அர்ஜுனன்/சிதைந்த வீடு

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஊருக்குச் சென்றிருந்தேன்.

மேலத் தெருவில் இருந்த அந்த மச்சு வீட்டின் நிலைமை என்னை மிகவும் பாதித்தது.

“இது நம்ம விநாயகம் தாத்தா வீடு தானே?” நண்பனிடம் கேட்டேன்.

“தாத்தாவை இன்னும் ஞாபகம் இருக்கா?”

“ஏன் இல்லாம..? தாத்தா எந்நேரமும் சுருக்குப் பையில சில்லறை காசு வைச்சிருப்பார்.. தெருவில அவர் வர்றப்ப சின்ன வயசு பையங்க யார் கைநீட்டி கேட்டாலும் காசு கொடுப்பாரே..”

“ஆமா..”

“ஆனா.. இங்கே இந்த வீடு மட்டும் ஏன் சிதிலமடைஞ்சு இருக்கு?.. அவரோட வாரிசுங்க யாரும் எடுத்துக் கட்டலையா?..”

“அவரு உயில் எதுவும் எழுதி வைக்காம போயிட்டார்.. வாரிசுகளுக்கு இடையே சொத்து பிரச்னையில பயங்கர தகராறு.. இப்போ கோர்ட்டில வழக்கு நடக்குது.. ரெண்டு தரப்பும் வக்கீல்களுக்கு கொடுக்கிற காசும், போக்குவரத்து செலவும் கூட்டிப் பார்த்தா, இந்த சொத்தோட மதிப்பைத் தாண்டி போகும்”

“அதானே?.. தாத்தாவோட நேரடி வாரிசுகளே ஒத்த கருத்தோட இல்லைனா.. அடுத்த தலைமுறை வாரிசுங்க எப்படி ஒண்ணு சேரப் போறாங்க?”
என நான் சொல்ல, ஒரு பெருமூச்சோடு அந்த வீட்டைக் கடந்தோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன