
ஒவ்வொரு குயிலாய்
மரிக்க மரிக்க…
காடு
நிசப்தம் அணிந்து நிற்கிறது
அருமையான பாடகி;
அரிதான பாடகி
தேனை இழைபிரித்துப்
பனியில் பாதுகாத்த குரல்
ஜமுனா ராணி
பாடல் கேளாத
இன்றைய தலைமுறை
இழந்த தலைமுறை
ராணி சம்யுக்தாவில்
‘சித்திரத்தில் பெண் எழுதி’
என்ற சோகப் பாடலில்
ஜமுனா ராணியின் குரல்
கண்ணீருக்கு உருவம் தந்திருக்கும்
மன்னாதி மன்னனில்
‘காவிரித் தாயே’ பாடலில்
அவர் விம்மல்கூட
ஒரு சங்கதி பாடியிருக்கும்
கவலை இல்லாத மனிதனில்
‘காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்’ பாடலில்
இரவின் சௌந்தர்யம்
இழைந்து இழைந்து படிந்திருக்கும்
கறுப்புப் பணத்தில்
‘பெண் பார்க்க
மாப்பிள்ளை வந்தார்’ பாடலில்
ஒருகோடிப் பெண்களின் வலியை
ஒருகுரல் ஏந்திவரும்
நம்மைவிட்டுப் போய்விட்டது
நகலெடுக்க முடியாத குரல்
50-களில் பிறந்து
60-களில் வளர்ந்தவர்கள்
பாக்கியவான்கள்
போய் வா குயிலே!
சந்திக்கும்போது
ஜானகி அம்மையாரைக்
கேட்டதாய்ச் சொல்

உண்மை தான்.
அவர் குரலை கேட்டு அனுபவிக்கும் பாக்யம் பெற்றவள் நான்.
இசைக் குயில்கள் ஒருவர் பின் ஒருவராக நம்மை விட்டு பிரிவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இறைவனிடம் நிம்மதியாக துயிலட்டும்.
நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.