
உயிர்க்கூடுடைக்கும்
உன் விழிகளை
நேராக சந்திக்கும்
திராணியற்றவள்
இப்பொழுது
என்னால்
தவிர்க்கப்படும் நீயேன்
இத்தனை பிரியங்களை
பேச வைக்கிறாய்
உண்மையில்
காட்சியற்ற நிலத்தின்
கூண்டுகளைத் திறந்து விட்டும்
வானேகாத பறவையிது
நீ கையளித்த வானம்
பறக்கச்சொல்லும் வேளை
வழி தொலையாது
திரும்பும் திசை புரியாது
நரம்பினால்
ஒரு கூடு செய்கிறேன்
பற்றிக்கொள்ளும் தருவில்
ஒவ்வொரு இலையும்
ஒவ்வொரு முறை அசைவதும்
சிறகு சிலிர்க்கும்
உன் ஞாபகம்
மட்டும் தான் எனக்கு….
துலங்கிக்கொள்ளும் வேளையில்
காணாது போன ஒளியுன்னைத்
தேட மனமில்லை
நீ கையளித்த சன்ன இருள்
அதெனக்குக் கரையாத கையிருப்பு..
