ஆசீர்வாதம்/சாந்தி சந்திரசேகரன்

“நம்ம வீட்டுலயும் ஸ்டீபன் வீடு மாதிரி குடில் வைக்க, கிறிஸ்துமஸ் மரம் வாங்கித் தாரீங்களா அப்பா?” எதையுமே கேட்காத ராதா, கந்தசாமியிடம் ஆசையாய் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை.

“ஏங்க தீபாவளி பண்டிகை கொண்டாடவே எவ்ளோ சிரமப்பட்டோம். அவகிட்ட செலவச் சொல்லிப் புரிய வைக்காம இப்பிடி தலையாட்டிட்டீங்க. அது நம்ம சாமி பண்டிகை இல்லனு சொல்லவேண்டியது தான?” வள்ளி.

“குழந்தைகிட்ட போய் ‘நம்ம சாமி, வேற சாமி’ன்னு எப்பிடி வள்ளி பேச முடியும். பாத்துக்கலாம் விடு.” மனதில் பயம் இருந்தாலும் சமாளிப்பாகச் சொல்லிவைத்தார் கந்தசாமி.

மறுநாள் “கந்தசாமி.. நம்ம கோயில்ல கொஞ்சம் உளவார பணி பண்ணோம். வெட்டின மரத்தை அப்புறப்படுத்தறியா?” என்று நண்பன் ரகுநாதன் கூப்பிட, கிறிஸ்துமஸ் மரம் போலவே அங்கிருந்த தேவதாரு மரத்தைப் பார்த்ததும் பரவசத்தில் ஆழ்ந்தார் கந்தசாமி.

அதை ஆசையாசையாய் வீட்டில் உள்ள மகளிடம் காட்ட தன் மிதிவண்டியில் வைத்துச் சிட்டாய் பறந்தவரை ஆசீர்வாதம் செய்தது போல இருந்தன அப்போது ஒலித்த கோவில் மணியும், தூரத்தில் ஒலித்த மாதா கோவில் மணியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன