
இரண்டு நாள் விடுமுறை என்பதால் பவித்ரா மகிழ்ச்சியில் குதித்தாள். அதிலும் கணவர் அரவிந்த் இன்று இரவே அலுவலக வேலையாக வெளியூர் செல்கிறார். சுதந்திரம் அதிகமானது போல் உணர்ந்தாள்.
கூந்தல் சிலுப்பிக் கொள்ள, காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள். காலையில் நேரம் கழித்து எழுந்து கொள்ளலாம். வேண்டுமென்றால் சமைக்கலாம். இல்லையேல் ஒரு ஆளுக்கு ஆர்டர் பண்ணிச் சாப்பிடலாம். ஓய்வாகத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். பகலில் தூங்கலாம்.
யோசித்துக் கொண்டிருந்தவளின் அலைபேசி ஒலிக்கப் பாய்ந்து எடுத்தாள் மறுமுனையில் நாத்தனார் மாதவி என்பதால்.
“அண்ணி! நல்லா இருக்கீங்களா? நான் என் பையனுக்கு ஒரு போட்டித் தேர்வுன்னு நாங்க மூணு பேரும், நாளைக்குக் காலையில் சென்னை வரோம். அண்ணா எப்படி இருக்கார்? “
” நல்லாயிருக்கியாம்மா? உங்க அண்ணா பாம்பே போய்த் திங்கள் கிழமைதான் வராரு.. “
“அதனாலென்ன அண்ணி. உங்களோட ஒரு நாள் இருந்துட்டு, ஞாயிறு இரவு கிளம்பறோம்.. “
இரண்டு நாள் விடுமுறைத் திட்டமெல்லாம் பாழ் என்றாலும், சராசரி நாத்தனார் போல இல்லாமல், அண்ணா இல்லையென்றாலும், இவளுடன் ஒரு நாள் முழுவதும் இருக்க விழையும் அந்த அன்புக்காக, நாத்தனார் குடும்பத்தை வரவேற்கத் தயாரானாள் பவித்ரா.
