
“கல்வெட்டு காட்டிய தர்மம்: காஞ்சி மஹானின் அற்புத லீலை. மறக்கப்பட்ட சோழர் கால நேர்த்திகடனை மீண்டும் உயிர்ப்பித்த இறைத் தொண்டு.” 🅚🅝
காஞ்சி மஹான் எப்போது எந்த இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லவே முடியாது.
அன்றொரு நாள் மடத்தில் பின்கட்டிலுள்ள சதுரமான பாறாங்கல்லின் மீது மஹான் அமர்ந்திருந்தார்.
அப்போது பாறை உறுத்தலாகத் தெரியவே, மஹான் அதை என்னவென்று தடவிப் பார்த்தார்.
கல்லில் ஏதோ எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தது அவர் கண்களுக்குத் தெரிந்தது.
உடனே மடத்துச் சிப்பந்திகளிடம் சுண்ணாம்பைக் கொண்டு வரச்செய்து பாறாங்கல்லின் மீது லேசாகத் தடவச் சொன்னார்கள்.
தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் கல்வெட்டில் இருந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன.
கணேசருக்கு தினசரி நெய் தீபம் போடுவதற்காக, சில ஆடுகளை அளித்திருப்பதாக அதில் ஒருவரின் எண்ணம் எழுத்து வடிவமாக இருந்தது.
மஹாபெரியவா பழங்கால விஷயங்களை எங்கிருந்தாலும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்.
தொல்பொருள் ஆய்விலும், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் மிகவும் அக்கறையோடு ஈடுபடுவார்.
அதனால் அத்துறை நிபுணர்களை உடனே அங்கே வரவழைத்தார்.
வந்த நிபுணர்கள் கல்வெட்டை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து அது ராஜ ராஜசோழன் காலத்துக் கல்வெட்டு என்றும் அதில் குறிப்பிட்டுள்ள கணேசமூர்த்தி, காஞ்சி மடத்திற்குள் ஆதிசங்கரர் மண்டபத்தின் வாயிற்படிக்கு வெளியில் உள்ள கணபதியே என்றும் தங்களின் ஆராய்ச்சி முடிவைச் சொன்னார்கள்.
இதை அறிந்த மஹான், சென்னையைச் சேர்ந்த சில பக்தர்களை உடனே காஞ்சி வருமாறு பணித்தார்கள்.
அவர்களிடம் கல்லில் காணப்பட்ட செய்திகளை விவரமாகக் கூறி, “பரம பக்தர் ஒருவர் கணேசருக்கு தினசரி நெய்தீபம் ஏற்றுவதற்காக தர்மம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
அவ்விதம் நடக்காவிடில் தமக்குப் பாவம் வந்து சேரும்” என்று கவலையோடு மஹான் வந்த வேத விற்பன்னர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
அவர் மனம் வாட பக்தர்கள் பொறுப்பார்களா? தினசரி நெய்தீபம் ஏற்ற ஏற்பாடு செய்துவிடலாம் என்று அப்போதே அவர்கள் உறுதி அளித்தார்கள்.
அந்தக் கைங்கர்யத்திற்காக ஒரு டிரஸ்ட் உருவாயிற்று. ஏழை பக்தனின் விருப்பப்படி கணேசரின் சந்நிதியில் தினமும் நெய்விளக்கு எரியலாயிற்று.
இது மிகவும் சிறிய விஷயந்தான்.
ஆனால், அதைக்கூட விட்டுவிடக்கூடாது என்கிற நற்குணம் மஹானிடம் இயற்கையாகவே இருந்தது.
என்றோ, யாரோ எழுதிவிட்டுப் போன தர்மப் பணியை அலட்சியம் செய்யாமல் அதை நடைமுறைக்குக் கொண்டுவந்த மஹான், நடமாடும் தெய்வமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது!
💫 🅚🅝💫
