
“ஏ பாண்டியா.. கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாம என்னடே திரும்பி உட்கார்ந்து கிடக்கே?”
இளைய மகனை அதட்டினாள் ராக்கம்மா..
“எனக்குப் பிடிக்கலை”
“என்ன பிடிக்கலை?”
“சாமி பிடிக்கலை..”
மூத்தவன் எசக்கியப்பன் உடனே..
“தம்பி.. அப்படியெல்லாம் சொல்லாதே.. சாமி குத்தமாயிரும்”
பாண்டியன் பிடிவாதமாக இருந்தான்.
“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்”
ராக்காயி பயந்து போனாள்..
“எடே.. அப்படிச் சொல்லாதே.. உனக்கு ஏன் சாமியைப் பிடிக்கலை?”
பாண்டியன் அவள் பக்கம் திரும்பி..
“சாமி நமக்கு எங்க நல்லது பண்ணிச்சு? அப்பாரைப் பறிச்சுது.. இருந்த வீட்டைப் பறிச்சுது.. இப்ப ஒழுகற குடிசைல கொண்டு தள்ளியிருக்குது.. அதனாலதான் சொல்றேன் எனக்கு சாமியைப் பிடிக்கலை”
பெரிய மனுஷன்போல் பேசிய அந்த பிஞ்சு மகனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ராக்காயி..
இவன்தான் பேசுகிறானா இல்லை இவனுள் புகுந்து பேய் பிசாசு ஏதாவது பேசுகிறதா?
”இதப்பாருடே.. சாமி எப்பவுமே தனக்குப் பிடிச்சவங்களைத்தான் சோதிக்கும்.. அந்த சோதனையை தாங்கிக்கிட்டம்னா பொறவு நல்லதை வாரி வாரிக் கொடுக்கும்.. நம்பு”
“உகும்.. எனக்கு நம்பிக்கை இல்லை.. நிச்சயமா சாமி இல்லை”
“அப்படிச் சொல்லாதடா”
“அப்படித்தான் சொல்லுவேன்.. சாமி இல்லை.. சாமி இல்லை.. சாமி இல்லை”
பாண்டியன் உரத்த குரலில் கத்த கோவிலில் இருந்த மற்றவர்களுக்கு அதிர்ச்சி..
அவனைக் கண்டித்து அடிக்க விரைந்தனர்..
பாண்டியன் தப்பித்து ஓடினான்.. கோவிலைவிட்டு ஓடினான்.. ஊரைவிட்டு ஓடினான்.. உறவுகளை விட்டு ஓடினான்.. ஒரு பெரியவர் நிழலில் இளைப்பாரும்வரை ஓடிக்கொண்டே இருந்தான்..
இன்று படித்து உயர்ந்த நிலையில் இருக்கிறான்..
பல்வேறு ஓவியர்கள் பங்குபெறும் ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவித்தைப் பார்த்த பாண்டியனின் மனதில் தன்னுடைய இளமைக்காலம் பிளாஷ்-பேக் ஆனது.
கடவுள் முதலில் சோதனைகளைக் கொடுத்தாலும் பிறகு நல்லதை வாரி வாரிக் கொடுக்கும் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
அந்த ஓவியத்தை வாங்கும் உத்தேசத்தில் அதை வரைந்த ஓவியர் யார் என்று பெயர்ப்பலகையைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி..
எசக்கியப்பன்!!
