
“இங்கே வாத்திவ்யா ! இது என்ன ? இப்படி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு காலேஜுக்கு போற?”
ஊரிலிருந்து காலையில் வந்திருக்கும் சொர்ணம் பாட்டி தான் பேத்தியைப் பார்த்துச் சொன்னாள்.
திவ்யா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வெளியேற, ரேணு அம்மாவைப் பார்த்து, ” அம்மா! நீ எந்தக் காலத்துலம்மா இருக்க? இப்ப யாரு தலை பின்னல் எல்லாம் போட்டுக் கொண்டு போறாங்க? “
“எவ்வளவு நீளத் தலைமுடி திவ்யாக்கு? நல்ல சதும்ப தேங்காய் எண்ணெயைத் தடவி, படிய வாரி அழகா பின்னல் போட்டுட்டு போனா எவ்வளவு நல்லா இருக்கும்போது?” பாட்டி அங்கலாய்த்தாள்.
ரேணுவுக்கு அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டது. அம்மாவின் தோளை அன்பாகப் பற்றி, “அம்மா! காலம் மாறிப் போச்சுமா !புரிஞ்சுக்கோ!” என்றாள். அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது திவ்யாவின் தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டியிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்ததும் அதை வெகுசாதாரணமாகக் கழற்றி போட்டதும், பளபளவென்று மின்னிய மொட்டைத் தலையைக் கண்டு பாட்டி அதிர்ந்து போனாள்.
“என்ன கண்றாவிடீ இது? காத்தால தலைய விரிச்சு போட்டுட்டு போனா. இப்ப மொட்டை அடிச்சுகிட்டு வந்து நிக்குறா. என்னடி நடக்கிறது இங்கே?”
பாட்டிக்கு உடம்பு எல்லாம் பதறியது.
திவ்யா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே உள்ளே போக, ரேணு தான் அம்மாவைக் கைப்பற்றிச் சோபாவில் உட்கார வைத்து மெதுவாகச் சொன்னாள், ” திவ்யாக்கு நல்ல அடர்த்தியான நீளத் தலைமுடி இருக்குன்னு நீ தானே சொன்ன ? அதை அவ இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை கேன்சர் நோயாளிகள் இருக்காங்க இல்லையா? அவங்களுக்கு தானமாக அளித்து விடுகிறாள். பாவம்மா! கீமோ தெரபி பண்ணி பண்ணி அவங்களுக்கு தலை முடியெல்லாம் உதிர்ந்து போய் ரொம்ப மோசமா இருப்பாங்க. இந்த மாதிரித் தானம் செய்றவங்க தலை முடியை வைத்து அவங்களுக்கு ஏத்த மாதிரி விக் பண்ணி கொடுக்கிறாங்க ஆஸ்பத்திரியில.” காலையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போனபோது எப்படி உல்லாசமாகப் போனாளோ, அந்த உல்லாசம் சற்றளவும் குறையாமல் தலைமுடி தானம் கொடுத்துவிட்டு வந்த போதும் திவ்யா இருப்பதை பாட்டி வியப்போடு ஒரு மோனநிலையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
225 words
