எஸ்.எல். நாணு/முகம்

பிரபல தொழிலதிபர் அஷ்வினின் பிறந்தநாள் விழா லீலா பேலஸில் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.
சென்னை மாநகரத்தின் பல முக்கியஸ்தர்கள் அங்குக் கூடியிருந்தார்கள்.
ஒவ்வொருவராக மேடையேறி அஷ்வினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மைக்கில் அவனைப் புகழ்ந்து பேசினார்கள்.
“மிஸஸ் அஷ்வின்”
இறுதியாக அஷ்வினின் மனைவி பூரணியைப் பேச அழைக்கப்பட்டாள்.
பூரணி மேடையேறி மைக்கைப் பிடித்தாள்
“எங்களுக்குக் கல்யாணமானதுலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் இந்தப் பரிசை என் கணவருக்குக் கொடுக்கணும்னு நினைப்பேன்… ஆனா முடியாமப் போச்சு.. ஆனா இன்னிக்கு உங்க எல்லார் முன்னாலயும் கொடுக்கறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன்.. இதோ அந்தப் பரிசு…”
சபையோரை ஒருமுறை பார்த்த பூரணி அந்த ஓவியத்தை எல்லார் பார்வையிலும் படும்படி மேடையில் பிரதானமான இடத்தில் வைத்தாள்.
இளம் பெண்ணின் ஓவியம்… செங்கதிர்களுக்கு மத்தியில் மேலைநாட்டு பாணியில் நீண்ட கோட் அணிந்து வீசும் தென்றலை சுதந்திரமாக அனுபவிப்பதுபோல்..
ஆனால் அந்தப் பெண்ணின் முகம் ஏன் வரையப்படவில்லை..
பூரணியே மெதுவாகச் சொன்னாள்…
“ஏன்னா.. இப்ப இதுதான் நான்… என் கல்யாணத்துக்கு அப்புறம் நாட்டியக் கலைஞர் அப்படிங்கற என் முகம், ஓவியர் அப்படிங்கற என் முகம், எழுத்தாளர் அப்படிங்கற என் முகம், கவிஞர் அப்படிங்கற என் முகம், பேச்சாளர் அப்படிங்கற என் முகம்.. இப்படிப்பட்ட என்னுடைய பல முகங்கள்… கட்டாயப்படுத்தப்பட்டதுனால காணாமப் போச்சு.. இன்னிக்கு இந்த உலகத்துக்கு நான் பூரணியா அறியப்படலை.. மிஸஸ் அஷ்வினாத்தான் அறியப்படறேன்… அவ்வளவுதான் அவர் அனுமதிச்சிருக்கார்.. ஆனா இதுக்குமேல எனக்கு என் முகங்களை மறைச்சு வாழப் பிடிக்கலை.. ஒரே சபோகேட்டிங்கா இருக்கு.. அதனால இனிமே நான் மிஸஸ் அஷ்வின் இல்லை.. மிஸஸ் பூரணி.. மறுபடியும் சொல்றேன்.. மிஸஸ் பூரணி”
மேடையைவிட்டு கம்பீரமாக இறங்கினாள் பூரணி..
மேடையிலிருந்த ஓவியத்தில் இப்போது எல்லாருக்கும் பூரணியின் முகம் தெரிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன