
“கான்பரன்ஸ் முடிஞ்ச உடனே எனக்குத் தனியா பேச நிகிலா மேடம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” பக்கத்தில் இருந்த சீனியர் ரிப்போர்டர் விமலாவிடம் பெருமையாகச் சொன்னாள் சுசரிதா. பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு அடுத்த கான்பிரன்சுக்கு தி பார்க் ஹோட்டலுக்குப் போவதற்கு வேகமாகக் கிளம்பிய விமலா சுசரிதா பக்கம் திரும்பி ஒரு சிரிப்பு சிரித்தார். ‘ஓகே அனுபவி’ என்று சொல்லியபடி, தன் ஷிபான் சேலையை சரி செய்து கொண்டு கிளம்பியவரிடம், “ஏன் மேடம் ரொம்ப அலட்டுவாங்களா” என்று கேட்டாள் சுசி. ‘கொஞ்சம் கர்வி’ சிரித்துக் கொண்டே பறந்தாள் விமலா. சுசரிதா அந்தப் பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ரொம்பவும் ஆசைப்பட்டு ஜர்னலிசம் படித்தாள். தன்னுடைய எழுத்துக்கள்மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய ஆசை. இந்த அசைன்மென்ட்டைக் கொடுக்கும்பொழுது எடிட்டர் சொன்னார் ‘நிகிலா மேடம் சின்ன வயதில் பெரிய சாதனைகள் பண்ணினவங்க. 30 வயதுக்குள்ளையே அவங்க கம்பெனிக்கு ஒரு மாதத்திற்கு 600 கோடிக்கு மேல் வியாபாரத்தை முடித்துக் கொடுக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவர். ரொம்ப வேகமாக வேலைகள் செய்பவர். அவரை நேர்காணல் செய்து வந்தீர்கள் என்றால் வரும் இதழில் அதைக் கவர் ஸ்டோரியாகப் பிரசுரிக்கலாம்” என்றார்.சுசரிதாவுக்கு அது ரொம்பவும் திரில்லிங்காக இருந்தது. அதற்காக இந்தப் பிரஸ்மீட்டுக்கு வந்து முன்னதாக நிகிலா மேடமின் பிஏ விடம் தனியான நேர்காணலுக்கு அப்பாயின்மென்ட் கேட்டிருந்தாள். “இந்தப் பிரஸ்மீட் முடிந்ததும் சரியாகப் பத்து நிமிடங்கள் பேட்டிக்காக ஒதுக்கி இருக்கிறார்” என்று அந்த பிஏ சொன்னார். அதோடு “மேடம் நேரத்தில் ரொம்பவும் கரெக்டா இருப்பாங்க. கேள்விகளை எல்லாம் சரியாகத் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள்” என்றும் சொல்லி இருந்தார். ரொம்பவும் ஆர்வமாகச் சுசரிதா தயாராகி இருக்கும்பொழுது போகிற போக்கில் இப்படியொரு குண்டைப் போட்டு விட்டாள் அந்த விமலா. தான் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள் சுசரிதா. மொத்தம் பத்து கேள்விகள். மேடம் ஒவ்வொரு நிமிடத்தில் வேக வேகமாகப் பதில் சொல்வார் என்று வைத்துக் கொண்டால் கூட அதை எல்லாம் தொகுத்து சிறப்பாக ஒரு கவர் ஸ்டோரி செய்து விட வேண்டும் என்பதுதான் சுசரிதாவின் எண்ணம்.
‘மேடமின் சாதனைகளைப் பற்றி எல்லோரும் எழுதுவார்கள், நாம் அவருடைய பர்சனலான விஷயத்தைப் பற்றி எழுதினால் சிறப்பாக இருக்கும்’ என்பதுதான் சுசரிதாவின் எண்ணம். அதற்கு ஏற்பத் தான் தயாரித்திருந்த கேள்விகளை ஒருதரம் பார்த்துக் கொண்டாள். ‘மேடம் என்ன உணவை விரும்பிச் சாப்பிடுவார், அவருடைய கணவர் குழந்தைபற்றிய விவரம், அவர் எந்தப் பியூட்டி பார்லருக்கு செல்வார், அவர் ஏன் எப்போதும் கழுத்தில் ஒரு ஸ்கார்பும், நீளமான ஓவர் கோட்டும் அணிந்திருக்கிறார், ஒரு பெண் என்பதால் இப்படி முன்னுக்கு வருவதில் கஷ்டங்கள் இருந்தனவா, குடும்பத்தில் அவருடைய தொழிலுக்கு எப்படி ஒத்துழைப்பு கிடைக்கிறது…’ போன்ற ரீதியில் கேள்விகள் இருந்தன. “மேடம் கூப்பிடுறாங்க” அவசரமாக வந்து அழைத்தார் மேடமின் பி ஏ. எழுந்து வேகமாக ஓடிச் சென்றாள் சுசரிதா. பிரஸ்மீட் நடந்த கான்பிரன்ஸ் ஹாலின் பக்கத்தில் இருந்த ஒரு அறையில் சோபாவில் கால்மீது கால் போட்டபடி கம்பீரமாக அமர்ந்திருந்தார் நிகிலா மேடம். சுசரிதா நுழைந்ததும்” ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று அவர் சொன்னவுடன் பவ்யமாக அந்த எதிர்சோஃபாவில் நுனியில் அமர்ந்து கொண்டாள் சுசரிதா. எ”ஸ் உங்க பத்திரிகை பத்தி எல்லாம் படிச்சேன். ரொம்ப சந்தோஷம். நீங்கக் கேக்கறதுக்கு முன்னால ஒரு விஷயம். என்ன உணவு சாப்பிடுவீங்க, எந்தப் பியூட்டி பார்லர் போறீங்க, ஏன் ஸ்கார்ப் போட்டு இருக்கீங்க, உங்க கணவரைப் பத்தி சொல்லுங்க, குழந்தையப் பத்தி சொல்லுங்க, நீங்க ஒரு பெண்ணுங்கறதுனால உங்களுக்குப் பிசினஸ்ல ஜெயிக்கிறது கஷ்டமா இருந்ததா…. இந்த மாதிரி நான்சென்ஸ் கேள்வியெல்லாம் கேட்காதீங்க. என்ன சாதிச்சாலும் ஒரு பெண்ணுன்னா இப்படித்தானே கேப்பீங்க. ஐ டோன்ட் லைக் இட். பிகாஸ் ஒரு வேலை, தொழில் என்று வந்ததுக்கப்புறம் ஆண் பெண் அப்படின்னு பிரிச்சு பார்க்கிறது எனக்குப் பிடிக்காது. ஐ அம் எ பெர்ஃபார்மர். எனக்கு ஜெயிக்க மட்டும் தான் பிடிக்கும்….” கடகடவென்று அதிகாரமாய்ப்ப் பெசிய நிகிலா மேடமைப் பார்த்துத் திகைப்பில் உறைந்து போயிருந்தாள் சுசரிதா. திணறிக் கொண்டிருக்கும் சுசரிதாவை உற்றுப் பார்த்தார் நிகிலா. தன் பிஏ பக்கம் திரும்பி, “அவங்க வச்சிருக்கும் கேள்விகள எல்லாம் வாங்கிக்குங்க. கார்ல போகும்போது அதற்கெல்லாம் பதில் சொல்லி வாய்ஸ் நோட் அனுப்பலாம்”என்றபடி சுசரிதா பக்கம் திரும்பி, “ஓகே நைஸ் மீட்டிங் யூ” என்ரபடி எழுந்தர்.. கம்பீரமாக நின்று தன்னிடம் கைக்குலுக்கி விட்டுச் சென்ற நிகிலா மேடம் இப்பொழுது சுசரிதாவுக்கு ஒரு பெண்ணாகத் தெரியவில்லை. தான் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னுதாரணமாகத் தெரிந்தார்.
