ஜெ.பாஸ்கரன்/கண்ணம்மா

காற்று, இடி மின்னலுடன் பெருமழை. அந்த ஊரே நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டது. இயற்கைக்கு பாரபட்சம் இல்லை, ஊரில் எதுவும் மிச்சமில்லை.

விதிவசமாகத் தப்பித்த கண்ணம்மாவும், இரண்டு குழந்தைகளும் மட்டும், அரசு கொடுக்கும் நிவாரண நிதி உதவிக்காகக் காத்திருந்தனர். யாரோ கொடுத்த உடைகள், அரைகுறையாக அவர்கள் உடலை மறைத்திருந்தன.

தப்பித்து ஊர்ந்து வருகையில் கையில் சிக்கிய வாழைப்பழங்களைக் கூடத் தின்ன மனமில்லை – உறவுகளை, உடைமைகளை இழந்த சோகம்.

அதிகாரி வந்தார். விபரங்களைக் கேட்டார்.

“என் பெயர் கண்ணம்மா.” இருந்த முகவரி, செய்த வேலை எல்லாம் சொன்னாள்.

குழந்தைகளின் பெயரைக் கேட்டார் அதிகாரி.

“தெரியாது”

அதிகாரி குழப்பத்தில் விழிக்க, கண்ணம்மாள் சொன்னாள்.

“நான் நிலச்சரிவிலிருந்து தப்பிக்கையில், மணலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த இந்த இரண்டு குழந்தைகலையும் காப்பாற்றி அழைத்து வந்தேன். இனி இவர்கள் என் குழந்தைகள். இனிமேல்தான் பெயர் வைக்க வேண்டும்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன