
ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது வீடு திரும்ப.
“எல்லோரும் தான் ஆபிசுக்கு போறா.. இவள மாதிரி அழிச்சாட்டியம் யாரும் பண்றது இல்லை” ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரின் குரல் சிடுசிடுவென்று முணுமுணுப்பாக ஒலித்தது.
கிச்சனுக்குள் நுழைந்தவள் அங்கிருந்த நிலை கண்டு நொந்து போனாள். காலை விட்டுப் போன நிலையிலிருந்து இன்னும் கூடுதல் வேலைகளுடன் காத்திருந்தது கிச்சன்.
மாமியார் எந்த வேலையும் செய்ய மாட்டாள். எல்லாம் இவள் வந்து தான் செய்ய வேண்டும் என்று அத்தனை வேலைகளையும் அப்படியே வைத்திருப்பாள்.
பரபரவென்று பாத்திரங்களை தேய்த்து கழுவி வைத்து, கிச்சன் மேடையை சுத்தமாக்கி, மாமியாருக்கும் கணவனுக்கும் இரவு டிஃபனை சுடச்சுட செய்து கொடுத்துவிட்டு, மிச்சம் இருக்கும் வேலைகளையும் முடித்துவிட்டு படுக்க வந்த போது மணி பத்தை தாண்டி இருந்தது.
ஆடிட் கேள்விகளுக்கு சோர்வுடன் அமர்ந்து பதில் அளிக்க தொடங்குகையில் எதிரே அந்த ஓவியம் கண்ணில் பட்டது.
கல்லூரி படிப்பு முடிந்த காலகட்டத்தில் இவளது புரட்சிகரமான சிந்தனைகளால் கவரப்பட்டு இவளை விரும்பிய கிருஷ்ணகுமார் வரைந்து கொடுத்த இவள் ஓவியம். “புல்லைக் கூட வானளவு உயர வைக்கும் புரட்சி தேவதை” என்று தலைப்பிட்டு இருந்தான். இவளும் அவனை விரும்பினாள்தான். . கை கூடாத காதல்.
மாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாட்டியது போல் ராம்குமாரை கைபிடித்ததும் அவ்வளவு புரட்சி சிந்தனைகளும் காற்றில் போய், அலுவலகத்திலும் வீட்டிலும் உழைக்கும் சராசரி பெண் ஆனாள்
தன்னைப் போல எத்தனையோ பெண்கள் பிறகு முகமற்று போகிறார்கள் என்ற எண்ணம் வந்தபோது படத்தில் இருந்த தன் முகத்தை மட்டும் அழித்து வெற்றிடமாக்கிவிட்டிருந்தாள்.
காலை எழுந்தஉடன் காத்திருக்கும் வேலைகளையும், ஆபீஸ் ஆடிட் தொந்தரவுகளையும் நினைத்து பெருமூச்செறிந்தபடி படுக்கப் போனாள்.
