
“என்னங்க பலமான யோசனை அப்படி ? நானும் பார்க்கிறேன். ரொம்ப நேரமா மோட்டு வளையைப் பார்த்துத் தாடையில் கை வைச்சுக்கிட்டு அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ” அருகில் வந்து கணவன் பத்மநாபனைக் கேட்டாள் மனைவி பத்மா.
அண்ணனும் அண்ணியும் “எண்பது முடியுதுன்னு ஆயுஷ்ஹோமம் பண்ணலாம்னு இருக்கோம். நம் குடும்ப உறுப்பினர்களை மட்டும் தான் அழைச்சு இருக்கேன். பெரிதா கொண்டாட விருப்பமில்லை தம்பி. எதுவும் பரிசு வாங்கிக்கிட்டு வராமல் பிள்ளைகளோடு காலையில் சீக்கிரமே வந்து விடுன்னு” பாசமா அழைப்பு விடுத்தாங்க.
“அதுக்காக வெறும் கையோடு எப்படிப் போவதுன்னு தான் யோசனை பத்மா”.
“உங்கண்ணன் எப்பவும் தனக்கு வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும். நான் குரங்கு மாதிரின்னு அடிக்கடி சொல்வாரே நினைவிருக்கா? . நம் தோட்டத்து வாழை சரியான நேரத்தில் குலை தள்ளி இருக்கு பாருங்க. அதை அப்படியே எடுத்துப் போவோம். அண்ணன் சந்தோஷமா சாப்பிட்டது போக மிச்சத்தை வெற்றிலை பாக்கில் வைச்சும் கொடுக்கலாம்” என்றதும்,
” நீயே என் மதியூக மந்திரி “எனப் பாராட்டியபடி சிரித்தான் .

அருமையான சிறு கதை. இந்த மாதிரி யோசனை எல்லாம் சொல்ல தான் ஒரு துணை வேண்டும் என்பது. கரந்தை இந்துக்கு என் வாழ்த்துக்கள். இந்துவின் பணி சிறக்க வேண்டும். அடிக்கடி இது போல சிறுகதை எழுத வேண்டும் என்பது என் விருப்பம். என்றும் அன்புடன் அ ராமதாஸ்