சாந்தி சந்திரசேகரன்/கல்வி!

கோடை வெயில் சுட்டெரிக்கும் ஒரு காலை வேளையில், கிராமத்து வாத்தியார் வீட்டின் தரையில் அமர்ந்திருக்கிறது அந்த எளிய குடும்பம்.

​தன் இரு மகன்களையும் அரவணைத்தபடி நடுவே அமர்ந்திருந்தாள் அந்தத் தாய்.

“மேச்சட்ட போடாத நம்ம பயலுகளுக்கு எப்பிடி வாத்தியார் சொல்லிக்குடுப்பாரு” காலையிலேயே குப்பம்மாள் கேட்டாள்.

ஆனாலும் முந்தைய தினம்…ஊருக்கு வந்த புது வாத்தியார் நம்பிக்கை பொங்க “எல்லாரும் கற்க வேண்டும். உங்கள் வீடு மட்டுமல்ல… நாடும் உயர… எல்லாரும் கல்வி கற்க வேண்டும். தயக்கத்தை உடைத்து வாருங்கள்” என்று மேடையில் கூவியதை நம்பி அவள் தோட்டத்தில் விளைந்த கற்பூரவள்ளி பழத்துடன், பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு அதிகாலையிலேயே வந்து விட்டாள் செல்லாயி.

கணவனை இழந்து, வெள்ளாடை உடுத்தி புழுதியில் உழலும் வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய ஒரு வாய்ப்பு. மிஞ்சிப் போனால் விரட்டி அடிப்பார்கள். ஆனால் சேர்த்துக்கொண்டால் தலைவிதி மொத்தமாய் மாறுமே

வாசலுக்கு வாத்தியார் வர… மூவரும் வாரிச் சுருட்டி எழுந்தார்கள்.

“என்ன இங்கேயே நின்னுட்டீங்க? உள்ள வாங்கப்பா…” வாத்தியார் அழைக்கச் செல்லாயின் அமாவாசை வாழ்வில் பௌர்ணமியாய் ஒளி வீசத் துவங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன