
வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாள் துர்கா. அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண். சொந்தமாக இரண்டு கார்கள் வீட்டில் உள்ளது. அவளிடம் ஓட்டுனர் லைசன்ஸ் உள்ளது. இருந்தாலும் ஆட்டோவில் செல்வது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதைவிட ஆட்டோவை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக அவள் மனதில் உள்ளது. பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் கௌரவம்.ஆட்டோ சிக்னலில் நின்றது. ‘அச்சம் அச்சம் இல்லை’…. என்ற பாடல் அவள் காதில் வந்து விழுந்தது. சற்றென்று எழுந்தாள் துர்கா.தன்னுடைய துப்பட்டாவினால் தன் முகத்தை மூடினாள். ஆட்டோ டிரைவரை,அண்ணே வண்டியில் இருந்து இறங்குங்கள். பின்னால் உட்காருங்கள்.” நான் ஆட்டோவை ஓட்டுகிறேன்” என்று அவரிடம் கூறினாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை திருதிருவென முழித்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி பின் சீட்டில் அமர்ந்தார் .உடனே துர்கா டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஆட்டோவை ஓட்டிக்கொண்டு கல்லூரி வாசலில் நின்றாள். ஆட்டோவிலிருந்து இறங்கி கம்பீரமாக சந்தோஷத்துடன் நடந்தாள். இந்த சமூகத்தில் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற கூட முகமூடி தேவைப்படுகிறது.
