சுதா கணபதி/மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்

(பேரன்பின் சுகந்தம் (முதல் தொகுப்பு) – WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு)

சுற்றமும் நட்பும் வாழ்த்தி ஆசீர்வதிக்க மணவாழ்வில் மகிழ்ச்சியோடு அடி எடுத்து வைத்த ரேகாவும், நவீனும் ஒரு நல்ல நாளில் திருவான்மியூர் பிளாட்டில் குடியேறினர்.
“சூப்பர் பிளாட். காற்று, நல்ல வெளிச்சம், இன்டீரியர் பிரமாதம்,” ரேகா குதூகலித்தாள்.
நவீன் பெருமையோடு, ”பின்னச் சும்மாவா? எல்லாம் பாத்துப் பாத்து செலக்ட் பண்ணி இருக்கேன். இனி இந்தச் சாம்ராஜ்யத்தின் ராணி நீ தான்.“ அருகில் வந்து தன்னை ஆசையோடு கட்டிப்பிடித்த கணவனைப் பார்த்துப் பெருமையில் பூரித்தாள் ரேகா.
“கூடிய சீக்கிரம் இந்த வீட்டில் ஒரு குட்டி இளவரசனோ, இளவரசியோ தவழணும்; குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போடும் பிளான் எனக்கு இல்லை,“ முகம் சிவந்த ரேகா.
“சரி, லஞ்சுக்கு அப்புறம் இளவரசன் பத்தி யோசிப்போம்.”
அம்மா அக்கறையோடு தயாரித்துக் கொடுத்திருந்த விருந்து சாப்பாட்டை ரேகா பரிமாற, “உனக்குச் சமைக்க தெரியுமா? இல்லை தினம் அம்மா வீட்டு காரியர் தானா?”
“கிண்டலா இருக்கா. நான் சுமாரா சமைப்பேன். யூ டியூப் வேற இருக்கு. அசத்திடுவேன்,” ஜாலியாகப் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர் .
“நாளைக்கு எர்லி மார்னிங் பிளைட். டார்ஜிலிங் கிளம்பறதுக்கு முன் ரிஹெர்சல் பாக்கணும் . சீக்கிரம் வா.”
“ எதுக்கு ரிஹெர்சல்?,” ரேகா குழப்பத்தோடு கேட்டாள்.
“என் அசட்டு செல்லப் பெண்டாட்டியே, ஹனிமூனுக்கு தான் ஒத்திகை”.
நவீனை அடிக்க ரேகா கை ஓங்கினாலும் அவனது குறும்பை ரசிக்கவே செய்தாள்.
டார்ஜிலிங்கில் ஒரு வாரம் போனதே தெரியவில்லை. மலைச் சாரலின் இதமான குளிர், ரம்மியமான காட்சிகள், மணக்கும் தேயிலைத் தோட்டங்கள் என்று இயற்கை அன்னையின் அணைப்பில் எதிர்காலத்தைப் பற்றிப் பல கனவுகளையும் திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர். பிறக்கப் போகும் குழந்தையின் வளர்ப்பு, படிப்பு என்று பல எதிர்பார்ப்புகளை நவீன் விவரித்தான்.
உற்சாகமாக வாழ்க்கை ஓடியது. வார நாட்களில் ஆபீஸ், சனி ஞாயிறுகளில் சினிமா, ஷாப்பிங், நண்பர்களோடு டூர் என்று ஜாலியாக இருந்தனர். நாட்கள் மாதங்களாகவும், பின் வருடங்களாகவும் வளர்ந்தன. மூன்று வருடங்கள் கடந்தும் இளவரசனோ இளவரசியோ வருவதற்கான அறிகுறிகள் இல்லை.நவீனுக்கு மிகவும் ஏமாற்றம். ரேகாவுக்கும் ஒரே தவிப்பு . வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில்களுக்குச் சென்று மனமுருக வேண்டினர்.
இனியும் காலம் கடத்தக் கூடாது என்று டாக்டரிடம் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவுகளைப் பார்த்த டாக்டர், “இரண்டு பேருக்குமே உடளவில் பிரச்சினை ஒன்றும் இல்லை. சிலருக்கு கரு உண்டாவது லேட் ஆகும். பொறுமையாக இருங்கள். முக்கியமாக, கவலைப்பட்டு பதட்டம் அடைவதை நிறுத்தி விட்டு ரிலாக்ஸ்டாக இருங்கள், ” என்று சொன்னார்.
ஆறு மாதங்கள் ஆனதும், பொறுமை இழந்த நவீன் ஐ. வி. எப்சிகிச்சையை மேற்கொள்ள முடிவெடுத்தான். தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் கணவனின் பிடிவாத குணம் தெரிந்த ரேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை. நேரமும் பணமும் செலவழிந்தனவே தவிர, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முயற்சிகள் பலனளிக்கவில்லை.
உடலும், மனமும் நொந்த ரேகா நவீனிடம் குழந்தையைத் தத்தெடுப்பதைப் பற்றிப் பேச, அவன் “நோ நோ எனக்கு என் பிரதிபிம்பமான குழந்தை தான் வேண்டும்“ – தீர்மானமாகச் சொல்லி விட்டான்.
உற்சாகமும், சந்தோஷமும் நவீனிடமிருந்து விடைபெற்றன. சலிப்பையும் எரிச்சலையும் காட்டத் துவங்கினான். சமயம் பார்த்து நவீனின் பெற்றோரும், அக்காவும் மறுமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். ரேகாவுக்கும் இதுபற்றித் தெரிந்தாலும், நவீன் இதற்கு ஒத்துக்கொள்ளமாட்டான் என்று திடமாக நம்பினாள்.
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பதற்கு ஏற்பக் குழந்தை வேண்டும் என்ற தீவிர ஆசையால் மனசாட்சியை அடகு வைத்து விட்டு டிவோர்ஸ், மறு மணம் பற்றி நவீன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, “முக்கியமான விஷயமாக உன் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் – கிளம்பு“ என்று ஆரம்பித்தான். ஒரு பூகம்பம் வெடிக்கப் போவது தெரியாமல் ரேகா கிளம்பினாள்.
வழியில், “புது பிராப்பர்டி வாங்குவதைப்பத்தி அப்பாவோடு டிஸ்கஸ் பண்ணப்போறீங்களா ? அம்மாவை லஞ்ச் ரெடி பண்ணச் சொல்லவா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். கார் ஓட்டும்போது கொஞ்சம் தொண, தொணக்காமல் வாயேன்.”
இறுக்கமான முகத்தோட நவீன் காரை ஓட்டினான். கல்யாணமான புதுசில் நவீன் தன்னைக் கொஞ்சிக்கொண்டே வண்டி ஒட்டியது நினைவிற்கு வர, ரேகா பொங்கி வந்த அழுகையை அடக்கினாள்.
சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு, சற்றே குற்ற உணர்ச்சியோடு ஆனால் பிடிவாதமாக ரேகாவை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ளும் முடிவை நவீன் சொன்னான்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குரல் தழதழக்க “நவீன் , இப்படியொரு முடிவெடுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது?” – பரிதாபமாக மண்றாடினர் .
ஒரு நிமிடம் நிலைகுலைந்து போன ரேகா சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
”நவீன் இதுதான் உங்கள் தீர்மானம் என்றால் எனக்குச் சம்மதம். அப்பா அம்மாவை ஏன் நோக அடிக்கிறீர்கள்? என்னிடமே நேரிடையாகச் சொல்லி இருக்கலாமே?”
இவ்வளவு சுலபமாக ரேகா ஒத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்காத நவீன் நிம்மதியோடு, “நாம வீட்டுக்குக் கிளம்பலாமா ? இல்லை இங்கு இருந்துவிட்டு, ஈவ்னிங் வரயா? “
பொங்கி எழுந்த ரேகா, உறுதியாகவும், தெளிவாகவும் “இனி, நாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வளவு நாள் நாம வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது. உங்கள்மீது நான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவிடு பொடி ஆக்கி விட்டீர்கள். தயவு செய்து என் டிரஸ், ஆபீஸ் பேப்பர்ஸ், சர்டிபிகேட்டுகள், கல்யாணத்தின்போது அப்பா கொடுத்த நகைகள் எல்லாவற்றையும் இங்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். ‘மியுட்சுவல் கன்சென்ட்‘ கீழ் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணலாம். லீகல் பார்மாலிடீஸ்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். நீங்கக் கிளம்பலாம். குட் பை. “
ஒரு நிமிடம் தயங்கிய நவீன், “நான் வரேன்” என்று பொதுவாகச் சொல்லி விட்டுக் கிளம்பினான்.
“என்னம்மா; இப்படி எடுத்தேன், கவுத்தேன் என்று பேசிட்டே. இது உன் லைப் சம்பந்தப் பட்டது. கொஞ்சம் நிதானமா யோசிம்மா.“
கலங்கிய பெற்றோரிடம், “எங்க இரண்டு பேரிடமும் உடல் ரீதியாகப் பிரச்சினை இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் இப்படியொரு முடிவு பண்ணிய நவீனோடு இனிமேல் வாழ முடியாது. சுய கெளரவத்தோடு என்னைக் காப்பாற்றிக்கொள்ள என்னால் முடியும். உங்கள் சப்போர்ட் இருந்தால் போதும்.”
அக்கினி சாட்சியோடு பிணைக்கப்பட்ட உறவு குடும்ப கோர்ட் நீதிபதி முன்னிலையில் முறிக்கப்பட்டது. கையோடு கோயம்புத்தூரில் உள்ள வங்கி கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்ட ரேகா பெற்றோரோடு கிளம்பி விட்டாள்.
நவீன் பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம் மனதிற்கு கடிவாளம் போட்டு அடக்கி விடுவாள். நாளடைவில் கோவை வாழ்க்கை பழகி, நவீனும், சென்னை நினைவுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
பாங்கில் ஆடிட்டிங் சமயம். ரேகாவின் அம்மா – சரசுவுக்கு எலும்பு முறிவு. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த சரசுவை வயதான அப்பா கவனித்துக் கொள்ளுவது கஷ்டம். ரேகா மனேஜரிடம் லீவு கேட்டாள்.
“ஆடிட் முடியும் வரை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு வந்து விடுங்கள். ” மேனேஜர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
நம்பகமான பணிப்பெண் கிடைக்கும் வரை நிலமையை எப்படிச் சமாளிப்பது என்று குழம்பிய ரேகாவிடம் உதவி மேனேஜர் விவேக் “உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நீங்கள் பேங்க் வேலை முடிந்து வீடு போகும் வரை, என் அம்மாவை உங்கள் அம்மாவுக்கு உதவியாக இருக்கச் சொல்லுகிறேன்.“
குழந்தை வினுவிற்கு ஒரு வயதானபோது விவேக்கின் மனைவி மூளைக் காய்ச்சலுக்கு பலியானது, சீதா மகனுடன் இருந்து வினுவைப் பராமரிப்பது பற்றிப் பேங்க் பிரண்ட்ஸ் சொல்லித் தெரியுமே தவிர விவேக்கிடம் அதிக பழக்கம் இல்லை நன்றிப் பெருக்கோடு “ரொம்ப தேங்க்ஸ். ஆனால் உங்கள் பெண்,” என்று இழுக்க;
“அது பெரிய பிராப்ளம் இல்லை. ஆட்டோமேனை ஸ்கூலிலிருந்து உங்கள் வீட்டில் ட்ராப் செய்யச் சொல்லிவிடுகிறேன். நீங்க வீட்டிற்கு போனதும், அம்மாவும், வினுவும் திரும்பி வரட்டும்.
ஒரு வாரத்தில் ஆடிட் முடிந்து, உதவிக்கு ஆளும் கிடைக்க, ரேகா நிம்மதி அடைந்தாள். விரைவில் சரசுவும், சீதாவும் நன்றாகப் பழகி விட்டனர்.
பேங்க் காண்டீனில் காபி குடித்துக் கொண்டிருந்த ரேகாவின் எதிரில் உட்கர்ந்த விவேக் பீடிகை எதுவும் இல்லாமல், “உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.”
திடுக்கிட்ட ரேகாவிடம், “ரிலாக்ஸ் ; நான் உங்கள்மீது பரிதாபப்பட்டோ, தனிமையை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடோ என் மகளுக்கு அம்மா வேண்டும் என்றோ, இப்படிக் கேட்கவில்லை. நமக்குள் நல்ல நட்பும் புரிதலும் இருக்கு. இருவருமே மணவாழ்க்கையில் காயப்பட்டிருக்கிறோம். பருவ கிளர்ச்சியில் ஏற்படும் காதலைக் கடந்து பக்குவமான மன நிலையில் இருக்கிறோம். உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் நோ என்று சொன்னாலும் நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம். யோசித்து சொல்லுங்கள்.“ ஒரே மூச்சில் பேசி விட்டுச் சகஜமாக எழுந்த விவேக்கை மதிப்போடும் மரியாதையோடும் ரேகா பார்த்தாள்.
நீண்ட யோசனைக்குப் பிறகு விட்டு விவேக்கோடு இணைய முடிவெடுத்தாள். மருதமலை முருகன் கோவிலில் திருமணம்; பாங்கு நண்பர்களுக்கு லஞ்ச் என்று ஆடம்பரமின்றி ஆரம்பித்து அமைதியான நீரோடையாக வாழ்க்கை ஓடியது. ரேகாவின் பெற்றோருக்கும், சீதாவுக்கும் திருப்தி. வினுவும், ரேகாவோடு ஒட்டிக்கொண்டு விட எல்லோருக்கும் நிம்மதி.
உறவினர் கல்யாணத்திற்கு சென்னை வந்த விவேக்கும், ரேகாவும் கோவை திரும்ப விமான நிலையதிற்கு வந்தனர். கிருஸ்மஸ் சீசன் என்பதால் வழக்கத்தைவிட அதிக கூட்டம். காலைப் பரபரப்பில் எல்லோரும் செக் இன், சுங்கப் பரிசோதனை, காபி ஷாப் என்று அலைந்து கொண்டிருந்தார்கள்.
“அப்பா நாம எந்தப் பிளேன்ல ஏறணும்,” குஷியாக வினு கேட்க “இருடா செல்லம். அம்மா வந்த அப்புறம் போலாம். சமத்தா வேடிக்கை பாத்துண்டு இரு.”
பக்கத்தில் அலங்காரமாக வைக்கப் பட்டு இருந்த கிருஸ்மஸ் மரத்தைப் பார்க்க ஓடிய வினு, எதிரில் வந்து கொண்டிருந்த நவீனின் டிராலிப் பெட்டிமீது இடித்துக் கொள்ள அவளைக் கீழே விழாமல் நவீன் பிடித்தான். “வினு “என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த விவேக், “ரொம்ப தேங்க்ஸ். இவ எப்பவும் இப்படித் தான். ஒரு இடத்தில நிற்க மாட்டா. அங்கிளுக்கு சாரி சொல்லு.“
“பரவா இல்லை. சின்னப் பொண் தானே; கிருஸ்மஸ் ட்ரீ பாத்த குஷில என்னைக் கவனிக்கல்லை.”
“ அங்கிள், அங்கப் பாருங்க, அம்மா தம்பிப் பாப்பாவோட வரா,” வினு கத்தினாள்.
சற்று தொலைவில் இருந்த லாக்டேஷன் ரூமிலிருந்து (தாய்ப்பால் கொடுக்கும் அறை) குழந்தையை அணைத்துக்கொண்டு வெளியே வந்து கொண்டு இருந்தாள் ரேகா.
“நான் பெங்களூர் போறேன். போர்டிங்கால் வந்தாச்சு. கேட் 30 க்கு போகனும். என்ஜாய் யுவர் பிளைட் சார். பை ஸ்வீட் கேர்ள்,“ என்றபடி ரேகாவின் பார்வையில் படாமல் வேகமாக நடந்தான்.
ரேகாவின் மறுமணத்தைப் பற்றிக் குடும்ப நண்பர்மூலம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான் நவீன். மணமுறிவுக்கு பின் ஏற்பட்ட விபத்தில் தந்தையாகும் பாக்கியத்தை இழந்து, மறுமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தவிப்பதை பகிர்ந்து கொள்ள நவீனுக்கு மனமில்லை. ரேகாவின் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆண்டவனை மனமாரப் பிரார்த்திப்பதே அவளை நோகடித்த பாவத்திற்கு செய்யும் பரிகாரம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு பெங்களூர் விமானத்தை நோக்கி வேகமாக நடந்தான்.


2 Comments on “சுதா கணபதி/மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்”

  1. “மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்” – திருமதி சுதா கணபதி
    கதையின் தலைப்பே கதையின் கருவை கூறும் ஒரு வரியில் – திருமணமாகி, சந்தோஷமாக வாழும் ரேகா, நவீன; திருமணமாகி சில வருடங்களாக, குழந்தையை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். குழந்தையின்மை என்பது நம் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கும், ஒரு பெண்ணுக்கு; எவ்வளவு நெருக்கடியை கொடுக்கும் என்பதை கதை அழகாக கூறுகிறது. இறுதியில் விவாகரத்து ஆக, மாறிய பாதைகளில் பயணிக்கும் அவர்களுடைய நிலை என்ன? முடிவை கூறினால் படிக்க சுவாரசியமாக இருக்காது.. அருமையான எதார்த்தமான காலத்திற்கு ஏற்ற ஒரு முடிவை கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன