
ஆடி மாசம் பொறந்த பின்னும்
ஆடி வரலாமா.?
ஓடிவர வேணுமடி காவிரியே ஆமா.!
மூடி உன்னை வைத்தாலும்..
மோதி வாடியம்மா.!!
முக்கம்பு கல்லணைக்கு
ஓடி வாடி அம்மா.!
கூடுதுறை பவானி வந்து கொஞ்சம் பாரு!
ஆடி யிலே அம்மாமண்டபம்
படித்துறையைக் கேளு!
கூடிவரும் பெண்கள் முகம்
வாடுவதைப் பாரு.!
கொஞ்சி வரும் காவிரியே
பொங்கிப் பெருகி ஓடு..!
தஞ்சையிலே திருச்சியிலே
மணல் ஓடுது பாரு..!
எங்களுக்கும் தாய்தானே
காவிரி ஆறு.!
ஒருதாயின் மக்களுக்குள்
காவிரித் தகராறு
தீருகின்ற நாள்தானே..
திருநாளெனக் கூறு.!
கொட்டு கொட்டு கொட்டு யென
கொட்ட வேணும் மழையே..
கடைக்கோடி மடைவரைக்கும்
பாய்ந்து வருக நதியே.!
