தெய்வீகத் தம்பதியற்குக் கொடுத்தார்.
ஆனந்தமாக அந்தப் பிரசாதப் பழங்களைக் குருபக்தரும் அவர் மனைவியும் உட்கொண்டனர்.
சுவாமி அந்த மூடையை மீண்டும் உள்ளே வைக்கச் சொன்னார்.
தம்பதியர் சுவாமியின் ஆசி பெற்றுச் சென்றனர்.
சுவாமி ஆனந்தமாக வெகு நேரம் சிரித்தபடி இருந்தார்.
நல்லடியார்களை என் கண்களில் காட்டிய எம்பெருமான் யோகி ராம்சுரத்குமாருக்கு, என் மனமார்ந்த நமஸ்காரங்கள். வாழி என் நாதன்.
