
“சார், போஸ்ட்”
இப்படிக் கூப்பிட்டுக் கடிதங்கள் கொடுத்த நாட்களை எண்ணியபடி, டவுனிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த கள்ளிப்பட்டி கிராமத்துக்குத் தன் பழைய சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் போஸ்ட்மேன் தருமு.
மண் தெருவை ஒட்டிச் சுமார் ஒரு மைல் தூரத்துக்குப் பசுமையான மரங்களும், வாழைத் தோட்டங்களும், வயல்களும் சூழ இருந்தது அந்தப் பழங்கால மச்சு வீடு. தொண்ணூறைத் தாண்டியும், தனியாகத் தான் இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் அங்கு வசிக்கும் சிவகாமிப் பாட்டிக்கு, காலையும் மாலையும் வந்து போகும் கண்ணம்மா மட்டுமே துணை.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கடிதம் டெலிவரி, அதுவும் சிவகாமிப் பாட்டிக்கு! அதில் உள்ள விபரத்தை உடனே பாட்டிக்குச் சொல்லியாக வேண்டும்; தருமுவுக்கு மனம் படபடத்தது.
கையை நெற்றியின் மேல் வைத்து, சூரிய ஒளியை மறைத்தபடி, எப்போதாவது வரும் தருமுவைப் பார்த்துச் சிரிக்கும் பாட்டி.
“இன்னிக்கும் உனக்கு இல்ல பாட்டி. மிலிட்டரில இருக்கிற உன் பேரன் லெட்டர் போடமாட்டானா?”
“அவனுக்கு எங்கே என் ஞாபகம்? அவன் தேசத்தைக் காப்பாத்துவானா இல்ல இந்தக் கிழவிக்குக் காயிதம் எழுதுவானா?” என்று பொக்கை வாய் திறந்து சிரிக்கும்.
அன்று வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, வெற்றிலை, பாக்கு இடித்துக்கொண்டிருந்தது. தருமுவைப் பார்த்து, “எனக்கா காயிதம்?” என்றது. குரலில் வியப்பு.
சைக்கிளிலிருந்து இறங்கி, கையிலிருந்த இந்திய அரசு கவரைக் கையில் எடுத்து, ‘உன் பேருக்குத்தான் வந்திருக்குது” என்ற தருமுவையும், கவரையும் இரண்டு நிமிடம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது பாட்டி.
“யப்பா, கண்ணா, போயிட்டயாப்பா?” என்று ‘ஓ’வெனக் குரல் கொடுத்து அப்படியே தரையில் விழுந்து, அடங்கியே போனது.
‘என்கிட்டயிருந்து ஏதும் லெட்டர் வராதவரைக்கும், நான் நல்லா இருக்கேன்னு நெனச்சுக்க பாட்டி’ என்று பாட்டியிடம் சொல்லியிருந்தான் பேரன் என்பதை தருமு அறிந்திருக்கவில்லை.
“ஐயோ பாட்டி என்ன ஆச்சு?”
நடந்த போரில் தைரியமாகவும், திறமையாகவும் செயல்பட்டதால், சிறந்த வீரனுக்கான ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்ற நல்ல செய்தியைச் சொல்ல வந்த தருமு விக்கித்து நின்றான்.
